எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

பரிபூரண சமாதானம்

என் தோழி, அநேக ஆண்டுகள், சமாதானத்தையும் மனநிறைவையும் தேடி அலைந்ததாக என்னிடம் பகிர்ந்துகொண்டாள். அவளும் அவளுடைய கணவனும் சேர்ந்து ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திவந்தார்கள். அதன் மூலம் ஓரு பெரிய வீட்டையும், ஆடம்பரமான ஆடைகளையும், விலையுர்ந்த நகைகளையும் அவளால் வாங்க முடிந்தது. ஆனால், சமாதானத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த அவள் இருதயத்தை அவளுடைய ஆஸ்திகள் திருப்திப்படுத்தவில்லை, செல்வாக்குமிக்க நண்பர்களின் நட்பும் திருப்திபடுத்தவில்லை. பிறகு ஓர் நாள் அவள் விரக்தியடைந்து மனந்தளர்ந்து இருந்தபொழுது, அவளுடைய தோழி ஒருத்தி இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை குறித்து அவளுக்கு கூறினாள். அன்று, அவள் சமாதானப் பிரபுவை கண்டடைந்தாள். அப்பொழுது உண்மையான சமாதானம் மற்றும் மனநிறைவு குறித்த அவளுடைய புரிதல் முற்றிலும் மாறியது.

இயேசு தன்னுடைய சீஷர்களோடு உணவருந்திய கடைசி இராப்போஜனத்திற்கு பிறகு, சமாதானம் நிறைந்த வார்த்தைகளினால், சீக்கிரத்தில் நிகழக்கூடிய சம்பவங்களாகிய, ‘தன் மரணம்’, ‘உயிர்த்தெழுதல்’ மற்றும் ‘பரிசுத்த ஆவியானவரின் வருகை’ குறித்து தன் சீஷர்களுடன் பகிர்ந்து, அவர்களை ஆயத்தப்படுத்தினார் (யோவா. 14). இவ்வுலகம் தரமுடியாத சமாதானத்தைக் குறித்து விவரித்த இயேசு, அதை துன்பத்தின் மத்தியிலும் தன் சீஷர்கள் கண்டடைய கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினார்.

தன்னுடைய மரணத்திற்கு பிறகு சீஷர்கள் அனைவரும் பயத்தோடு இருந்தபோது, உயிர்த்தெழுந்த இயேசு, “அவர்கள் மத்தியில் பிரசன்னமாகி “உங்களுக்கு சமாதானம்!” என்று வாழ்த்துரைத்தார் (யோவா. 2௦:19). அவர் நமக்காக சிலுவையிலே செய்து முடித்தவற்றின் மூலம், நாம் எவ்வாறு இளைப்பாறுதலுக்குள் கடந்து செல்லலாம் என்னும் புரிதலை, இப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களுக்கும் நமக்கும் அளிக்கமுடியும். அப்புரிதல், நிலைமாறிக் கொண்டேயிருக்கும் நம்முடைய உணர்வுகளை விட, வலிமையான ஒரு திடநம்பிக்கையை நமக்களிப்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

தேவனால் உடுத்துவிக்கப்பட்டு!

என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபொழுது, எங்களுடைய தோட்டத்தில் விளையாடும் சமயம், கொஞ்ச நேரத்திலேயே சேறும் மண்ணும் அவர்கள்மீது ஒட்டிக்கொள்ளும். ஆகவே அவர்கள் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வரும்பொழுது, வாசலில் வைத்து அவர்களுடைய ஆடைகளைக் கழற்றிவிட்டு ஒரு துண்டைச் சுற்றி குளியலறைக்கு அவர்களை கொண்டு சென்று விடுவேன். இல்லையென்றால் தரையெல்லாம் அழுக்காகிவிடும். சிறிது நேரத்திலேயே, தண்ணீர் மற்றும் சோப்பின் உதவியோடு அழுக்கெல்லாம் நீங்கி அவர்கள் சுத்தமாகி விடுவார்கள். 

