ஒரு நாள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் தன்னுடைய வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் பிளேடைக் கொண்டு தன்னுடைய கையை கீறிக்கொள்வதைப் பார்த்தாள். அதை சரிசெய்வதற்கு அவனுடைய கையிலிருந்த அந்த பிளேடைப் பிடுங்கி, தூக்கியெறிந்தாள். அவளுடைய செயலுக்கு அவள் பாராட்டப்படாமல், பத்து நாட்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். ஏன்? பள்ளியில் அனுமதிக்கப்படாத பிளேடை அவள் சிறிது நேரம் கையில் பிடுங்கி வைத்திருந்ததை குற்றமாய் கருதி, அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை மறுபடியும் செய்வாயா? என்று அவளிடம் கேட்டபோது, “எனக்கு பிரச்சனை ஏற்பட்டாலும்… அதை மறுபடியும் செய்வேன்” என்று அவள் துணிச்சலாய் பதிலளித்திருக்கிறாள். நன்மை செய்யப்போன அவள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள் (அவளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்). இராஜ்யத்தைக் குறித்த இயேசுவின் போதனை, மார்க்கத் தலைவர்களுடன் இதுபோன்ற நல்ல பிரச்சனைக்கு வழிநடத்திற்று.  

சூம்பின கையுடைய ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை கேள்விப்பட்ட பரிசேயர்கள் தங்கள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டினர். ஓய்வுநாளில் குழியில் சிக்கியிருக்கும் ஒரு ஆட்டுக்குட்டியை மீட்பது அவசியம் என்று தன்னுடைய ஜனத்திற்கு விளங்கப்பண்ணிய இயேசு, “ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்” (மத்தேயு 12:12) என்று கூறுகிறார். அவரே ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என்பதினால், ஓய்வுநாளில் என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பதை இயேசுவே சொல்லுகிறார் (வச. 6-8). இயேசுவின் இந்த செய்கை மார்க்கத் தலைவர்களை கோபமூட்டும் என்பதை இயேசு அறிந்திருந்தும், இந்த சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்குகிறார் (வச. 13-14).  

கிறிஸ்தவர்கள் சிலவேளைகளில் நல்ல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அதில் மனிதர்களைப் பிரியப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படாமல், தேவனை மாத்திரம் பிரியப்படுத்த பிரயாசப்படுவோம். தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் அதை நாம் செய்ய முற்படும்போது, நாம் இயேசுவை பிரதிபலித்து, விதிமுறைகள் மற்றும் சடங்காச்சாரங்களைக் காட்டிலும் மக்கள் முக்கியம் என்று கருத முற்படுகிறோம்.