உலகத்தில் வாழும் பலருக்கு, வாழ்க்கை என்பது தனிமையான ஒன்றாய் மாறிவிடுகிறது. 1990லிருந்து நண்பர்கள் இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் பேர் தனிமையில் வாழுகிறார்கள். ஆனால் ஜப்பான் தேசத்தில், சில வயதானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிநேகிதர்கள் உருவாகின்றனர். 

இந்த தனிமை தொற்றுநோய்க்கு தொழில்முனைவோர் ஒரு “தீர்வை” கொண்டுவந்துள்ளனர். அது தான் வாடகைக்கு நண்பர். சில மணி நேரங்களுக்கு அவர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டால் அவர்கள் உங்களை ஒரு ஓட்டலிலோ அல்லது விருந்துக்கோ சந்தித்து பேசி பழகுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிநேகிதியிடம், உங்களின் வாடிக்கையாளர் யார் என்று கேட்டபோது, “நண்பர்களை உருவாக்கக்கூட நேரமில்லாமல், நீண்டநேரம் வேலை செய்யும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்கள்” என்று பதிலளித்தாள். 

பிரசங்கி 4ஆம் அதிகாரம், பிள்ளையும் சகோதரனுமில்லாமல் ஒண்டியாயிருக்கும் ஒரு நபரைக் குறித்து விவரிக்கிறது. அவனுடைய பிரயாசத்திற்கு முடிவில்லை, ஆனாலும் அவனுடைய ஐசுவரியத்தில் அவன் திருப்தியடைகிறதில்லை (வச. 8). “யாருக்காகப் பிரயாசப்படுகிறேன்?” என்று சரியான கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல சிநேகிதர்களை அவன் தனக்கென தெரிந்துகொண்டால், அவனுடைய பணிசுமை இலகுவாகவும், இக்கட்டில் அவனுக்கு துணையாகவும் இருக்கும் (வச. 9-12). இறுதியாக, சிநேகிதரில்லாத வெற்றியும் மாயையே (வச. 8) என்று முடிக்கிறார்.

முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (வச. 12) என்று பிரசங்கி சொல்லுகிறான். ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் நெய்யவும் முடியாது. உண்மையான நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது என்பதால், அவர்களை உருவாக்குவதற்கு தேவையான நேரத்தை முதலீடு செய்வோம். தேவனை நமது மூன்றாவது இழையாகக் கொண்டு, நம்மை இறுக்கமாக பிணைப்போம்.