பாவத்தையும் தப்பிதங்களையும் குறிக்கும் அழுக்கான ஆடையைப் பிரதான ஆசாரியனாகிய யோசுவா உடுத்தியிருப்பதை ஒரு தரிசனத்தில் சகரியா கண்டான் (சக. 3:3). ஆனால், தேவன் அவனை சுத்திகரித்து, அவனுடைய அழுக்கான வஸ்திரங்ககளை களைந்து சிறந்த வஸ்திரங்களினால் அவனை உடுத்துவித்தார் (3:5). தேவன் அவனுடைய பாவத்தை எல்லாம் நீக்கி விட்டார் என்பதையே அவனுடைய புதிய தலைப்பாகையும் ஆடையும் பறைசாற்றியது.

அதைப்போலவே சிலுவையின் மூலம் இயேசு நமக்களித்த இரட்சிப்பினால் நம்முடைய பாவம் கழுவப்பட்டு நாமும் விடுதலை பெறலாம். அவருடைய சிலுவை மரணத்தின் மூலம், நம்மை பற்றிக்கொண்டிருக்கும் பாவக்கறைகளெல்லாம் நீங்கி தேவனுடைய குமாரர் குமாரத்திகள் என்ற ஆடையை தரித்து கொள்கிறோம். இனி ஒருபோதும் நாம் செய்த பாவங்களினால் (பொய், திருட்டு, புறங்கூறுதல், இச்சை மற்றும் இதர பாவங்கள்) எண்ணப்படாமல், தேவன் தான் நேசிப்பவர்களுக்கு கொடுத்த நாமங்களினால் அறியப்படுவோம். அதாவது இனி நாம் மீட்கப்பட்டவர்கள், மறுரூபமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், விடுதலையானவர்கள் என அழைக்கப்படுவோம். 

நீங்கள் உங்களுக்கென்று தேவன் வைத்துள்ள ஆடையை அணிந்துகொள்ளும்படி, உங்களுடைய அழுக்கான ஆடையை களைந்து விடும்படி தேவனிடம் கேளுங்கள்.

இல்லத்தில் இயேசுவுடன்

“நமது வீட்டைப் போல் வேறெந்த இடமும் இல்லை”. நிலையான ஓரிடத்தில் உறவுகளுடன் இருந்து, வசித்து, ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் ஏக்கத்தை தான் இந்த வாக்கியம் வெளிப்படுத்துகிறது. கடைசி இராப்போஜனத்தின்போது, தமக்கு நிகழப்போகும் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பேசுகையில், அவரது நண்பர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் அந்த ஏக்கத்தை குறித்து இயேசு பேசினார். அவர்களை விட்டுச்சென்றுவிட்டாலும், நிச்சயமாக திரும்பி வருவாரென்ற வாக்குறுதியை அளித்தார். அவர்களுக்காக ஓரு இடத்தை ஆயத்தம் பண்ணப்போவதாகவும் அது அழகிய வாசஸ்தலமாகவும், இல்லறமாகவும் விளங்கும் என்று சொன்னார். 

பாவமற்ற மனிதனாக வாழ்ந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் அனைத்தையும் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றி, அவர்களுக்காகவும் நமக்காகவும் அந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார். பாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்த இல்லத்தை அவர் கட்டியத்தின் வாயிலாக, நிச்சயமாகவே திரும்பி வருவார் எனவும், அவர்களை திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டார் என்ற உத்திரவாதத்தையும் அவரது சீஷர்களுக்கு தந்தார். ஆகவே பரலோகத்தில் இருந்தாலும் சரி, பூலோகத்தில் இருந்தாலும் சரி அவர்கள் வாழ்க்கையைக் குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை

இயேசு நமக்காக ஓர் இல்லத்தை ஆயத்தம்பண்ணுகிறார் என்ற வார்த்தையை விசுவாசிக்கிறோம். மேலும் அவர் நமக்குள் வாசமாயிருக்கிறார் (யோவா. 14:23) என்று அவர் தந்த உத்திர வாதத்தை நாம் விசுவாசிக்கும்பொழுது மிகுந்த ஆறுதல் அடைகிறோம். அது மாத்திரமல்ல, நமக்கு முன்பாகச் சென்று நம்முடைய பரலோக வீட்டையும் கட்டியிருக்கிறார். 

நாம் எப்படிப்பட்ட இடத்தில் வசித்து வந்தாலும் இயேசுவின் அன்பினாலும், சமாதானத்தினாலும் சூழப்பட்டிருக்கிறோம். அவர் நம்மோடு இருக்கும் பொழுது, நம்வீட்டை போன்ற சிறந்த இடம் வேறெங்கேயும் கிடையாது.

