எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

கல்லெறிதல்

உபவாசத்தின் உட்கருத்து

மலரைப் போன்ற மலர்ச்சி

என்னுடைய கடைசி பேரன் பிறந்து இரண்டு மாதமேயாகிறது. ஓவ்வொருமுறை நான் அவனைப் பார்க்கும் போதும் சிற்சில மாற்றங்களைக் காண்கின்றேன். சமீபத்தில் நான் அவனிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த போது, அவன் என்னைப் பார்த்து சிரித்தான். உடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அது ஆனந்தம் கலந்த கண்ணீர். ஏனெனில் நான் என்னுடைய குழந்தைகளின் முதல் சிரிப்பை நினைத்துப் பார்த்தேன். அவை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தவை! ஆனாலும் அவற்றை நேற்று நடந்தது போல உணர முடிகிறது. இது போன்ற தருணங்கள் நம்மால் விவரிக்க முடியாத நினைவுகளைத் தருகின்றன.

சங்கீதம் 103ல் தாவீது எழுதிய தேவனைப் போற்றும் ஒரு சங்கீதம் போற்றியும் நம்முடைய வாழ்வின் சந்தோஷமான கணங்கள் எத்தனை சீக்கிரமாய் நம்மைவிட்டு கடந்து சென்று விடுகின்றன உணர்த்துகிறது. “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 15-16).

நம்முடைய வாழ்நாள் குறுகியதாய், இருப்பினும் அது ஒரு மலரைப் போன்று மலர்கின்றது, செழிக்கின்றது என தாவீது விளக்குகின்றார். ஒவ்வொரு தனிமலரும் மொட்டிலிருந்து மலராக விரிந்து, மணத்தையும், அழகிய வண்ணங்களையும் கொடுத்து அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனாலும் ஒவ்வொரு தனிமலரையும் நாம் நினைவில் வைப்பதில்லை. “அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 16) ஆனால், இதற்கு மாறாக, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேல், அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது (வச. 17) என்ற உறுதியைத் தருகின்றார்.

மலர்களைப் போன்றுள்ள நாம் இக்கணத்தில் மகிழ்ந்து களிகூறுவோம். நம்முடைய வாழ்வின் இத்தகைய தருணங்கள் உண்மையில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. இந்த உண்மையை நாம் கொண்டாடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தேவனுடைய கரத்திலுள்ளது. அவருடைய மாறாத அன்பு அவருடைய பிள்ளைகளோடு என்றென்றைக்கும் உள்ளது.

என்னுடைய தந்தையை நினைக்கின்றேன்

நான் என் தந்தையைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த வெளிவேலையைச் செய்பவராக, எப்போதும்; சுத்தியலைக் கொண்டும், தோட்ட வேலையிலும், மிகச்சிறந்த கருவிகளும், சிறிய இயந்திரங்களையும் கொண்ட அறையிலிருந்து வேலை செய்வதும் தான் என் நினைவில் வருகிறது. அவருடைய கரங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையையோ, திட்டத்தையோ செய்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் ஒர் கார் நிறுத்தும் அறையை செய்துகொண்டிருப்பார். அல்லது ஒரு சிறிய மேசையைச் செய்வார், அல்லது பறவைக்கான ஒரு வீட்டை தயாரிப்பார். சில வேளைகளில் பூட்டுகளைச் சரி செய்வார், சிறிய ஆபரணங்களை வடிவமைப்பார், கண்ணாடியில் சித்திரவேலை செய்வார்.

என்னுடைய தந்தையைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை என்னுடைய பரலோகத் தந்தையும், படைப்பாளருமானவரை நினைக்கச் செய்கின்றது. அவரும் தன்னுடைய வேலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஆரம்பத்தில் 'தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்தினார்... அதற்கு அளவு குறித்தார்... அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:4-7) அவருடைய படைப்புகளெல்லாம் ஒரு கலைநயமிக்க வேலை, மிகக் சிறந்த வேலை. நம்மை பிரமிக்கச் செய்யும் அழகிய உலகினை அவர் படைத்தார். 'அது மிகவும் நன்றாயிருந்தது" (ஆதி. 1:31) என்று சொன்னார்.

