ஆபிரகாம் லிங்கன் தன் சிநேகிதரிடம், “நான் சில வேளைகளில் யாரிடத்திலும் செல்லமுடியாது என்று எண்ணும் இக்கட்டான தருணங்களில் முழங்காலில் நிற்ப்பதற்கு உந்தப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னாராம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரமான காலகட்டங்களில், ஜனாதிபதி லிங்கன் உருக்கமான ஜெபத்தில் நேரத்தை செலவழித்தது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டு மக்களையும் தன்னோடு சேர்ந்து ஜெபிக்குமாறு அறைக்கூவல் விடுத்திருக்கிறார். 1861 இல், “மனத்தாழ்மை, ஜெபம், மற்றும் உபவாசத்தின் நாள்” என்று ஒன்றை அறிவித்தார். 1863இல் அதை மீண்டும் செயல்படுத்தி, “தேவனுடைய பெரிதான வல்லமையை சார்ந்திருப்பது தேசம் மற்றும் மக்களின் கடமை. நம்முடைய மனந்திரும்புதல் தேவனுடைய இரக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற விசுவாசத்தோடும் மனத்தாழ்மையோடும் தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுதல் அவசியம்” என்று அறிவித்தார். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் கழித்த பின்னர், கோரேசு மன்னன் இஸ்ரவேலர்களை எருசலேமுக்கு திரும்பிப் போகும்படிக்கு கட்டளைப் பிறப்பித்தான். அவர்களும் எருசலேம் திரும்பினர். பாபிலோனிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாய் இருந்த நெகேமியா (நெகேமியா 1:6), மீண்டு திரும்பிய இஸ்ரவேலர்கள் “மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்” (வச.3) என்பதை அறிந்த மாத்திரத்தில், “உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி” (வச. 4) தேவனை நோக்கி கெஞ்சினான். அவன் தன் தேசத்திற்காய் தேவனிடத்தில் மன்றாடினான் (வச. 5-11). பின்னர், அவனுடைய தேசத்து ஜனங்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறான் (9:1-37). 

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரோமானியப் பேரரசின் நாட்களில், அப்போஸ்தலர் பவுலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கும்படி திருச்சபை விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 2:1-2). மற்றவர்களுடைய ஜீவியத்தைப் பாதிக்கும் காரணிகளுக்காக நாம் ஜெபிக்கும்போது, தேவன் அந்த ஜெபத்திற்கு பதில்கொடுக்கிறார்.