தனிமை, ஆனால் மறக்கப்படவில்லை!
நீங்கள் அவர்களின் கதைகளைக் கேட்கும்போது, கைதியாக இருப்பதில் மிகவும் கடினமான காரியம் தனிமைப்படுத்தபடுதல் என்பதை புரிந்துகொள்வீர்கள். சிறைக் கம்பிகளுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் கைதிகள் ஆண்டுக்கு இரண்டுமுறை மாத்திரமே அவர்களின் சிநேகிதரையோ அல்லது பிரியமானவர்களையோ பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. தனிமை என்பது ஒரு நிலையான உண்மை.
யோசேப்பு தவறாய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்தது மிகவும் வேதனையளிக்கக்கூடிய அனுபவமாய் நான் எண்ணுகிறேன். அங்கே நம்பிக்கையின் ஒளி உதித்தது. பார்வோனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுடைய சொப்பனத்தை சரியாய் வியாக்கியானம் செய்யும்பொருட்டு தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார். யோசேப்பு அவனிடம் பார்வோன் தன்னை விடுவிக்கும்பொருட்டு தன்னைக் குறித்து பார்வோனிடம் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டான் (ஆதியாகமம் 40:14). “ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று. அந்தக் காத்திருப்பு நாட்களில், அவனுடைய சூழ்நிலைகள் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதபோதிலும், யோசேப்பு தனிமையில் இல்லை; தேவன் அவனோடிருந்தார். இறுதியில், பார்வோனின் வேலைக்காரன் அவனுடைய வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். யோசேப்பு இன்னுமொரு சொப்பனத்திற்கு விளக்கமளித்த பின்பே விடுவிக்கப்படுகிறான் (41:9-14).
நாம் மறக்கப்பட்டதாக உணரும்போதும், தனிமையின் சோகம் நம்மை ஆழ்த்தும்போதும், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.
வித்தியாசமான செய்கை
மேரி ஸ்லெஸர், 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க நாடான கலாபருக்கு (தற்போதைய நைஜீரியா) கப்பலில் சென்றபோது, மறைந்த டேவிட் லிவிங்ஸ்டோனின் மிஷனரிப் பணியைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் சக மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியே அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஊழியம். அவள் அதை எதிர்பார்க்காததால் சோர்ந்துபோனார். ஆகையால் அவள் ஒரு துணிச்சலான காரியத்தை செய்ய முன்வந்தாள். அவள் ஊழியம் செய்யும் மக்கள் வாழும் இடத்திற்கே குடியேறினாள். அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறையை தத்தெடுத்துக்கொண்டு, அவர்களின் உணவையே உண்ண நேரிட்டது. ஆதரவற்ற எண்ணற்ற குழந்தைகளை பராமரித்தாள். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, அந்த மக்களுக்கு அவள் நம்பிக்கையையும் நற்செய்தியையும் பிரஸ்தாபப்படுத்தினாள்.
நம்மை சுற்றிவாழும் மக்களின் தேவைகளை சந்தித்தலின் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலர் நன்கு அறிந்திருந்தார். 1 கொரிந்தியர் 12:4-5இல், “வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் மக்களின் தேவையை அறிந்து அவர் ஊழியம் செய்தார். ஒரு கட்டத்தில், பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் (9:22) என்று சொல்லுகிறார்.
நான் அறிந்த ஒரு தேவாலயம் சமீபத்தில், ஊனமுற்றவர்களும் இலகுவாய் ஆராதிக்கும்படியாக “அனைத்து திறன்” ஊழியம் ஒன்றைத் துவங்கியது. இது சுவிசேஷத்தை சமுதாயத்திற்கு இலகுவாய் கொண்டுசெல்லும் பவுல் அப்போஸ்தலரின் அணுகுமுறைக்கு ஒத்தது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு முன்பாக நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, புதுப்புது வழிகளில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த தேவன் நம்மை வழிநடத்துவார்.
சதாகாலமும் உண்மையுள்ள தேவன்
சேவியர், தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் அவனைப் பள்ளிக்குக் கூட்டிவந்து கூட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள், திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. நான் அவனை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் காரை நிறுத்திவிட்டு, ஜெபித்துக்கொண்டே அவனுடைய வகுப்பறையை நோக்கி ஓடும்போது, அவன் ஆசிரியையின் அருகாமையில் அமர்ந்துகொண்டு அவனுடைய பையை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். “மிஜோ, என்னை மன்னித்துவிடு; நீ நன்றாய் இருக்கிறாயா?” என்று கேட்க, அவன் பெருமூச்சுடன், “நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏன் தாமதமாய் வந்தீர்கள்?” என்று என்னை கடிந்துகொண்டான். நான் என் மகனை அதிகமாய் நேசிக்கிறேன், ஆகிலும் அவனை சில விஷயங்களில் சலிப்படையச் செய்திருக்கிறேன். அவன் ஒரு நாளில் தேவனோடும் சலிப்படைய நேரிடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தேவன் ஒருபோதும் தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்னும் சத்தியத்தை அவனுக்கு விளங்கச்செய்வதற்கு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்.
சங்கீதம் 33, தேவனின் நம்பத்தன்மையை மகிழ்ச்சியான துதிகளுடன் கொண்டாட நம்மை ஊக்குவிக்கிறது (வச. 1-3). ஏனெனில் “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது” (வச. 4). தேவன் படைத்த உலகத்தை அவரது வல்லமை மற்றும் நம்பகத்தன்மையின் உறுதியான சான்றாகப் பயன்படுத்தி (வச. 5-7), பூமியெங்கும் இருக்கும் மக்களுக்கு சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் (வச. 8).
திட்டங்கள் தோல்வியடையும்போதோ அல்லது மக்கள் நம்மை தாழ்மைபடுத்தினாலே நாம் தேவனிடத்தில் சலிப்படைய நேரிடுகிறது. ஆயினும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக” (வச. 11) நிற்கக்கூடியது. காரியங்கள் நமக்கு சாதகமாய் நடக்காவிட்டாலும் நாம் தேவனை துதிக்க பழகலாம். ஏனெனில் நம்முடைய அன்பான சிருஷ்டிகர் எல்லோரையும் எல்லாவற்றையும் தாங்கிப் பாதுகாக்கிறார். தேவன் சதாகாலமும் உண்மையுள்ளவர்.
நான் யார்?
ராபர்ட் டோட் லிங்கன் தனது தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஆபிரகாம் லிங்கனின் நிழலிலேயே வளர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ராபர்ட் அவருடைய தந்தையை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டார். லிங்கனின் நெருங்கிய நண்பரான நிக்கோலஸ் முர்ரே பட்லர், ராபர்ட் சொல்லும்போது, “மக்கள் என்னை ஒரு போர் செயலாளராக பார்க்கவில்லை, ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகிறார்கள். யாரும் என்னை இங்கிலாந்துக்கு அமைச்சராக பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்கிறார்கள். புல்மேன் நிறுவனத்தின் தலைவராக யாரும் என்னை பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகின்றனர்” என்று சொன்னதாக அறிவித்தார்.
பிரபலமானவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்த ஏமாற்றத்தை வாழ்க்கையில் அனுபவிப்பதில்லை. நம்மை யாரும் சரியாய் எடைபோடுவதில்லை என்கிற உணர்வு நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயினும், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதைக் காட்டிலும் மேலான மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய பாவங்களில் நாம் யார் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் யாராக மாறுகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று பவுல் எழுதுகிறார். நாம் பெலவீனர்களாய் இருந்தபோதிலும் தேவன் நம்மை நேசிக்கிறார். பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச.8) என்று எழுதுகிறார். தேவன் தன்னுடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததின் மூலம் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.
நாம் யார்? நாம் தேவனுக்கு பிரியமான பிள்ளைகள். அதைக்காட்டிலும் ஒருவன் என்னத்தை எதிர்பார்க்கக்கூடும்?
நம் எல்லா நாட்களின் தேவன்
ஒரு வெற்றியடையாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஜோனின் மருத்துவர் ஐந்து வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். நேரம் செல்ல செல்ல, பதட்டம் உருவானது. ஜோனும் அவரது கணவரும் வயதுசென்றவர்கள். அவர்களது குடும்பம் வெகு தொலைவில் வசித்து வந்தது. அவர்கள் இனி புதிய இடத்திற்கு செல்லவேண்டும். சிக்கலான மருத்துவமனை அமைப்பிற்கு செல்ல வேண்டும். மற்றொரு புதிய மருத்துவரை அவர்கள் சந்திக்கவேண்டும்.
இந்த சூழ்நிலைகள் அவர்களை மேற்கொண்டாலும், தேவன் அவர்களை பாதுகாத்தார். அவர்கள் காரில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு வழிகாட்டும் ஜீ.பி.எஸ் சிஸ்டம் தோல்வியடைந்தது. ஆனால் அவர்களிடம் வழிகாட்டும் மேப் பேப்பரில் கைவசம் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரமுடிந்தது. தேவன் அந்த ஞானத்தை அவர்களுக்கு அருளினார். அந்த மருத்துவமனையில் ஒரு கிறிஸ்தவ போதகர் அவர்களுக்காக ஜெபம் செய்து, மீண்டும் அன்றைக்கு மாலையில் அவர்களுக்கு உதவிசெய்தார். தேவன் அவர்களுக்கு உதவி அருளினார். அந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அது நல்ல முறையில் நடத்தேறியது என்னும் நற்செய்தியையும் ஜோன் கேள்விப்பட்டார்.
நாம் எல்லா நேரத்திலும் சுகத்தையும் மீட்டையும் பெற்றுகொள்ளாவிட்டாலும், இளைஞரோ முதியவரோ, தேவன் பெலவீனமான அனைவரோடும் எப்போதும் இருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாபிலோனின் சிறையிருப்பு இஸ்ரவேலர்களைப் பலவீனப்படுத்தியபோது, தேவன் அவர்களைப் பிறப்பிலிருந்தே ஆதரித்தார் என்றும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பார் என்றும் ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டினார். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்” (ஏசாயா 46:4) என்று தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
தேவனுடைய தேவை நமக்கு அவசியப்படும்போது, அவர் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம் தேவைகளை சந்தித்து, நம்முடைய ஜீவியத்தின் அனைத்து பகுதிகளிலும் நம்மோடிருக்கிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் எல்லா நாட்களிலும் நம்முடைய தேவன்.