அன்பின் விலை

இங்கிலாந்தில் வசிக்கும் எங்களை அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பெற்றோர் காண வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிச்செல்லும் பொழுது கையசைத்து வழியனுப்பிக்கொண்டிருந்த என் மகள் சட்டென்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, ”அவர்கள் திரும்பிச்செல்வதை நான் விரும்பவில்லை”, எனக் கூறினாள். நான் அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த பொழுது, “என்ன செய்வது, அதுதான் அன்பின் விலை” என என் கணவர் கூறினார். 

நமக்குப் பிரியமானவர்களின் பிரிவு நமக்கு மனவலியை உண்டாக்கும். ஆனால் சிலுவையிலே அன்பின் விலையை இயேசு செலுத்தியபொழுது எவரும் அனுபவிக்க முடியாத பிரிவை அவர் அனுபவித்தார். “அநேகருடைய பாவத்தைச்சுமந்து” என்று 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டதை தேவனும் மனுஷனுமாகிய இயேசு நிறைவேற்றினார் (ஏசா. 53:12). இயேசுவே நம்முடைய பாடுகளைசுமக்க வந்த ஜீவ பலி என்பதற்கான அநேக குறியீடுகள் இவ்வதிகாரத்தில் உள்ளது. போர்ச் சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்திக் காயப்படுத்தியபொழுது (யோ:19:34), “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு” (வச.5) என்னும் குறியீடு நிறைவேறிற்று. மேலும் ஒரு குறியீடு, “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” (ஏசா. 53:5). 

அன்பின் நிமித்தமாகவே இப்பூமியிலே இயேசு குழந்தையாகப் பிறந்தார். அன்பின் நிமித்தமாகவே நியாயப்பிரமாண போதகர்களிடமும், மக்களிடமும், போர்ச்சேவகரிடமும் இருந்து பல கொடுமைகளை அனுபவித்தார். அன்பின் நிமித்தமாகவே, நமக்குப் பதிலாக அவர் பாடுபட்டு மரித்து, பரிபூரண ஜீவபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்து நம்சார்பில் பிதாவின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அன்பின் நிமித்தமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் மன்னிக்க வேண்டும்?

என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தபொழுது மன்னிக்க வேண்டியதின் அவசியத்தை நான் அறிந்திருந்தும் அவளை என்னால் மன்னிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் அவளுடைய வார்த்தைகள் என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஊடுருவிச்சென்று என்னை வேதனையினாலும் கோபத்தினாலும் நிலைகுலையச் செய்தது. பின்பு இதைக்குறித்து நாங்கள் பேசினபொழுது, அவளை நான் மன்னித்து விட்டதாகக் கூறினேன். ஆனாலும் அதன்பிறகும், வெகுகாலம் அவளைக் காணும்பொழுதெல்லாம் வலியின் சுவடுகள் என்னுள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அவள்மீது இன்னும் மனக்கசப்பும் கோபமும் இருப்பதை அறிந்து கொண்டேன். இருப்பினும் ஒரு நாள் தேவன் என்னுடைய ஜெபத்திற்கு பதிலளித்து, நான் பற்றிக்கொண்டிருந்த மனக்கசப்பையும் கோபத்தையும் முற்றிலும் விட்டுவிட எனக்கு பெலனளித்தார். இறுதியாக நான் விடுதலை பெற்றேன்.

தான் சிலுவையில் மரிக்கும் தருவாயில் தொங்கிக்கொண்டிருந்த பொழுதும் மன்னிப்பை அளித்ததின் மூலம் கிறிஸ்துவ விசுவாசத்தின் நாடித் துடிப்பே மன்னிப்பதில் தான் உள்ளது என்பதை நமது இரட்சகர் விவரிக்கிறார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் இயேசு நேசித்ததினால், அவர்களை மன்னிக்குமாறு பரமபிதாவிடம் வேண்டுதல் செய்கிறார். மனக்கசப்பையும் கோபத்தையும் பற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக தனக்கு தீங்கிழைத்தவர்களுக்கு கிருபையையும் அன்பையும் ஈந்தளித்தார். 

