வாக்குவாதத்தால் வெல்வார்களா? ஒருபோதுமில்லை. ஒரு சிறு நகரத் தலைவர் அடிரோண்டாக் பூங்காவில் வசிப்பவர்களை எச்சரித்தார், அங்கு சுற்றுச்சூழலாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு இடையேயான சண்டை, “அடிரோண்டாக் போர்களை” தூண்டியது. அப்ஸ்டேட் நியூயார்க்கில் உள்ள பழமையான வனப்பகுதியைக் காப்பாற்றுவதா அல்லது அதை மேம்படுத்துவதா என்ற அவர்களின் போராட்டத்தை, பெயரே விவரித்தது.
“நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள்!” ஒரு உள்ளூர் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் கத்தினார். ஆனால் விரைவில் ஒரு புதிய செய்தி வெளியானது. “ஒருவருக்கொருவர் சத்தம் போடாதீர்கள். ஒருவருக்கொருவர் பேச முயலுங்கள்”. சண்டையிடும் பிரிவுகளுக்கு இடையே பாலம் அமைக்க, சார்பற்ற ஒரு பொதுவான கூட்டணி உருவாக்கப்பட்டது. பொதுஜனங்களின் உரையாடல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது; இருபது ஆண்டுகளிலிருந்ததை விட அடிரோண்டாக் நகரங்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்தபோதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஏக்கர் காட்டு நிலம் பாதுகாக்கப்பட்டது.
சமாதானமான சகவாழ்வு ஒரு ஆரம்பமே, ஆனால் பவுல் மேலான ஒன்றைக் கற்பித்தார். கொலோசேயில் இருந்த புதிய விசுவாசிகளிடம், “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்” (கொலோசெயர் 3:8) என்றார். கிறிஸ்துவிலான புதிய சுபாவத்திற்கு தங்கள் பழைய வழிகளை மாற்றிக்கொள்ளுமாறு பவுல் அவர்களை வலியுறுத்தினார்: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” (வ.12) என்று அவர் எழுதினார்.
கிறிஸ்துவிலான புதிய வாழ்க்கைக்கு நமது பழைய கேவலமான வாழ்க்கையைச் சரணடையச் செய்வதற்கான இந்த அழைப்பு அனைத்து விசுவாசிகளுக்கும் இன்று விடுக்கப்படுகிறது. “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (வ.15). அப்போது, நம் சமாதானத்தில், உலகம் இயேசுவைக் காணும்.
உங்களால் இன்று யாரை மன்னிக்க முடியும்? யாருடன் நீங்கள் சமாதானம் ஆகக்கூடும்?
அன்பு தேவனே, கோபத்தில் என் பழைய வாழ்க்கை வெடித்து வெளியேறும் போது, உம்மில் எனக்கு புதிய சமாதானத்தைத் தயவாய் தாரும்.