எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

முழு கவனம்

தற்கால, தொழில் நுட்பத் துறையானது, நம்முடைய கவனத்தை தொடர்ச்சியாக  ஈர்க்கிறது. அதிலும் நவீன “வலைதள” அணுகுமுறை, வியத்தகு முறையில் மொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஒன்று சேர்ந்து, நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த அறிவை  தொடர்ச்சியாகப் பெற சிலருக்கு, நாம் கிரயம் செலுத்த வேண்டியுள்ளது. 

வெளியுலகத்தில் என்ன நடக்கிறது? நாம் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமா என்ற உந்துதல் நமக்குள்ளே ஏற்படுவதைக் குறிப்பிட, எழுத்தாளர் லிண்டா ஸ்டோன் என்பவர், “தொடர்ச்சியான பகுதி கவனம்” என்ற சொற்டொடரை பயன்படுத்தினார். அப்படியானால், அது நாளடைவில் தீராத பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுவோமேயானால், அது சரியே!

அப்போஸ்தலனாகிய பவுல் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் ஏற்பட்ட கவலையோடு போராடிக்கொண்டிருந்தாலும், நம்முடைய ஆத்துமா தேவன் தரும் சமாதானத்தைப் பெற ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறதை அவர் அறிவார். இதையே பவுல், துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்கிற, தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார் (1 தெச. 2:14). எனவே, பவுல் தேவனுடைய விசுவாசிகளை, “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்” (5:16-18) என்று தேற்றுகின்றார்.

“தொடர்ந்து ஜெபிப்பது” என்பது நம்மைச் சோர்வடையச் செய்வதாகத் தோன்றலாம், ஆனால் நாம் எத்தனை முறை நம்முடைய அலைபேசியை பயன்படுத்துகின்றோம்? இந்த உந்துதலை, ஏன் நாம் தேவனோடு பேசுவதற்கு பயன்படுத்தக்கூடாது?

நம்முடைய தேவைகளையே சந்திப்பதற்குப் பதிலாக, தொடர்ந்து தேவனுடைய சமுகத்தில் அமைதியாக ஜெபத்தில் தரித்திருப்பதை நாம் தேர்ந்து கொள்வது எத்தனை முக்கியமானது. நம்முடைய அனுதின வாழ்வில், கிறிஸ்துவின் ஆவியானவரைச் சார்ந்து கொண்டு, நம் பரலோகத் தந்தைக்கு நம்முடைய முழு கவனத்தையும் கொடுப்பதற்குக் கற்றுக்கொள்வோம்.

சாய்ந்த கோபுரம்

இத்தாலி தேசத்தில், பைசா என்ற இடத்திலுள்ள, மிகவும் பிரசித்திப் பெற்ற சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பாய், ஆனால் சான் பிரான்ஸிஸ்கோ பட்டணத்திலுள்ள சாய்ந்த கோபுரத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது, மில்லேனியம் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐம்பத்திஎட்டு தளங்களைக் கொண்ட, வானளாவிய இக்கட்டிடம், பெருமையோடு நிற்கின்றது, ஆனால் சற்று வளைந்து, சான் பிரான்ஸிஸ்கோ நகரின் மையப்பகுதியில்  உள்ளது.  

அதன் பிரச்சனை என்ன? அதனை வடிவமைத்த பொறியாளர்கள் தேவையான ஆழத்திற்கு அஸ்திபாரம் தோண்டவில்லை. எனவே, இப்பொழுது அதன் அஸ்திபாரத்தில் இன்னும் சில வேலை செய்யும்படி, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்காகும் செலவுத் தொகை, கட்டிடத்தைக் கட்டும் போது ஆன செலவையும் விட அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பூமியதிர்ச்சி வந்தால், இக்கட்டிடம் தகர்ந்து  போகாமல் காக்கப்பட, அதைச் சரிசெய்வது அவசியமென கருதுகின்றனர்.

இங்குள்ள, வேதனை தரும் பாடம் என்ன? அஸ்திபாரம் மிக முக்கியமானது ! உன்னுடைய அஸ்திபாரம் உறுதியாக இல்லையென்றால், பேராபத்து ஏற்படலாம். மலைப் பிரசங்கத்தின் முடிவில், இயேசுவும் இதைக் கற்பிக்கின்றார். மத்தேயு 7:24-27 ல், அவர் இரண்டு கட்டுமானர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஒருவன் கற்பாறையின் மீது கட்டுகிறான், மற்றவன் மணலின் மீது கட்டுகின்றான். தவிர்க்கமுடியாத ஒரு புயலின் போது, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு மட்டும் உறுதியாக நின்றது.