இப்பொழுதும் கூட தேவன் முன்பு நம்மை நாமே நிதானித்து பார்த்து, நம்மை காயப்படுத்தி னவர்களை நாம் இன்னும் மன்னியாமல் இருப்போமானால், இயேசுவின் மாதிரியைப் பின் பற்றி அவர்களுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த நல்ல தருணம் இதுவே. நாம் மன்னிப்பதற்கு அதிக காலமாக சிரமப்படுக்கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் மூலம் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்யும் பொழுது, நாம், மன்னியாமை என்னும் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம்.

ஜீவனும் மரணமும்

மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம, “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).

நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.

புத்துணர்வளிக்கும் வசந்தகால மழை

சற்று இடைவெளி தேவைப்பட்டதால், பக்கத்தில் இருந்த பூங்காவில் நடக்கச் சென்றேன். ஓர் பாதையில் நடந்து கொண்டிருந்தபொழுது, பச்சை நிறம் அதிகமாய் என் கண்களில் தென்பட்டது. ஜீவனை எடுத்துரைக்கும் விதத்தில் பூமியிலிருந்து துளிர்த்த சில செடிகள் என் கவனத்தை ஈர்த்தது. இன்னும் சில வாரங்களில் அவை பூத்துக்குலங்கும் டாஃபோடில்களாக (Daffodil) வளர்ந்து விடும். நாம் மற்றொரு குளிர்காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பதையும், வரப்போகும் வசந்த காலத்தையும் அவை பறைசாற்றுகின்றன.

ஓசியாவின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஜீவனற்ற, வறண்ட குளிர்காலத்தைப் போல அநேக பகுதிகளில் உணருவோம். ஏனெனில் தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு யாரையும் பொறாமைக்குள் ஆழ்த்தாத ஓர் வேலையைத் தந்தார். நேர்மையற்ற, துரோகம் செய்யும் ஒரு பெண்ணை மணந்துகொள்ளுமாறு தேவன் கூறினார். அதன் வாயிலாக தாம் படைத்த தமது ஜனமாகிய இஸ்ரவேலின் மீது தமக்கிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்த விரும்பினார் (1:2-3). ஓசியாவின் மனைவியாகிய, கோமேர், திருமண வாக்குறுதியை மீறினாள், அவற்றை உடைத்தெறிந்தாள். அவள் தன்னை அர்ப்பணிப்புடன் நேசித்து வாழ்வாள் என்ற விசுவாசத்தினால் ஓசியா அவளை திரும்பவும் அழைத்துக் கொண்டான். அதைப் போலவே தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பும், மூடுபனியைப் போல கலைந்து போய் விடாமல், வல்லமையோடும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

நமக்கும், தேவனுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கின்றது? கொண்டாட்டங்களின் பொழுது அவரை அலட்சியம் செய்து விட்டு பிரச்சனையின் பொழுதும், துயரத்தில் இருக்கும் பொழுதும் மாத்திரம் அவரைத் தேடுகிறோமா? இஸ்ரவேலர்களை போல நாமும் பரபரப்பு, வெற்றி மற்றும் செல்வாக்கு என்னும் விக்கிரகங்களினால் ஆட்டிவைக்கப்படுகிறோமா?

இன்றைக்கு மீண்டும் ஒரு முறை தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளலாம். வசந்த காலத்தில் துளிர்க்கும் அந்த சிறிய பூக்களை போல் தேவனும் நம்மை மறந்துவிடாமல், நம்மீது அளவில்லாத அன்பினை வைத்துள்ளார்.

வரவேற்கும் வரம்!

