1938 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் நாள் மதிய வேளையில், ஓர் இளம் வானிலை ஆய்வாளர், அமெரிக்க தேசத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பு நிறுவனத்திடம் ஒரு வலிமையான சூறாவளி புயல் வடபகுதியை நோக்கிபயணம் செய்து, நியு இங்கிலாந்து பகுதியை தாக்க இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் வானிலை முன்னறிவிப்பு தலைமை அதிகாரி, சார்ல்ஸ் பியர்ஸ்ஸின் முன்னறிவிப்பைக் குறித்து ஏளனம் செய்தார். வெப்ப மண்டலத்தில் உருவாகும் புயல், உறுதியாக இவ்வளவு தொலைவு கடந்து, வட பகுதியைத் தாக்க முடியாது என கூறினார்.

இரண்டு மணி நேரம் கழித்து, அந்த 1938 நியு இங்கிலாந்து சூறவளி லாங்க் ஐலண்டு பகுதியில் நிலச் சரிவை ஏற்படுத்தியது, மாலை 4 மணியளவில் அது நியு இங்கிலாந்து பகுதியை அடைந்தது, கப்பல்களை தரைக்குத் தள்ளியது, வீடுகள் நொருக்கப்பட்டு கடலுக்குள் தள்ளப் பட்டன. அறுநூறுக்கும் அதிகமானோர் மரித்தனர், திட்டமான தகவல்களின் அடிப்படையில் பியர்ஸ் கொடுத்த எச்சரிக்கையும், அவருடைய விளக்கமான வரைபடங்களும் பாதிக்கப் பட்டவர்களை எட்டியிருந்தால், ஒரு வேளை அவர்கள் பிழைத்திருக்கலாம்.

யாருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்க வேண்டும் என்ற கருத்து வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரேமியா வாழ்ந்த காலத்தில், தேவன் பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்துள்ளார். “உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண் பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கையல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்கிறார்கள்” (எரே. 23:16) என்கின்றார். அவர்களைக் குறித்து தேவன், “அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள்” (வச. 22) என்கின்றார்.

“பொய் தீர்க்கதரிசிகள்” நம்மிடையேயும் இருக்கிறார்கள். வல்லுனர்கள், தேவனை முற்றிலும் விலக்கிவிட்டு, தங்களுடைய சொந்த ஆலோசனைகளையோ அல்லது தேவனுடைய வார்த்தைகளை தங்களுக்கு ஏற்ப திரித்து, தங்களின் நோக்கத்திற்குப் பொருத்தமாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால் தேவன் நமக்கு உண்மையையும், பொய்யையும் பகுத்தறியக்கூடிய ஞானத்தை அவருடைய வார்த்தையின் மூலமும், ஆவியின் மூலமும் கொடுத்துள்ளார். எல்லாவற்றையும் அவருடைய வார்த்தையின் உண்மையின் அடிப்படையில் மதிப்பிடும் போது தான், நம்முடைய வார்த்தைகளும், வாழ்க்கையும் அந்த உண்மையை மற்றவர்களுக்கு காட்டுவதாக இருக்கும்.