இது நமக்கு கற்றுத் தருவது என்ன? நம்முடைய வாழ்வு, கீழ்ப்படிதல் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் மேல் கட்டப்பட வேண்டுமென இயேசு திட்டவட்டமாகச் சொல்கின்றார் (வ.24). நாம் அவரைச் சார்ந்திருந்தால், அவருடைய வல்லமையும், அளவற்ற கிருபையும், நம் வாழ்வின் உறுதியான அஸ்திபாரமாக இருக்கும்.

நம் வாழ்வில் நாம் ஒருபோதும் புயலைச் சந்திப்பதில்லை என தேவன் நமக்கு வாக்களிக்க வில்லை, மாறாக, கற்பாறையான அவர் மீது நம் வாழ்வு கட்டப்படும் போது, எந்த புயல் வீசினாலும், அவர் மீதுள்ள விசுவாசமாகிய அஸ்திபாரம் அசைக்கப்படுவதில்லை.

ஆணிகளிடமிருந்தும் பாதுகாக்கும் தேவன்

என்னுடைய காரில் ஏறச் சென்ற போது, டயரில் ஏதோவொன்று மின்னியது என் கண்களில் பட்டது, அது ஓர் ஆணி, என்னுடைய காரின் பின் பக்க டயரின் பக்கவாட்டில் பதிந்திருந்தது. அதிலிருந்து காற்று வெளியேறும் சத்தம் கேட்கிறதாவென கவனித்தேன், நல்லவேளை, அது, துளையை நன்கு அடைத்துக் கொண்டிருந்தது.

நான் ஒரு டயர் கடைக்கு ஓட்டிச் சென்ற போது, எவ்வளவு காலமாக இந்த ஆணி அவ்விடத்தில் உள்ளது?சில நாட்களா? வாரங்களா? எனக்கே தெரியாத ஓர் அச்சுறுத்தலிலிருந்து, எவ்வளவு நாட்களாக நான் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? என ஆச்சரியப்பட்டேன்.

நம்மைச் சுற்றிலும் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று நாம் சில வேளைகளில் நம்பக்கூடும். ஆனால் இந்த ஆணி, அப்படியல்ல என்பதைக் காட்டுகிறது.

நம்முடைய வாழ்க்கை நிலையற்றதாகவும், கட்டுப்படுத்த முடியாததாகவும் காணப்படும் போது, நம்பிக்கைக்குரிய ஒரு தேவன் இருக்கிறார், அவர் மீது நம்பிக்கை வை. சங்கீதம் 18ல், தாவீது, தன்னைப் பாதுகாக்கின்ற தேவனைப் போற்றுகிறார்.(வ.35-36) “என்னை பலத்தால் இடைக்கட்டி,… என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்” (வச. 32,36) என்கின்றார். இந்த சங்கீதத்தில், தாவீது தன்னை தாங்குகின்ற தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டாடுகின்றார் (வச. 35).

நான் ,தாவீதைப் போன்று யுத்தத்திற்குச் செல்லவில்லை, எந்தவொரு தேவையற்ற பிரச்சனையிலும் தலையிடுவதில்லை, ஆகிலும் என் வாழ்வு, அடிக்கடி குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. 

நம் வாழ்வில் வரும் அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விலக்கிக் காப்பேன் என்று தேவன் கூறவில்லை, ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அவர் அறிவார், நான் எங்கே போகிறேன் என்பதையும் நான் எவற்றைச் சந்திப்பேன் என்பதையும் அவர் அறிவார். எல்லாவற்றையும் ஆளுகிறவர் அவர், என் வாழ்வின் ஆணிகளையும் அவர் அறிவார் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருப்பேன்.

அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்?

அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்?

நான் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள நடைபாதையில் வந்து கொண்டிருந்த போது, என்னுடைய மகள், கலக்கமுற்றவளாய் என்னை அலைபேசியில் கூப்பிட்டாள். நான், அவளை விளையாட்டு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல, சரியாக 6:00 மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். நான் சரியான நேரத்திற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன் ஆனால் என்னுடைய மகளின் குரல், அவளுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நான் உடனே, “இதோ வந்து விட்டேன், நீ ஏன் என்னை நம்பவில்லை?” என்று கேட்டேன்.

