Archives: ஏப்ரல் 2024

தேவனுக்காய் கடந்துசெல்ல ஆயத்தம்

“ஹிட்டன் பிகர்ஸ்” என்ற புத்தகம் ஜான் க்ளென் விண்வெளிக்குச் செல்வதற்காக ஏறெடுத்த முன் ஆயத்தங்களை விவரிக்கிறது. 1962இல் உருவாக்கப்பட்ட கணினி கண்டுபிடிப்புகள் குறைபாடுகளுக்கு உட்பட்டது. ஆகவே க்ளென் அவைகளை நம்பாமல் விண்கலம் புறப்படுதற்கான எண் எண்ணிக்கையை யார் கூறுவது என்பதைக் குறித்து அவர் கவலைகொண்டார். பின் அறையில் இருக்கக்கூடிய ஓர் புத்திசாலி பெண்ணினால் எண்களை நேர்த்தியாய் இயக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அப்பெண்ணை நம்பினார். “அவள் எண்ணிக்கையை சொல்ல ஆயத்தமாயிருந்தால், நான் போவதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கிளென் கூறுகிறார். 

கேத்தரின் ஜான்சன், ஓர் ஆசிரியர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு தாய். அவள் இயேசுவை நேசித்தாள், அவளுடைய தேவாலயத்தில் ஊழியம் செய்தாள். தேவன் கேத்தரீனை வெகுவாய் ஆசீர்வதித்திருந்தார். 1950க்கு பிறகு, விண்வெளி திட்டத்திற்கு உதவுவதற்காக நாசா அவளை அழைத்தது. அவள் சிறப்பாய் தன் மூளையைப் பிரயோகிக்கக்கூடிய மனித கணினியாய் செயல்பட்டாள். 

நாம் புத்திசாலித்தனமான கணிதவியலாளர்களாக அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை மற்ற விஷயங்களுக்கு அழைக்கிறார்: “கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது” (எபேசியர் 4:7). நாம் பெற்ற அழைப்புக்கு தகுதியான வாழ்க்கையை வாழவேண்டும் (வச. 1). ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரே சரீரத்தின் அவயங்களாய் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம் (வச. 16). 

கேத்தரின் ஜான்சனின் கணக்கீடுகள் விண்வெளிப்பாதையை உறுதிப்படுத்தின. விண்கலத்தை சுற்றுப்பாதையில் செலுத்துவது என்பது தோராயமாய் பயணிக்கும் கிளென்னின் முயற்சியாகும். ஆனால் இது கேத்தரினின் அழைப்புகளில் ஒன்றாகும். அவள் ஓர் தாயாகவும், ஆசிரியராகவும், தேவாலய ஊழியராகவும் அழைக்கப்பட்டவள். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, தேவன் நம்மை எந்த நோக்கத்திற்காய் அழைத்திருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம். அவர் நமக்கு அருளியிருக்கிற கிருபையின் வரங்களைப் பயன்படுத்தி நம்முடைய அழைப்புக்கு ஏற்ற ஜீவியம் ஜீவிப்பதற்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோமா?

 

இயேசுவோடு வீட்டில்

“வீட்டைப் போன்ற இடமில்லை” என்றுக் கூறியபடியே டோரதி தனது ரூபி செருப்புகளின் குதிகால்களை உதைக்கிறாள். “தி விஸார்ட் ஆஃப் ஓஸ்” என்ற திரைப்படத்தில் டோரதி மற்றும் டோட்டோவை ஓஸிலிருந்து கன்சாஸில் உள்ள அவர்களது வீட்டிற்கு மாயமான முறையில் கொண்டுசெல்வதற்கு இவை தேவைப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, நம் அனைவருக்கும் போதுமான ரூபி செருப்புகள் இல்லை. டோரதியின் வீட்டிற்கான ஏக்கத்தை பலர் பகிர்ந்துகொண்டாலும், டோரதியைப்போல் நம்முடைய வீட்டை அடைவதற்கு நாம் அதிக சிரமப்படவேண்டியிருக்காது. 

நிலையில்லாத இந்த உலகத்தில் நாம் நமக்கு சொந்த இடத்தை அடைவோமா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே வாழ்கிறோம். இந்த உணர்வு சி. எஸ். லூயிஸால் வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆழமான யதார்த்தத்தையும் பிரதிபலிக்கக்கூடும்: “இந்த உலகத்தின் எந்த அனுபவமும் எனது ஏக்கத்தை நிறைவுசெய்யவில்லை என்றால், நான் வேறு உலகத்திற்காக படைக்கப்பட்டவன்” என்று அவர் சொல்லுகிறார். 

