ஒரு புரட்சியைத் துவக்கி விட தேவையானது என்ன? துப்பாக்கிகளா? வெடிகுண்டுகளா? கொரிலா யுத்தமா? 1980 ஆம் ஆண்டு இறுதியில், எஸ்டோனியா நாடு பாடல்களால் நிரம்பியது. பல ஆண்டுகளாக சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த அந்நாட்டு மக்கள் சுமைகளைத் தாங்கி வந்தனர், இப்பொழுது, தேசபக்தி பாடல்களை பாடுவதன் மூலம் ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடல்கள் வழியாக “பாடல் வழி புரட்சி” பிறந்தது, இதுவே, 1991 ஆம் ஆண்டில் எஸ்டோனியா சுதந்திரம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.

“இது ஒரு வன்முறையான ஆக்கிரமிப்பைத் தூக்கி எறிந்த ஓர் அஹிம்சை வழிபுரட்சி” என இந்த இயக்கத்தைக் குறித்து ஒரு வலைதளம் விளக்கியது. மேலும், “ஐம்பது ஆண்டுகள் சோவியத்தின் அரசாட்சியைப் சகித்துக் கொண்டிருந்த எஸ்டோனியர்களை ஒன்றிணைத்த வலிமையான விசையாக பாடல்கள் திகழ்ந்தன” என்றும் கூறியது.

நம்முடைய வாழ்விலும் கடினமான வேளைகளைக் கடந்து செல்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான் நாம் நம்மை எளிதாக சங்கீதங்களோடு இணைத்துக் கொள்ள முடிகின்றது. தன்னுடைய ஆன்மாவின் ஒரு இருண்ட இரவில் இந்தப் பாடலை சங்கீதக்காரன் பாடுகின்றார். “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (சங். 42:5). ஆராதனை தலைவனான ஆசாப், தான் பெரும் ஏமாற்றத்தைக் கண்டபோது, “சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்” (73:1) எனப் பாடுகின்றார்.

நம்முடைய சோதனை நேரங்களிலும், நாம் சங்கீதக்காரனோடு இணைந்து பாடி, நம் இருதயங்களில் பாடல் வழிப் புரட்சியை ஏற்படுத்துவோம். இத்தகைய புரட்சி, நம்முடைய விரக்தியின் கொடுமையையும் குழப்பத்தையும், தேவனுடைய மிகப் பெரிய அன்பு, உண்மையின் மீதுள்ள விசுவாசத்தோடு கூடிய நம்பிக்கையினால் மேற்கொள்ளும்.