‘நாம் என்ன செய்வது?’ வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொண்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று மஞ்சுவும், தயாளும் வேதனைப்பட்டனர். அவர்கள் வேதவாக்கியங்களைப் படித்து ஜெபித்தபோது, ​​முன்னோக்கிச் செல்ல ஒரு வழியும் உண்டானது: முதலில், அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களிடம் தங்கள் அன்பை வலுப்படுத்தினர்; இரண்டாவதாக, தேவனின் நல்ல திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் உண்மையையும் நல்லதையும் வெளிப்படுத்தினர்; மூன்றாவதாக, வேதாகம ஞானத்தின் அடிப்படையில் அவர்களுடன் எப்படி அன்புடன் பழகுவார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். காலப்போக்கில், மஞ்சுவும் தயாளும் கிறிஸ்து போன்ற அன்பை வெளிக்காட்டியதால்,  உறவுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

தேவனையும் தன்னையும் மதிக்காத வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்ட ஒரு பெண்ணை எப்படி தன் மனைவியாக்கிக் கொள்வது என்று ஓசியா யோசித்திருக்கலாம். தேவனோ, “தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள்” (ஓசியா 3:1) என்று தீர்க்கதரிசியை வழிநடத்தினார். தீர்க்கதரிசி அவள் மீதான தனது அன்பை வெளிப்படையாக வலுப்படுத்தினார்; அதே சமயம் அவர்களுக்கும், தேவனுக்கு முன்பாக அவர்களின் உறவுக்கும் எது தகுதியானது மற்றும் உண்மையானது என்பதை வெளிப்படுத்தினார் (வ.3). அவளுடனான அவரது உறவு, கலகவீட்டாரான பூர்வ இஸ்ரவேலுடனான தேவனின் சொந்த சவாலான உறவையே அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒரு தவறான போக்கைத் தேர்ந்தெடுத்தாலும், அவர் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை வழங்கினார், அவர் “அவர்களை மனப்பூர்வமாய்”  (14:4) சிநேகிப்பார். ஆனால் அவர்கள் அவருடைய வழிகளைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார், ஏனெனில் அவைகளே “செம்மையானவைகள்” (வ.9).

தேவன் ஞானத்தையும் பகுத்தறிவையும் அருள்வதால், வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டவர்களுக்கும் அவருடைய அன்பையும் சத்தியத்தையும் தொடர்ந்து வழங்குவோம். முன்னோக்கிச் செல்லும் பாதையை நமக்கு அவரது உதாரணமே வழங்குகிறது.