நான் இந்த வார்த்தைகளைப் பேசிய போது, “ என்னுடைய பரலோகத் தந்தை, இதே கேள்வியை எத்தனை முறை என்னிடம் கேட்டிருப்பார்?” என எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டேன். மன அழுத்தம் மிகுந்த வேளைகளில் நானும் பொறுமையை இழந்திருக்கின்றேன். நானும் விசுவாசத்தோடிருக்க, தேவன் அவருடைய வாக்குதத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்புவதற்குப் போராடியுள்ளேன். அப்பொழுது நான் “அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்? “ என்று கதறியுள்ளேன்.

கவலையோடு, நம்பிக்கையிழந்த வேளைகளில், தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய நன்மையையும், அவர் எனக்கு வைத்துள்ள நோக்கத்தையும் சந்தேகித்துள்ளேன். இஸ்ரவேலரும் அப்படியே சந்தேகப்பட்டனர். உபாகமம் 31 ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாகின்றனர், அவர்களுடைய தலைவன் மோசே, அவர்களோடு வரப்போவதில்லை என்பதையும் அறிவர், இப்பொழுது, மோசே அவர்களை தைரியப்படுத்துகின்றார். தேவன் தந்துள்ள வார்த்தையை நினைவு படுத்துகின்றார், “கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வ.8)

தேவன் நம்மோடு, எப்போதும் இருக்கிறார் என்ற வாக்குதத்தம், நம்முடைய விசுவாசத்தின் மூலைக்கல்லாயிருக்கிறது. (மத். 1:23; எபி. 13:5) வெளிப்படுத்தல் 21:3, இதனையே வலியுறுத்துகின்றது. “இதோ மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது , அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்”

தேவன் எங்கே இருக்கிறார்? அவர் இங்கே இருக்கிறார், இப்பொழுது இருக்கிறார், நம்மோடு இருக்கிறார், நம்முடைய ஜெபத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.

பொறுமையோடு காத்திரு

என்னுடைய மாமனாரின் எழுபத்தெட்டாம் பிறந்தநாளின் போது, அவரைக் கனப்படுத்தும்படி எங்களுடைய குடும்ப நபர்களனைவரும் வந்திருந்தனர். அப்பொழுது ஒருவர் அவரிடம், “இத்தனை ஆண்டுகளில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான காரியம் என்ன?” என்று கேட்டார். அவருடைய பதில் “பொறுமையாய் காத்திரு” என்பதே.

பொறுமையாயிரு என்ற வார்த்தையைச் சொல்வது எளிதாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய மாமனார் ஒரு குருட்டு நம்பிக்கையை அல்லது நேர் முகச் சிந்தனையைக் கொடுப்பதற்காக இதனைச் சொல்லவில்லை. அவர் கடந்த எழுபத்தெட்டு ஆண்டுகளும் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தவர். கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாக அல்ல. கிறிஸ்து அவருடைய வாழ்வில் செய்த கிரியையின் நிமித்தமே அவர் இப்படிச் சொன்னார்.

“பொறுமையாகக் காத்திரு” என்பதையே வேதாகமம் விடாப்பிடியான முயற்சியெனக் குறிப்பிடுகின்றது. அதுவும் நம்முடைய சொந்த முயற்சியால் நடக்கக்கூடியக் காரியமல்ல. தேவன் நம்மோடிருக்கின்றார், அவர் நமக்கு பெலனளிக்கின்றார், அவர் நம்முடைய வாழ்வில் நமக்கென வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவார் என தேவன் திரும்பத் திரும்ப வாக்களித்துள்ளார். எனவே தான் நாமும் விடாப்பிடியாகக் காத்திருக்கின்றோம். இந்தச் செய்தியை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொல்கின்றார்.
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).

அப்படியானால் “பொறுமையோடு காத்திருத்தல்” என்பது எதைக் காட்டுகிறது? ஏசாயா தீர்க்கனைப்பொறுத்தமட்டில் நம்பிக்கைக்கான அடிப்படையே, தேவனுடைய குணாதிசயங்கள்தான். தேவனுடைய நன்மையானது நம்மைப் பற்றியிருக்கும் பயத்தின் பிடியை முறித்து, அப்பா பிதாவையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொள்ளும்படி செய்கின்றது. ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தேவையான பெலனையும் உதவியையும் தருகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மைத் தாங்கி, தேவன் நமக்குத் தரும் ஆறுதலையும் வல்லமையையும் தந்து நம்மை பெலப்படுதுகிறது.

