1948 ஆம் ஆண்டு, ரஷ்யாவிலுள்ள ஓர் இரகசிய ஆலயத்தின் போதகராக இருந்த, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கார்லன் பாப்பவ் என்பவரை “விசாரணைக்காக,” அவருடைய வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். இரண்டு வாரங்கள் கழித்து, அவர் ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்யப் பட்டார், பத்து நாட்கள் அவருக்கு எந்த உணவும் வழங்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும், தான் ஒரு ஒற்றன் அல்ல என்பதையே தெரிவித்த போது அவரை அதிகமாக அடித்தனர், பாப்பவ் இந்த கடினமான நடத்துதலை தாங்கிக் கொண்டதோடு, தன்னோடுள்ள மற்ற கைதிகளையும் இயேசுவுக்குள் நடத்தினார். கடைசியாக பதினோரு ஆண்டுகள் கழித்து, அவர் விடுதலை பெற்றார். அவர் தொடர்ந்து தன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்தார். அவர் தொடர்ந்து போதனை செய்வதிலும், அடைபட்ட நாடுகளுக்கு வேதாகமத்தைக் கொடுப்பதற்காக பணம் திரட்டுவதிலும் தன் நாட்களைச் செலவிட்டு வருகின்றார்.

கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட அநேக இயேசுவின் விசுவாசிகளைப் போன்று, பாப்பவும் அவருடைய விசுவாசத்தின் நிமித்தம் உபத்திரவப்பட்டார். சிறையிலிரு ந்து விடுவிக்கப்பட்ட அவர் தன்னுடைய தேசத்திற்கு அனுப்பபட்டார், ஒரு மாதம் கழித்து அவர் மரித்துப் போனார். கிறிஸ்து பாடு பட்டு, மரணம் அடைந்த பின், அதனைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றிய அநேகர் கொலைசெய்யப் பட்டனர். இவை நடைபெறுவதற்கு, அநேக நாட்களுக்கு முன்பே, “நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” (மத்.5:10) என்று இயேசு கூறினார். இன்னும், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” (வ.11) என்றும் கூறினார்.

“பாக்கியவான்கள்” என்பதன் மூலம் இயேசு கருதியதென்ன? அவரோடு நாம் கொண்டுள்ள உறவின் முழுமையையும், மகிழ்ச்சியையும், ஆறுதலையும் குறிப்பிடுகின்றார் (வ.4, 8-10). துயரத்தின் மத்தியிலும் தேவனுடைய பிரசன்னம் அவரோடிருந்து அவரை பெலப் படுத்தியதால், பாப்பவ் உறுதியாயிருக்க முடிந்தது. நாம் எத்தகைய சூழலில் இருந்தாலும், நாம் தேவனோடு நடக்கும் போது அவருடைய சமாதானத்தை அநுபவிக்க முடியும். அவர் நம்மோடிருக்கின்றார்.