ஒரு நினைவு நாள் அன்று, இராணுவத்தில் பணிபுரிந்த அநேகரை நினைவுகூர்       ந்தேன், அதில் என்னுடைய தந்தையும் மாமாவும் அடங்குவர். இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். இவர்கள் வீட்டிற்குத் திரும்பியவர்கள். ஆனால் இந்த யுத்தத்தில், தங்களின் தேசத்திற்காக, ஆயிரக் கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களைப் பரிதாபமாக இழந்தனர். என்னுடைய தந்தையும், அந்த நாட்களில் இருந்த அநேக இராணுவ வீரர்களும், தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், தாங்கள் சரியென நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பதற்காகவும் தங்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

தங்களின் நாட்டைப் பாதுகாப்பதற்காக யாரேனும் மரித்தால், அவருடைய தியாகத்தைக் கனப்படுத்துபடி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை” (யோவான்15:13) என்ற வாசகம், அவருடைய அடக்க ஆராதனையின் போது வாசிக்கப் படும். ஆனால் இந்த வாசகத்தின் பின்னணி என்ன?

இயேசு மரிப்பதற்கு முன்பாக, கடைசி இராப் போஜனத்தின் போது, தன்னுடைய சீஷர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். இவர்கள் ஒரு சிறிய கூட்டமான சீஷர்கள், அதிலும் யூதாஸ், நம்பிக்கை துரோகம் செய்யும் படி, அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான் (13:18-30). எல்லாவற்றையும் தேவன் அறிவார், ஆயினும், தன் நண்பர்களுக்காகவும், துரோகிகளுக்காகவும் கிறிஸ்து தன்னுடைய ஜீவனை தியாகம் பண்ணும்படி தெரிந்து கொண்டார்.

இன்னும் அவருக்கு எதிரிகளாக இருக்கின்றவர்களும் (ரோமர் 5:10), ஒரு நாள் அவர் பேரில் விசுவாசம் வைப்பார்கள், என்பதால் அவர்களுக்காகவும் மனப்பூர்வமாக தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். அதற்குப் பதிலாக, அவர் எல்லாரையும் நேசித்தது போல “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்” என்று அவர் தன் சீஷர்களிடம் (அப்பொழுதும், இப்பொழுதும்) கேட்கின்றார் (யோவா.15:12). அவருடைய மிகப் பெரிய அன்பு, நம்மையும் நம்முடைய நண்பர்களையும், எதிரிகளையும், தியாகத்தோடு அன்பு கூர கட்டாயப் படுத்துகின்றது.