Archives: ஏப்ரல் 2023

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6). 

அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம். 

இயேசுவில் தொடருவோம்

காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன். 

“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார். 

என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார். 

பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது. 

வாடகைக்கு நண்பர்

உலகத்தில் வாழும் பலருக்கு, வாழ்க்கை என்பது தனிமையான ஒன்றாய் மாறிவிடுகிறது. 1990லிருந்து நண்பர்கள் இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் பேர் தனிமையில் வாழுகிறார்கள். ஆனால் ஜப்பான் தேசத்தில், சில வயதானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிநேகிதர்கள் உருவாகின்றனர். 

இந்த தனிமை தொற்றுநோய்க்கு தொழில்முனைவோர் ஒரு “தீர்வை” கொண்டுவந்துள்ளனர். அது தான் வாடகைக்கு நண்பர். சில மணி நேரங்களுக்கு அவர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டால் அவர்கள் உங்களை ஒரு ஓட்டலிலோ அல்லது விருந்துக்கோ சந்தித்து பேசி பழகுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிநேகிதியிடம், உங்களின் வாடிக்கையாளர் யார் என்று கேட்டபோது, “நண்பர்களை உருவாக்கக்கூட நேரமில்லாமல், நீண்டநேரம் வேலை செய்யும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்கள்” என்று பதிலளித்தாள். 

பிரசங்கி 4ஆம் அதிகாரம், பிள்ளையும் சகோதரனுமில்லாமல் ஒண்டியாயிருக்கும் ஒரு நபரைக் குறித்து விவரிக்கிறது. அவனுடைய பிரயாசத்திற்கு முடிவில்லை, ஆனாலும் அவனுடைய ஐசுவரியத்தில் அவன் திருப்தியடைகிறதில்லை (வச. 8). “யாருக்காகப் பிரயாசப்படுகிறேன்?” என்று சரியான கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல சிநேகிதர்களை அவன் தனக்கென தெரிந்துகொண்டால், அவனுடைய பணிசுமை இலகுவாகவும், இக்கட்டில் அவனுக்கு துணையாகவும் இருக்கும் (வச. 9-12). இறுதியாக, சிநேகிதரில்லாத வெற்றியும் மாயையே (வச. 8) என்று முடிக்கிறார்.

முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (வச. 12) என்று பிரசங்கி சொல்லுகிறான். ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் நெய்யவும் முடியாது. உண்மையான நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது என்பதால், அவர்களை உருவாக்குவதற்கு தேவையான நேரத்தை முதலீடு செய்வோம். தேவனை நமது மூன்றாவது இழையாகக் கொண்டு, நம்மை இறுக்கமாக பிணைப்போம்.

எதிர்கால விசுவாசம்

சாரா தன்னுடைய பதினான்காம் வயதில் தன்னுடைய தாயை இழந்தாள். அவளும் அவளுடன் பிறந்தவர்களும், தங்கள் வீட்டை இழந்து நிற்கதியாய் நின்றனர். சில காலங்களுக்கு பிறகு, சாரா தன்னுடைய எதிர்கால சந்ததியருக்கு தலைமுறை தலைமுறையாய் இருக்கும்பொருட்டு சொத்துக்களை சேகரிக்கத் துவங்கினாள். அவள் மிகவும் கடினமாய் பிரயாசப்பட்டு தங்கள் குடும்பத்தினர் தங்கும்பொருட்டு நேர்த்தியான ஒரு சொந்த வீட்டை வாங்கினாள். 

எதிர்கால சந்ததியினருக்காக ஒரு வீட்டில் முதலீடு செய்வது என்பது, நீங்கள் பார்த்திராத எதிர்காலத்திற்கு செய்யும் ஒரு முதலீடாகும். எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பதாக தேவன் எரேமியா தீர்க்கதரிசியை ஒரு நிலத்தை கிரயப்படுத்தும்படிக்கு சொல்லுகிறார் (எரேமியா 32:6-12). தேவன் கொடுத்த இந்த கட்டளை ஏரேமியாவுக்கு சரியானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் அனைத்து சொத்துக்களும் எதிரிகளால் விரைவில் கைப்பற்றப்படப் போகிறது. 

ஆனால் தேவன் எரேமியாவுக்கு “நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (வச. 42) என்று கர்த்தர் சொன்னார். தீர்க்கதரிசியின் நிலத்தை கிரயப்படுத்தும் இந்த செயலானது, தன் ஜனத்திற்கு தேவன் அவர்களுடைய தேசத்தை மீண்டும் சொந்தமாகக் கொடுப்பதற்கு அடையாளமாக்கப்பட்டுள்ளது. பயங்கரமான அழிவிற்கு பின்னரும், மீண்டும் அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பதாகவும், சொந்த நிலங்களும் வீடுகளும் வாங்கப்படும் என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 43-44). 

தேவனுடைய வார்த்தையில் நாம் இன்று நம்பிக்கை வைத்து, நம்முடைய விசுவாசத்தில் முதலீடு செய்யத் துவங்கலாம். பூமியில் நம்முடைய சூழ்நிலை எல்லாவகையிலும் மறுசீரமைக்கப்படுதலை நாம் ஒருவேளை சாட்சியிடாமல் இருக்கலாம். ஆனால் தேவன் கோணலான அனைத்தையும் ஒரு நாள் நேராக்குவார் என்று உறுதியாய் நம்பலாம்.