“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள்.

இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு. 

யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெடுத்தார் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) என்று சொல்லுகிறார்.

நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது.