எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம்

1974ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீன விவசாயிகள் கிணறு வெட்டிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சரியமானதொன்றை கண்டுபிடித்தார்கள். அவர்களுடைய வறண்ட நிலத்திற்கடியில், கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஆளுயர டெரக்கோட்டா (Terracotta) சிலைகள் புதைந்திருந்தன. மத்திய சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆபூர்வமான கண்டுபிடிப்பில் 8000 வீரர்களும், 150 குதிரைப் படையும், 520 குதிரைகளைக் கொண்ட 130 ரதங்களும் இருந்தன. இன்று சீனாவின் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலமாக இந்த டெரக்கோட்டா படை மாறிவிட்டது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதைக் காண வருகின்றனர். அநேக நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வியப்பளிக்கும் பொக்கிஷம், இன்று உலகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல், இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம், கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என எழுதி உள்ளார். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7). கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும் குறித்த செய்தியே நமக்குள் இருக்கும் பொக்கிஷம்.

இது மறைத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் அல்ல. தேவனுடைய அன்பினாலும், கிருபையினாலும் உலகத்திலுள்ள எல்லா தேசத்தின் மக்களும் அவருடைய குடும்பத்திற்குள் வந்து சேர இதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆவியானவரின் துணையோடு இன்று இப்பொக்கிஷத்தை நாம் எவரிடமாவது பகிர்ந்து கொள்வோமாக.

நம் தேவைகளின் ஆதாரம்

2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முழு உலகத்தின் கவனமும், சிலி (Chile) தேசத்தின் கோபியாபோ (Copiapo) என்னும் இடத்திலுள்ள சுரங்க குழியின் மீதே இருந்தது. ஏனெனில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 2300 அடி ஆழத்தில், 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தார்கள். பூமிக்கடியில் இருளிலே அகப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு எப்பொழுது உதவி வரும் என்று தெரியாது. பதினேழு நாட்கள் காத்திருப்பிற்குப் பின் துளை போடும் சத்தத்தை கேட்டார்கள். மீட்புக் குழுவினர் சுரங்கக் குழியின் சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சிறு துளைகள் போட்டு, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப வழி உண்டாக்கினார். அச்சுரங்க தொழிலாளிகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பும் பொருட்களை கொண்டு பிழைத்திருக்க அம்மூன்று வழிகளையே சார்ந்திருந்தனர். 69ஆம் நாள் அக்குழியிலிருந்த கடைசி சுரங்கத் தொழிலாளியும் மீட்கப்பட்டான்.

இவ்வுலகில் நம்மையும் தாண்டி உள்ள வளத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிவிட்டு, நம்மால் வாழ இயலாது. அண்டசராசரங்களையும் படைத்த சிருஷ்டி கர்த்தாவே நம் தேவை அனைத்தையும் சந்திக்கிறவர். அச்சுரங்க தொழிலாளிகளின் தேவைகளை சந்திக்க உதவிய அத்துளைகள் போல, நம்முடைய தேவை அனைத்தையும் சந்திக்கும் தேவனோடு நம்மை இணைப்பது நம்முடைய ஜெபங்களே.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்று ஜெபிக்கும்படி இயேசு உற்சாகப்படுத்துகிறார். அடிப்படை தேவையான ஆகாரத்திற்காக ஜெபிக்க கூறுவதின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்வின் அனைத்து தேவைகளையும் அவர் நமக்கு அளிக்க விரும்புவதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சரீரப்பிரகாரமான தேவைகள் மட்டுமின்றி சுகம், தைரியம், ஞானம் மற்றும் ஆறுதல் ஆகிய அனைத்தையும் அளிக்க விரும்புகிறார்.

ஜெபத்தின் மூலம் எக்கணமும் அவரை அணுகமுடியும். மேலும் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார் (வச. 8). நீங்கள் எவ்வகையான தேவையோடு இன்று போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்... கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

அவரை யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?

1929ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை மாலை எனும் இதழில் “சிறு பிள்ளையாக வேதாகமத்திலிருந்தும், தால்முட்டிலிருந்தும் (Talmud – நியாயப் பிரமாண விளக்கவுரை) அறிவுரை பெற்றேன். நான் ஒரு யூதனாக இருந்தாலும் அந்த பிரகாசமான நசரேயனால் பரவசமடைந்தேன். சுவிசேஷத்தை படிக்கும் பொழுது, இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் ஒருவனாலும் இருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் ஜீவிக்கிறார். எந்தப் புராணக்கதையிலும் அப்படிபட்ட ஜீவன் இல்லை” என்று ஆல்பர்ட் கூறினார்.

