எங்கள் கல்லூரி பாடகர் குழுத் தலைவர், குழுவை வழிநடத்துவதோடு, எங்களோடு இணைந்து பியானோவிலும் வாசிப்பார், அற்புதமாக இவ்விரு பொறுப்பையும் ஒரே நேரத்தில் கையாளுவார். ஓர் இசை நிகழ்ச்சி முடிவுற்ற போது, அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டார், எனவே நான் அவரை விசாரித்தேன், “இதற்கு முன்பு, இவ்வாறு செய்வதற்கு நேர்ந்ததேயில்லை” என்றார். மேலும், “இந்த பியானோவின் சுருதி இசையோடு பொருந்திவரவில்லை, ஆதலால் நான் இந்த முழு நிகழ்ச்சியிலும் இரண்டு பியானோக்களை பயன்படுத்தவேண்டியதாயிற்று, என்னுடைய இடது கை ஒரு பியானோவிலும், வலது கை மற்றொரு பியானோவிலும் வாசித்தன!” என்றார். அவரின் வியத்தகு திறமையை நினைத்து அதிசயித்தேன், மனிதனுக்குள் இத்தகைய திறமைகளைத் தந்த தேவனின் அற்புத வல்லமையை நினைத்து வியந்தேன்.

“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14) என இச்சங்கீதத்தை எழுதின தாவீது அரசன் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்துகின்றார். மனிதனின் திறமைகளையும், இயற்கையின் அற்புதங்களையும் நான் பார்க்கும் போது, படைப்புகளின் அதிசயம், என்னை படைப்பாளியின் மகத்துவத்தை நினைத்து வியக்கச் செய்கின்றது.

ஒரு நாள் நாம் தேவனுடைய சமுகத்தில் நிற்கும் போது, வெவ்வேறு தலைமுறையிலிருந்தும் வந்த ஜனங்கள், “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாய் இருக்கிறது” (வெளி.4:11) என்பார்கள். அவர் நமக்குத் தந்துள்ள வியத்தகு திறமைகளும், அவர் படைத்த அழகிய உலகமும், அவரே ஆராதிக்கத் தகுந்தவர் எனக் காட்டுகின்றன.