ஐந்து நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களுக்கு இரவு விருந்தளித்தது எங்களுக்கு என்றும் நீங்கா ஒரு அற்புதமான நினைவு. எப்படியோ அன்று எங்கள் உரையாடல் ஜோடி ஜோடியாக பிரிந்து காணப்படாமல், லண்டன் மாநகரில் வசிப்பதைக் குறித்து உலகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் அவரவருடைய கண்ணோட்டத்தை பகிர்ந்துகொண்டனர். அன்றைய தினத்தின் முடிவிலே அக்கூடுகையை குறித்து நானும், என் கணவரும் சிந்தித்தபொழுது, நாங்கள் அவர்களுக்கு அளித்ததைக் காட்டிலும் பெற்றுக்கொண்டதே அதிகம் என்பதை உணர்ந்தோம். வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துக்கொண்டது மட்டுமன்றி, பல புதிய நட்புகள் கிடைத்ததினால் சந்தோஷமும் மனநிறைவும் அடைந்தோம்.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர் அப்புத்தகத்தின் முடிவிலே சமுதாய வாழ்விற்கு தேவையான புத்திமதிகளைக் கூறி முடிக்கிறார். அதில், முன்பின் அறியாதவர்களைக் கூட வரவேற்று உபசரிக்கும்படி தன் வாசகர்களுக்கு கூறுகிறார். ஏனெனில் அப்படிச் செய்யும்பொழுது, “சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,” எனக் கூறுகிறார் (13:2). அவர் ஆபிரகாமையும், சாராளையும் மனதில் வைத்து அப்படிக் கூறியிருக்கலாம். ஏனென்றால் முன்பின் அறியாத மூன்று நபர்களை அவர்கள் வரவேற்று அக்கால வழக்கத்தின்படியே அவர்களுக்கு தாராளமாய் விருந்து அளித்து அனுப்புவதைக் குறித்து ஆதியாகமத்தில் காணலாம் (18:1-12). ஆபிரகாமும், சாராளும் தங்களுக்கு ஆசீர்வாதமான செய்தியைக் கொண்டுவந்த தேவதூதர்களை உபசரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஏதாவதொரு ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு நாம் பிறரை நம் வீட்டில் உபசரிக்கக்கூடாது, ஆனாலும் அநேகந்தரம், நாம் கொடுப்பதைக்காட்டிலும் அதிகமாகவே பெற்றுக்கொள்கிறோம். கர்த்தர் நமக்கு அளித்த நல்வரவை நாம் பிறர்க்கு அளிக்கும் பொழுது, அவர் தம்முடைய அன்பை நம்மூலம் பரந்து விரிந்திடச் செய்வார்.

கலங்கரை விளக்கம்

ருவாண்டா நாட்டிலுள்ள ‘கலங்கரை விளக்கம்’ என்னும் ஒரு ஊழிய மையம் இருப்பதே மீட்பிற்கு அடையாளமாக உள்ளது. 1994ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் பொழுது அந்நாட்டு அதிபருக்கு சொந்தமான ஒரு மாளிகை இப்பொழுது அந்த மையம் இருக்கும் இடத்தில் இருந்தது. அக்கலவரத்திற்கு பின்பு இப்புதிய கட்டடம் பிரகாசமான நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கிறிஸ்தவத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஒரு வேதாகமக் கல்வி நிறுவனம் அக்கட்டடத்தில் உள்ளது. அதோடு கூட ஒரு தங்கும் விடுதி, உணவகம் மற்றும் அச்சமுதாய மக்களுக்கு தேவையான இதர சேவைகளும் அங்கு உள்ளன. சாம்பலில் இருந்து ஒரு புதிய வாழ்வு தோன்றியுள்ளது. இந்த ‘கலங்கரை விளக்கத்தை’ கட்டினவர்கள் இயேசுவையே தங்களுடைய நம்பிக்கைக்கும், மீட்பிற்கும் ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஒரு ஓய்வுநாளன்று நாசரேத்திலுள்ள ஒரு ஜெபாலயத்திற்கு இயேசு சென்ற பொழுது, அவர் ஏசாயா புத்தகத்திலிருந்து வாசித்து தேவனுடைய கிருபையை பிரசித்ததிப்படுத்த அபிஷேகம் பண்ணப்பட்டவர் அவரே என அறிவித்தார் (லூக். 4:14-21). அவரே இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் மீட்பையும், மன்னிப்பையும் அருளவும் வந்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் சாம்பலுக்கு பதில் சிங்காரத்தை காண முடியும் (ஏசா. 61:3).

ருவாண்டா நாட்டு இனப்படுகொலையின் பொழுது, பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட சண்டையின் விளைவால் நடந்த அட்டூழியங்கள் மனதை உறைய வைக்கக் கூடிய பயங்கரமான சம்பவங்கள். அதில் 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்தனர். இதைக்குறித்து நமக்கு ஒன்றும் கூறத் தெரியவில்லை. ஆனால் இப்பூலோகத்திலோ அல்லது பரலோகத்திலோ இக்கொடுமைகளுக்கு ஈடு செய்ய கர்த்தரால் கூடும். நம்முடைய அழுகைக்குப் பதில் ஆனந்த தைலத்தை அளிப்பவர், காரிருள் போன்ற சூழ்நிலைகளின் மத்தியிலும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.