இயேசுவை பின்பற்றினவர்கள், அவர் விசேஷமானவர் என்று உணர்ந்திருந்ததைக் குறித்து புதிய ஏற்பாட்டிலே கூறியுள்ளனர். தன்னைப் பின்பற்றினவர்களை நோக்கிப் பார்த்து இயேசு, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் ஏரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் பதில் கூறினார்கள்” (மத். 16:13-14). இஸ்ரவேல் தேசத்தின் தலைசிறந்த தீர்கக்தரிசிகளோடு ஒப்பிடப்படுவது மிகப் பெரிய பாராட்டுதான். ஆனால், இயேசு பாராட்டுதல்களை தேடவில்லை. அவர் அவர்களுடைய புரிதலை ஆராய்ந்து விசுவாசத்தை தேடினார். ஆகவே அவர் இரண்டாவதாக ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்” (16:15).

“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (வச. 16) என்று பேதுரு உரைத்த வார்த்தைகளில் இயேசுவின் உண்மையான அடையாளம் முழுமையாக வெளிப்பட்டது. இயேசு அவரையும், நம்மை காப்பாற்றும் அவருடைய அன்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறார். ஆகவே தான் “இயேசு யாரென்று நீ நினைக்கின்றாய்?” என்ற கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் இறுதியாகப் பதில் கூற வேண்டும்.

உங்களுடைய மதிப்பு என்ன?

கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.

புதிய நோக்கம்

ஜேக்கப் டேவிஸ் 1800ல் வாழ்ந்த ஒரு தையல்காரர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அந்த நாட்களில் அமெரிக்க மேற்கு மாகாணத்தில் தங்க சுரங்க வியாபாரம் ஓங்கியிருந்தது. அதில் வேலை செய்யும் வேலையாட்களின் கால் சட்டை (பாண்ட்) சீக்கிரத்தில் கிழிந்து போய்க்கொண்டிருந்தது, அதற்கு ஓர் தீர்வை காணவேண்டும் என்று துடித்தார். அதனால் அவர் ‘லெவி ஸ்டிராஸ்’ (Levi Strauss) நடத்திவரும் கம்பெனிக்கு சென்று, அவரிடம் இருந்து கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துனியாக இருந்தது. அத்துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால் சட்டையை தைத்துகொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. இன்றைக்கு லெவியைத் தவிர்த்து பல வகையான ஜீன்ஸ் துணிகளை உலக சந்தையில் பார்க்கலாம். அதை பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஓர் சாதாரண கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.

சீமோனும் அவன் நண்பர்களும் கலிலேயா கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு வந்து, அவர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், தொடக்கத்தையும் கொடுத்தார். இனிமேல் அவர்கள் மீன்களை பிடிக்கப் போவதில்லை. ஏனெனில் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” ( மாற். 1:17) என்று இயேசு சொன்னார்.

இந்தப் புதிய நோக்கம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது அவர்கள் மூலமாக தேவன் மக்களின் மனங்களை தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அவர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் உலகுக்கு நற்செய்தியாய் எடுத்துச் செல்கிறோம்.

நம் வாழ்வில் இந்த தெய்வீக அன்பு வெளிப்படட்டும். ஏனெனில் அது பிறருடைய வாழ்க்கையையும், நோக்கங்களையும் நித்திய வாழ்வின் தீர்மானங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களது பயணம்

1960ம் ஆண்டுகள் பொதுவாக ஒழுக்கநெறிகளை எதிர்க்கும் மனப்பான்மை உடைய காலமாக இருந்தது. நான் அந்தக்காலத்தில் வளர்ந்து வந்தபடியால், நானும் மதசம்பந்தமான காரியங்களை புறக்கணித்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் 20 வயது கடந்த காலகட்டத்தில், ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த பின்புதான் விசுவாசத்திற்குள் வந்தேன். அப்பொழுதிலிருந்து எனது நடுத்தர வயதினை, மனிதராகிய நம்மிடம், இயேசு காண்பித்த அன்பினைப்பற்றி பிறருக்கு அறிவித்து வருவதில் செலவிட்டு வந்தேன். அது ஒரு பயணமாக இருந்து வருகிறது.