யார் வெற்றி பெறுவாரென அறிந்திருக்கும் போது

என்னுடைய மேற்பார்வையாளர், ஒரு கல்லூரியைச் சேர்ந்த கூடைப்பந்து அணியின் மிகத் தீவிர ரசிகர். இந்த ஆண்டு அவர்கள் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றனர். எனவே எங்களோடு பணிபுரியும் மற்றொரு நபர், அவருக்கு வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்பினார்.  பிரச்சனை என்னவெனில் என்னுடைய மேற்பார்வையாளருக்கு இறுதியாட்டத்தைக் காண இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விரக்தியிலிருந்தார். அவர் இந்த முடிவு தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும், தான் இந்த விளையாட்டைக் காண நேர்ந்திருந்தால் முடிவை எட்டும் வேளையில் தான் மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருப்பதாகவும், ஆனால் வெற்றி பெறுபவர் யாரென்பது தனக்குத் தெரியுமெனவும் கூறினார். 

நாளை என்ன நடக்கும் என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. சில நாட்கள் வழக்கமான நாட்களாகவும், சில கடுமையானதாகவும் இருக்கும். வேறு சில நாட்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். இன்னும் வேறு சில நாட்களில் வாழ்க்கை கடினமானதாயும், நீண்ட காலம் துயரம் நிறைந்ததாகவும் இருக்கும்.

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் நம்மால் முன்னறிய முடியாததாக  இருப்பினும், நாம் தேவனுடைய பாதுகாப்பினுள் சமாதானத்துடன் தங்கியிருக்க முடியும். ஏனெனில் என்னுடைய மேற்பார்வையாளரைப் போன்று நமக்கு முடிவு நன்கு தெரியும். யார் வெற்றி பெறுவார் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தல், கடைசி கால காட்சிகளை நமக்குக்  காட்டுகின்றது. மரணமும், பாதாளமும் தோற்கடிக்கப் பட்ட போது (20:10, 14), ஒரு மாபெரும் வெற்றியை யோவான் அழகாகச் சித்தரிக்கின்றார் (21:1-3). தேவன் தம் பிள்ளைகளோடு வாசம் பண்ணுகிறார் (வச. 3) அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். அந்த புதிய பூமியில் மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை (வச. 4).

நம்முடைய கடினமான நாட்களில் இந்த வார்த்தைகளை நாம் பற்றிக் கொள்வோம். இனி இழப்பும், அழுகையுமில்லை, உடைக்கப்பட்ட உள்ளங்களுமில்லை. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய இரட்சகரோடு நித்தியமாய் வாழ்வோம். அந்த நாள் எத்தனை மகிமையான கொண்டாட்டமாயிருக்கும்!

மிகப்பெரிய நாயும், நீரூற்றும்

ஏறக்குறைய எல்லா கோடைக்கால காலை வேளைகளிலும் ஒரு அருமையான நாடகத்தைப்போன்ற ஒரு காட்சி எங்கள் வீட்டிற்குப் பின்புறமுள்ள ஒரு பூங்காவில் நடைபெறும். அது ஒரு நீரூற்றையும், ஒரு மிகப்பெரிய நாயையும் உள்ளடக்கிய ஒரு காட்சி. காலை சுமார் 6:30 மணியளவில் நீரூற்றுக்களிலுள்ள நீரானது மேலே வரும். அதற்கு சற்று நேரத்திற்கு அப்பால் ஃபிஃபி என்கிற பெரிய நாய் (அந்த நாய்க்கு நாங்கள் வைத்த பெயர்) வந்துவிடும்.

ஃபிஃபியின் எஜமானி அதை கட்டவிழ்த்து விடும்போது, அந்த நாய் மிகவும் வேகமாக ஓடி, தனக்கு அருகாமையிலுள்ள நீரூற்றினை அடையும். அந்த நீரூற்றிலிருந்து வரும் நீரைத் தாக்கும். ஆனால், அதன் தண்ணீரோ, அந்த நாயின் முகத்தை நனைத்து விடும். அது அந்த நீரூற்றையே கடித்து சாப்பிட்டாலும் சாப்பிட்டு விடும் போலத் தெரிந்தது. இது ஃபிஃபி அந்த நீரூற்றினால் தன்னை முழுவதும் நனைத்துக்கொள்ள விரும்பியும், முழுவதுமாக நனையாமல் போகும் ஒரு காட்சியைத்தான் நாங்கள் அங்கு காண்போம்.

