அது செப்டம்பர் மாதத்தின் ஓர் ஞாயிற்றுக்கிழமை இரவு. அநேகர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, புட்டிங் தெருவிலுள்ள (Puding Lane) தாமஸ் ஃபாரினர் (Thomas Forriner) பேக்கரியில் சிறிய நெருப்பு பற்றியது. ஆனால் சீக்கிரத்தில் ஒவ்வொரு வீடாய் தீப்பற்றி முழு லண்டன் மாநகரமும் நெருப்பில் மூழ்கியது. 1666ஆம் ஆண்டின் மகா பெரிய நெருப்பில், எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.
அத் தீ அப்பட்டணத்தின் ஐந்தில் நான்கு பங்கு பகுதியை அழித்துப்போட்டது. ஒரு சிறிய நெருப்பிலிருந்து எவ்வளவு பெரிய அழிவு!

இதைப்போலவே பலத்த அழிவை உண்டாக்கக்கூடிய வேறு ஒரு சிறிய நெருப்பைக் குறித்து வேதம் நம்மை எச்சரிக்கிறது. “அப்படியே, நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என யாக்கோபு எழுதிய பொழுது, கட்டிடங்களை எண்ணி இதை அவர் எழுதவில்லை, மாறாக நம்முடைய வாழ்க்கையையும், உறவுகளையும் மனதில் வைத்தே இதை எழுதினார்.

ஆனால் நம்முடைய வார்த்தைகள் பிறரை எழுப்பி கட்டுகிறதாகவும் இருக்கலாம். “இனிய சொற்கள்
தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும் எலும்புகளுக்கு ஓளஷதமும்” என நீதிமொழிகள் 16:24 நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” எனக் கூறுகிறார் (கொலோ. 4:6). உப்பானது நம்முடைய உணவிற்கு சுவையூட்டுவது போல, கிருபையான வார்த்தைகள் பிறரை பெலப்டுத்தி எழுப்பிக் கட்டுகிறது. 

துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறவும், விசுவாசத்தில் வளர விரும்புகிறவர்களை உற்சாகப் படுத்தவும் அல்லது இரட்சகரண்டை வரவேண்டியவர்களை வழிநடத்தவும் ஏற்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.