குறைபாடுகள் நிறைந்த இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை “பயணம்” என்ற சொல் குறிக்கிறது. பயணம் செய்யும்பொழுது வழியில், நாம், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், சமவெளிகள், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகள், ஆள் அரவமற்ற அமைதியான சாலைகள் - உயர்வுகள், தாழ்வுகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள், போராட்டங்கள், இழப்புகள், நொறுங்கின இருதயம், தனிமை ஆகியவைகளை சந்திக்கின்றோம். நமக்கு முன்னால் உள்ள பாதையை நம்மால் பார்க்க இயலாது. நாம் விரும்புகிறபடி அப்பாதை அமையாவிட்டாலும் அது இருக்கிறவண்ணமாகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒருபொழுதும் இப்பயணத்தை தனிமையாக சந்திப்பது இல்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதை வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் இல்லாத இடமே கிடையாது (சங். 139:7-12). அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (உபா. 31:6; எபி. 13:5). அவர் போனபின்பு பரிசுத்தாவியை அனுப்புவேன் என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு வாக்களித்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவா. 14:18) என்று கூறினார்.

நாம் நமது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், வாய்ப்புகளையும் மன உறுதியோடு சந்திக்கலாம். ஏனெனில், நம்மை ஒருபொழுதும் கைவிடாமல், நம்மோடுகூட எப்பொழுதும் இருப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.

சிறைப்பட்டவர்களை விடுவித்தல்

ஜார்ஜியாவில், சாவன்னாவில் உள்ள வலிமை மிக்க எட்டாவது விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கு நானும், என் மனைவியும் சென்றபொழுது, அங்கு ஜெர்மன் தேசத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளின் பாசறைகளை மறுபடியும் உருவாக்கி இருந்ததைப் பார்த்தோம். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த போர்க்கைதிகளின் துயரங்களை நானும், என் மனைவியும் பார்த்தபொழுது, மிகவும் அதிகமாக தொடப்பட்டோம். மார்லினின் தகப்பனார், ஜிம் வலிமைமிக்க எட்டாவது விமானப்படையில் சேவை செய்திருந்தார். இந்த “வலிமையான எட்டு” என்ற அந்த விமானப்படை, இரண்டாம் உலகப்போரின் போது அநேகமுறை ஐரோப்பாவில் பறந்து சென்றுள்ளது. அந்தப்போரில், அந்த எட்டாம் விமானப்படையைச் சேர்ந்த 47000க்கும்மேற்பட்ட வீரர்கள் காயப்பட்டார்கள். 26000க்கும் மேற்பட்ட வீரர்கள் மரித்துவிட்டார்கள். ஜிம்மும் சுடப்பட்டு போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். காட்சிப் படுத்தப்பட்டவைகளின் ஊடாக நாங்கள் நடந்து சென்றபொழுது, ஜிம்மும், அவருடன் இருந்த மற்றக்கைதிகளும் விடுதலையாக்கப்பட்ட அந்த நாளில், அவர்கள் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியை, ஜிம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தோம்.

ஒடுக்கப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்களின் விடுதலையைக் குறித்து தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 146 அறிவிக்கின்றது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” என்று அவரைப்பற்றி சங்கீதக்காரன் விளக்குகிறான் (வச. 7). துதித்துப் போற்றுவதற்கு இவையே காரணமாக உள்ளது. ஆனால், விடுதலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த விடுதலை, நாம் நமது குற்ற உணர்விலிருந்தும், வெட்கத்திலிருந்தும் பெறும் விடுதலையேயாகும். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு கூறியது ஆச்சரியமில்லை.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் நமது பாவச்சிறையிலிருந்து விடுபட்டு, மன்னிப்பினால் மட்டுமே கிடைக்கக்கூடிய, தேவன் அருளும் மகிழ்ச்சி, அன்பு, விடுதலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுகிறோம்.

பட்சிக்கும் சோதனைகள்

மரங்களுக்கு நெருப்பு மிக மோசமான ஒரு எதிரி. ஆனால், அதுவே உபயோகமானதாகவும் திகழலாம். காட்டின் நிலப்பகுதியில் அடிக்கடி குறைந்த வீரியத்தில் பற்றியெரியும் நெருப்பு அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளையும், கிளைகளையும் சுட்டெரித்துவிடுகிறது. ஆனால், மரங்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. இதை வல்லுநர்கள் “குளிர்ந்த” நெருப்பு என கூறுகிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் சாம்பல்,  அங்கு விதைகள் வளர்வதற்கு ஏற்றதாயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் மரங்கள் நன்கு வளர குறைந்த வீரியம் கொண்ட நெருப்பு அவசியமாயிருக்கிறது.

அதைப்போலவே, வேதத்தில் அக்கினியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின்…