வேதாகமத்தில் பெரிய நாய்களோ அல்லது நீரூற்றுகளோ இல்லை. ஆயினும் எபேசியர் 3ம் அதிகாரத்தில் பவுலின் ஜெபமானது, எனக்கு ஃபிஃபியை ஞாபகப்படுத்துகிறது. இங்கு பவுல், எபேசிய விசுவாசிகள் தேவனுடைய அன்பினாலே நிரப்பப்படவும், 'சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து" (எபே. 3:18) என எழுதுகிறார்.

இன்று வரையிலும், நாம் நம் கற்பனைக்கு எட்டாத எல்லையற்ற அன்பினையுடைய தேவனோடு ஐக்கியம் கொள்ள அழைக்கப்படுகிறோம். அவருடைய நன்மையில் நாம் மூழ்கடிக்கப்படவும், நனையப்படவும், பூரண திருப்தியடையவும் வேண்டுமென விரும்புகிறார். நாம், தேவனுடைய, எதையும் எதிர்பாராத அன்பினாலே மூழ்கடிக்கப்பட்டு, நம்முடைய இருதயங்களை அன்பினாலே, அர்த்தமுள்ள மற்றும் நோக்கத்தோடு நிரப்பத் தகுதியான ஒருவரின் அன்போடு நாம் விடுதலையோடு பங்கு கொள்ளலாம்.

இனியும் ஓடவேண்டாம்

1983ம் வருடம், ஜுலை 18ம் தேதியன்று, அமெரிக்க விமானப்படையின் தளபதி ஒருவர் நியூ மெக்சிகோவிலுள்ள அல்புகர்க் என்கிற இடத்தில் காணாமல் போனார். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்தியே இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, அவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். “வேலையால் மனஅழுத்தம் அடைந்து” அவர் ஓடிவிட்டதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

முப்பத்தைந்து வருடங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார்! ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்றே பாதி வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்! அவர் எப்போதும் கவலையோடும் சித்தப்பிரமையோடும்தான் அலைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு “ஓடுவதில்” எனக்கும் கொஞ்சம் அனுபவமுண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஏதாவது கடமையைப் புறக்கணித்து, சரீர ரீதியாக நான் ஓடினது கிடையாது. மாறாக, ஏதாவது ஒன்றை நான் செய்யும்படி, ஏதாவது விஷயத்தை நான் எதிர்கொள்ளும்படி அல்லது அறிக்கையிடும்படி தேவன் என்னிடம் எதிர்பார்த்திருப்பார். அதில் நான் தவறியிருப்பேன். அதைதான் ஓடுவது என்று குறிப்பிடுகிறேன்.

யோனா தீர்க்கதரிசியும்கூட அவ்வாறு ஓடினவர்தானே! நினிவேயில் சென்று பிரசங்கிக்கும்படி தேவன் சொன்னதை அவர் கேட்கவில்லை (யோனா 1:1-3). ஆனால், தேவனை விட்டு அவர் எங்கே ஓடமுடிந்தது! அவருடைய சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் (வச. 4,17). புயல் வீசுகிறது, மீன் விழுங்குகிறது, மீனின் வயிற்றில் இருக்கிற சமயத்தில், தான் செய்த தவறுக்கான பலனை எண்ணிப்பார்க்கிறார்; தேவனிடம் உதவி வேண்டுகிறார் (யோனா 2:2).

யோனா குறையுள்ள ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவருடைய சம்பவத்திலும்கூட நம்மை ஊக்கப்படுத்துகிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, யோனா பிடிவாதமாக இருந்தபோதிலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. வேறுவழியே இல்லாத நிலையில் தேவனிடம் அவர் உதவிகேட்டபோது, தம் சொல்லுக்கு இணங்காத ஊழியனை அவர் கிருபையோடு காப்பாற்றினார் (வச. 2).  நம்மையும் அவர் அப்படித்தான் நடத்துகிறார்.

நம்மை அறிந்திருக்கிற இரட்சகர்

“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.

ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.

இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48

அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்!   அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.

இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.