சேவியர், தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் அவனைப் பள்ளிக்குக் கூட்டிவந்து கூட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள், திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. நான் அவனை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் காரை நிறுத்திவிட்டு, ஜெபித்துக்கொண்டே அவனுடைய வகுப்பறையை நோக்கி ஓடும்போது, அவன் ஆசிரியையின் அருகாமையில் அமர்ந்துகொண்டு அவனுடைய பையை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். “மிஜோ, என்னை மன்னித்துவிடு; நீ நன்றாய் இருக்கிறாயா?” என்று கேட்க, அவன் பெருமூச்சுடன், “நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏன் தாமதமாய் வந்தீர்கள்?” என்று என்னை கடிந்துகொண்டான். நான் என் மகனை அதிகமாய் நேசிக்கிறேன், ஆகிலும் அவனை சில விஷயங்களில் சலிப்படையச் செய்திருக்கிறேன். அவன் ஒரு நாளில் தேவனோடும் சலிப்படைய நேரிடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தேவன் ஒருபோதும் தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்னும் சத்தியத்தை அவனுக்கு விளங்கச்செய்வதற்கு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்.

சங்கீதம் 33, தேவனின் நம்பகத்தன்மையை மகிழ்ச்சியான துதிகளுடன் கொண்டாட நம்மை ஊக்குவிக்கிறது (வச. 1-3). ஏனெனில் “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது” (வச. 4). தேவன் படைத்த உலகத்தை அவரது வல்லமை மற்றும் நம்பகத்தன்மையின் உறுதியான சான்றாகப் பயன்படுத்தி (வச. 5-7), பூமியெங்கும் இருக்கும் மக்களுக்கு சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் (வச. 8).

திட்டங்கள் தோல்வியடையும்போதோ அல்லது மக்கள் நம்மை தாழ்மைபடுத்தினாலே நாம் தேவனிடத்தில் சலிப்படைய நேரிடுகிறது. ஆயினும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக” (வச. 11) நிற்கக்கூடியது. காரியங்கள் நமக்கு சாதகமாய் நடக்காவிட்டாலும் நாம் தேவனை துதிக்க பழகலாம். ஏனெனில் நம்முடைய அன்பான சிருஷ்டிகர் எல்லோரையும் எல்லாவற்றையும் தாங்கிப் பாதுகாக்கிறார். தேவன் சதாகாலமும் உண்மையுள்ளவர்.