வணிக ஆய்வாளர் ஃபிரான்சிஸ் எவன்ஸ் ஒருமுறை, 125 காப்பீட்டு விற்பனையாளர்களை ஆய்வு செய்து, அவர்களை வெற்றிகரமாக்கியது என்ன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் திறமை காரணமாய் அமையவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. மாறாக, வாடிக்கையாளர்கள் அரசியல், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் தங்களோடு சரிநிகராய் இருப்பவர்களிடமே காப்பீடு எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிஞர்கள் இதை ஹோமோபிலி என்றழைக்கின்றனர். அதாவது, நம்மைப்போல் இருப்பவர்களை விரும்பும் போக்கு என்று அர்த்தம்.

நம்மைப் போன்ற சிந்தை கொண்டவர்களை விரும்பும்போக்கானது, திருமணம் மற்றும் சிநேகிதர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செய்கைகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் அதுபோன்ற சிந்தை ஆபத்தானது. நம்மைப் போன்ற சிந்தை மற்றும் எண்ணம் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது, சமுதாயமானது இனம், அரசியல், பொருளாதாரம் என்று பல பிரிவுகளாய் பிரியக்கூடிய அபாயம் நேரிடுகிறது.

முதலாம் நூற்றாண்டில், யூதர்கள் யூதர்களோடும், கிரேக்கர்கள் கிரேக்கர்களோடுமே பழக்கம் வைத்திருந்தனர். பணக்காரனும் ஏழையும் சேருவதேயில்லை. ரோமர் 16:1-16இல் ரோமத் திருச்சபையில், ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் (யூதர்கள்), எப்பனெத் (கிரேக்கன்), பெபேயாள் (அநேகருக்கு உதவிசெய்தவள் என்பதினால் ஐசுவரியவாட்டியாய் இருந்திருக்கக்கூடும்), மற்றும் பிலொலோகு (பொதுவாக அடிமைகளுக்கு கொடுக்கப்படும் பெயர்) என்று பல பெயர்களை பவுல் பட்டியலிடுகிறார். இந்த வித்தியாசமான மக்களை ஒன்றிணைத்தது எது? “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை” (கலாத்தியர் 3:28) என்னும் இயேசுவே அவர்களை ஒன்றிணைக்கிறார்.

நம்மைப் போன்ற சுபாவம் கொண்டவர்களோடு வாழ்வதும், திருச்சபைக்கு செல்வதும் இயல்பானது. ஆனால் இயேசு அதைக் கடந்துசெல்வதற்கு நம்மை உந்துகிறார். பல பிரிவுகளினாலே பிளவுபட்டிருக்கும் உலகத்தில், வித்தியாசமான மனிதர்களை ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாய் கூட்டிச் சேர்க்கிறார்.