1917 ஆம் ஆண்டில், ஒரு இளம் பெண் தையல்காரர் நியூயார்க் நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு பள்ளி ஒன்றில் சேர்க்கை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஆன்கோன் என்னும் அவள், வகுப்புகளுக்கு பதிவுசெய்ய வந்தபோது, அந்த பள்ளியின் இயக்குனர் அவளை வரவேற்கவில்லை என்று கூறிவிட்டார். மேலும் “நேரடியாய் சொல்லவேண்டுமானால், நீங்கள் ஒரு கருப்பினத்தை சேர்ந்த பெண் என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறி வெளிப்படையாய் நிராகரித்தார். ஆனால் அவள் வெளியேற மறுத்து “தயவுசெய்து என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று மனதிற்குள் ஜெபித்தாள். அவளது விடாமுயற்சியைக் கண்டு, பள்ளியின் இயக்குனர் அவள் சேர்ந்துகொள்வதற்கு அனுமதித்தார். ஆனால் வெள்ளையர்களுக்கு மட்டுமேயான வகுப்பறையிலிருந்து பின் கதவைத் திறந்து அவளைப் பிரித்து தனித்து உட்காரச்செய்து வகுப்பை கவனிக்கச் செய்தார்.

ஆனின் திறமையினால், அந்த பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன்பே பட்டம் பெற்று வெளியேறினார். மேலும் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி உட்பட உயர் சமூக வாடிக்கையாளர்களை தன் திறமையினால் வெகுவாய் கவர்ந்தார். அவர்களுடைய உலகப் புகழ்பெற்ற திருமண ஆடையையும் இவரே வடிவமைத்தார். அவருடைய தையல் ஸ்டுடியோவுக்கு மேலே ஒரு குழாய் வெடித்து, முதலில் வடிவமைக்கப்பட்ட ஆடையை சிதைத்தபின்பு தேவனுடைய உதவியை நாடிய அவள் மீண்டும் நேர்த்தியாய் இரண்டாம் ஆடையை வடிவமைத்தார்.

அந்த விடாமுயற்சி சக்தி வாய்ந்தது. குறிப்பாய் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். விடாமுயற்சியுடன் செயல்பட்ட விதவையைக் குறித்து இயேசுவின் உவமையில், அவள் அநீதியனான நீதிபதியிடம் நீதிகேட்டு போராடுகிறாள். முதலில், அவன் அவளை மறுத்தான். ஆனால் “இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால்… இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும்” (லூக்கா 18:5) என்று சொன்னான்.

அதேபோன்று, “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (வச. 7). அவர் நிச்சயமாய் செய்வார் (வச. 8) என்று இயேசு சொல்லுகிறார். அவருடைய ஊக்கப்படுத்தலோடு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஜெபத்தில் மன்றாடுவோம். தேவன் தன்னுடைய குறித்த நேரத்தில், நேர்த்தியான வழியில் பதில் செய்வார்.