நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது, “சந்தர்ப்பவாத சிநேகிதி” ஒருத்தி இருந்தாள். எங்களுடைய சிறிய ஆலயத்தில், (என்னுடைய வயதில், நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால்) நாங்கள் இருவரும் சிநேகிதிகள். பள்ளிக்கூடத்திற்கு வெளியே எப்போதாவது நாங்கள் இருவரும் சேர்ந்து கொள்வோம், ஆனால் பள்ளிக் கூடத்தில், அது வேறு கதை. அவள் எப்போதவது என்னைப் பார்த்தால், அவளுக்கு அருகில் யாருமே இல்லையென்றால், ஒரு ஹலோ சொல்வாள். இதனை உணர்ந்து கொண்ட நான், பள்ளி வளாகத்தினுள் அவளுடைய கண்களில் படுவதேயில்லை. எங்களுடைய நட்பின் எல்லையை நான் அறிவேன்.

நாம் அனைவருமே ஒருபக்க நட்பு அல்லது மேலோட்டமான நட்பின் வேதனையை அநுபவித்திருப்போம். மற்றொரு வகை நட்பு உள்ளது. அந்த நட்பிற்கு வரம்பு கிடையாது. இவ்வகை நட்புடையவர்கள், ஒருமனமுடையவர்களாய், வாழ்க்கைப் பயணத்தை அர்ப்பணத்தோடு பகிர்ந்து கொள்வர்.

தாவீதும், யோனத்தானும் இத்தகைய சிநேகிதர்கள். யோனத்தான் தாவீதோடு ஒரு மனமுடையவனாய், அவனை “தன்னைப் போல சிநேகித்தான்” (1 சாமு. 18:1-3). சவுலின் மரணத்திற்குப் பின், யோனத்தான் அரசாட்சிக்கு வருவதற்கு உரிமையிருந்தும், அரசனாக, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தாவீதிடம் உண்மையுள்ளவனாயிருந்தான். சவுல், தாவீதைக் கொல்வதற்கு திட்டமிட்டிருந்தை அறிந்த யோனத்தான், தாவீதை இருமுறை காப்பாற்றினான் (19:1-6, 20:1-42).

எத்தனையோ இடர் வந்த போதும், தாவீதும், யோனத்தானும் “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” என்ற நீதிமொழிகள் 17:17 வார்த்தைக்கேற்ப உண்மையான நண்பர்களாக இருந்தனர். இந்த உண்மையான நட்பு, தேவன் நம் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது (யோவா. 3:16; 15:15). இவர்களின் நட்பின் மூலம், தேவன் நம் மேல் வைத்துள்ள அன்பும் எத்தனை ஆழமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.