சிலுவை பாடுகளுக்கு முந்தின இரவில், இயேசு அந்த வீட்டைப் பற்றி தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2). அது நம்மை வரவேற்று அன்பை பகிர்கின்ற நித்திய வீடு. 

நாம் இப்போதே அந்த வீட்டில் வாழக்கூடும். நாமே தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கிறிஸ்துவில் உள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மத்தியில் வாழ்கிறோம். நம் இதயங்கள் ஏங்கும் வீட்டிற்கு இயேசு நம்மை அழைத்துச்செல்லும் நாள்வரை, நாம் அவருடைய சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் ஜீவிக்கலாம். நாம் எப்போதும் அவருடனேயே வீட்டில் தங்கியிருக்கிறோம். 

 

தேவன் நம் தேவைகளை அறிகிறார்

மணிலாவில் ஜீப்னி (பிலிப்பைன்ஸில் உள்ள பொதுப் போக்குவரத்தின் ஒரு வடிவம்) வாகன ஓட்டுநராக பணியாற்றிய லாண்டோ என்பவர், சாலையோரக் கடையில் நின்று கொட்டை வடிநீர் (காபி) அருந்தினார். கோவிட்-19 கட்டுப்பாட்டிற்கு பின்னர் தினசரி பயணிகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கினர். மேலும் இன்று விளையாட்டு நிகழ்வு இருப்பதால் அதிக பயணிகள் வரக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். அவ்வாறு வந்தால், நான் இழந்த பணத்தை மீண்டும் பெறக்கூடும், என் கவலைகள் மாறக்கூடும் என்று அவர் எண்ணினார். 

அவர் தனது வாகனத்தை இயக்க முற்படும்போது, அருகில் இருந்த இருக்கையில் ரோனியைக் கண்டார். அந்த துப்புரவு தொழிலாளி, ஏதோ கவலையுடன் அமர்ந்திருந்தார். ஏதோ சொல்ல வருகிறார் என்பது போல் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்று லாண்டோ நினைத்தார். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால் தாமதிக்க முடியாது. ஆனால் அவர் ரோனியை அணுகவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அதனால் அவரை அணுகி விசாரித்தார். 

கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30).  

ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார். 

 

ஒழுங்கின் தேவன்

சுரேஷ் மருந்து பெட்டியில் கிடைத்த அனைத்து மருந்துகளையும் எடுத்துக்கொண்டான். ஒழுங்கின்மை நிறைந்த ஓர் குடும்பத்தில் வளர்ந்த அவனது வாழ்க்கை சற்று குழப்பமானதாகவே இருந்தது. அவனுடைய தந்தை மரிக்கும்வரை தனது தாயாரை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்துள்ளார். தற்போது சுரேஷ் தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினான். ஆனால் தான் மரித்தால் எங்கே போவேன்? என்ற கேள்வி அவனுக்குள் உதித்தது. கர்த்தருடைய கிருபையால் சுரேஷ் அந்த தற்கொலை முயற்சியை அன்று கைவிட்டான். காலப்போக்கில், தன் நண்பர் ஒருவரின் வேதாகமத்தை வாசித்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். படைப்பில் இருந்த அழகும் ஒழுங்குமே, சுரேஷை இரட்சிப்புக்கு நேராய் ஈர்த்தது எனலாம். “நான் பார்க்கும் இந்த அழகான படைப்புகளுக்கு யாரோ ஒருவர் காரணமாய் இருக்கவேண்டும்” என்று அவன் கூறுகிறான். 

ஆதியாகமம் 1இல், அனைத்தையும் உண்டாக்கிய தேவனைக் குறித்து வாசிக்கிறோம். அப்போது “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (வச. 2). அந்த ஒழுங்கீனத்தை அவர் மாற்றுகிறார். “வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” (வச. 4). கடல்களுக்கு மத்தியில் வெட்டாந்தரையை ஏற்படுத்தினார் (வச. 10). வகைவகையான தாவரங்களை உண்டுபண்ணுகிறார் (வச. 11-12, 21, 24-25). “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும்... குடியிருப்புக்காகச் செய்து” படைத்தவர் (ஏசாயா 45:18), தொடர்ந்து தேசத்தை காத்து அதில் சமாதானத்தை உண்டுபண்ணி, சுரேஷ் ஒப்புக்கொடுத்ததுபோல நமது ஜீவியத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கச்செய்வார். 

வாழ்க்கை குழப்பமாகவும் சவாலாகவும் இருக்கலாம். அவர் ஒழுங்கீனத்தின் தேவனல்ல; சமாதானத்தின் தேவன் (1 கொரிந்தியர் 14:33). நாம் இன்று அவரை நோக்கிக் கூப்பிட்டு, அவருடைய படைப்பின் அழகையும் ஒழுங்கையும் அறிந்துகொள்ள முற்படுவோம்.