“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்ச்சுகீசிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம்.

மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். 

இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மால் எண்ணி முடியாது.