அவருடைய அழகிய கலைப் படைப்புகளில் நீயும் நானும் உண்டு. தேவன் நம்மை மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்தார் (சங். 139:13-16). அவர் நமக்குப் பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அவருடைய சாயலை நமக்குத் தந்து, நமக்குள்ளே இலக்கினையும், அதனை நிறைவேற்றும்படி வேலைசெய்யும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளார். அதில் இப்புவியையும் அதிலுள்ள படைப்புகளையும் ஆள்வதும் பாதுகாப்பதும் அடங்கும் (ஆதி. 1:26-28,2:15). நாம் எத்தகைய வேலை செய்தாலும் நம்முடைய வேலையிலோ, அல்லது ஓய்வுவேளையிலோ அவருக்காக முழு மனதோடு வேலைசெய்ய நமக்குத் திறமையையும் ஆற்றலையும் தருகின்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனைப் பிரியப்படுத்தும்படி செய்வோமாக.

தேவன் கேட்கின்றார்

தம் வாழ்வில் சவால்களையும், சுகவீனத்தையும் சந்திக்கின்ற குடும்ப நபர்கள், நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி அந்தக் குழுவிலுள்ள மற்ற அனைவரும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுக்க, தயான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்ப நபர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால். தயான் தன்னுடைய வேண்டுதலை வெளிப்படுத்தவில்லை. அவள் இதனைக் குறித்துச் சொன்னால், பிறரின் முகபாவனையையும், அவர்களின் கேள்விகளையும் ஆலோசனைகளையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாதென நினைத்தாள். எனவே அவள் இந்த வேண்டுதலை வெளியில் சொல்லாமலிருப்பதே மேல் என எண்ணினாள். தான் நேசிக்கும் இந்த நபர் இயேசுவின் விசுவாசியாயிருந்தும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றெண்ணினாள்.

தயான் இந்த ஜெப வேண்டுதலை இந்தக் குழுவிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிடினும், அவள் நம்பும் சில சிநேகிதிகளிடம் தன்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வாள். அவர்களோடு சேர்ந்து, தான் நேசிக்கும் இந்த நபரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறும், அவரும் கிறிஸ்து தரும் விடுதலையை அநுபவிக்க உதவுமாறும், தயானுக்குத் தேவையான பொறுமையையும் சமாதானத்தையம் தருமாறும் ஜெபிப்பாள். அவ்வாறு ஜெபிக்கும்போது அவள் ஆறுதலையும், தேவன் தரும் பெலனையும் பெற்றுக் கொண்டாள்.

நம்மில் அநேகர் உண்மையாகவும், தொடர்ந்தும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமலிருக்கலாம். ஆனால், தேவன் நம்மீது கரிசனையுள்ளவர், அவர் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பதை உறுதியாக நம்புவோம். அவர் நம்மை இன்னும் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகின்றார். நாமும், நம்பிக்கையிலே சந்தோஷமாயும், உபத்திரவத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் தரித்திருந்து (ரோம. 12:12) அவரையே சார்ந்து வாழ்வோம்.

என் செயலுக்காக வருந்துகிறேன்

காலின்ஸ் என்பவர் 2005ல் ஒரு அறிக்கையை வேண்டுமென்றே தவறாக திரித்து எழுதியதால், மெக்கீ என்பவர் நான்கு ஆண்டுகள் சிறைக்கு செல்லவேண்டியதாயிற்று. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் காலின்ஸை “துன்புறுத்த வேண்டும்” என்று மெக்கீ சபதம் எடுத்தார். மெக்கீ மேல் எந்தத் தவறும் இல்லை என்று தீர்ப்பாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இதற்கிடையில் காலின்ஸ் இதுபோல் தவறாகத் தயார் செய்த அறிக்கைகள் பற்றித் தெரிய வந்ததால், அவர் வேலை பறிக்கப்பட்டு, அவரும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் இருவருமே சிறையில் இருக்கும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு பேருமே நம்பிக்கை சார்ந்த ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது 2015ல் தெரியவந்தது. “நான் செய்த காரியத்துக்காக வருத்தப்படுகிறேன் என்று சொல்வதைத் தவிர என்னால் எந்தவிதமான விளக்கமும் அளிக்கமுடியாது,” என்று மெக்கீயிடம் சொன்னதாக காலின்ஸ் பின்னர் கூறினார். “அதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிய மெக்கீ, காலின்ஸை மன்னித்தார். இருவருமே ஆண்டவரின் விலைமதிக்க முடியாத அன்பையும், “கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோசேயர் 3:13)என்று கற்றுத்தரும் தேவனின் மன்னிப்பையும் அனுபவித்ததால், சமரசம் செய்துகொள்ள முடிந்தது.  

இப்போது அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். “ஒருவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், உங்கள் இறுமாப்பைப் புறந்தள்ளிவிட்டு மன்னிப்பு கேளுங்கள் என்று உலகத்தாருக்குச் சொல்வதே எங்கள் இருவரின் கூட்டுக் குறிக்கோளாக இருக்கிறது” என்று காலின்ஸ் கூறினார். “யார் மீதாவது உங்களுக்கு வருத்தம், கோபம் இருந்தால், அந்த கசப்பான உணர்ச்சிகளை விட்டுத் தள்ளுங்கள்; ஏனென்றால் அது அவர்களைக் காயப்படுத்துவதாக நினைத்து நீங்கள் விஷம் குடிப்பது போன்றதாகும்.”

தேவன் தம்மை விசுவாசிப்பவர்களை அமைதியிலும், ஒருமைப்பாட்டிலும் வாழும்படி சொல்கிறார். நமக்கு “யார் மீதாவது மனஸ்தாபம்” இருக்குமென்றால், அதை நாம் தேவனிடம் சொல்லிவிடலாம். அவர் சமரசம் செய்வார் (வச. 13-15; பிலிப். 4:6-7)

விலங்குகளைக் கேளுங்கள்

காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.

கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.

யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கடவுள் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).

நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். கடவுள் பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் சோர்வடையும்போது

சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?

 

நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

 

கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).

 

நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.

தேவன் நம்மைப் பராமரிக்கின்றார்

என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.

நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.

தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).

அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!

ஏனென்பது இயேசுவுக்குத் தெரியும்

என்னுடைய நண்பர்களில் சிலர் சிறிதளவு சுகம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த வியாதியின் வேதனையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில நண்பர்கள் தங்களுடைய குடிபழக்கத்திலிருந்து விடுவிக்கப்படடிருந்தும், அந்த தூண்டுதலிலிருந்தும், உள் உணர்விலிருந்தும் முற்றிலும் விடுபடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் ஏன் இவர்களை முற்றிலுமாக சுகப்படுத்தாமல் இருக்கின்றார்? என நினைத்து ஆச்சிரியப்பட்டதுண்டு.

மாற்கு 8:2-26ல் வாசிக்கும்போது இயேசு ஒரு பிறவிக் குருடனை சுகப்படுத்தின நிகழ்ச்சியை வாசிக்கின்றோம். முதலாவது இயேசு அவனை அந்த கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார். பின்னர் அவனுடைய கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா? எனக் கேட்டார். அவன், “நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கின்றேன்” என்றான். இயேசு மறுபடியும் அவன் கண்களின் மேல் கைகளை வைத்தார். இப்பொழுது அவன் யாவரையும் தெளிவாகக் கண்டான்.

இயேசுவின் ஊழியகாலத்தில் இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மக்களையும், அவருடைய சீடர்களையும் அதிசயிக்கவும் குழப்பமடையவும் செய்தது (மத். 7:28, லூக். 8:10; 11:14) சிலரை அவரைவிட்டு ஓடும்படியும் செய்தது (யோவா. 6:66-66). இந்த இரு கட்ட அற்புதமும் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவனை உடனடியாக சுகப்படுத்தவில்லை?

ஏனென்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மனிதனுக்கும் அவனுடைய சுகத்தைக் கண்ட அவருடைய சீடர்களுக்கும் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில், இன்னும் நெருங்கி வர நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதாயினும், நம் வாழ்விலும், நாம் நேசிக்கின்றவர்களின் வாழ்விலும் தேவன் செயல்படுகின்றார் என்பதை நம்புவோம். நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் தேவையான பெலனையும், தைரியத்தையும், தெளிவையும் அவர் தருவார்.