காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன். 

“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார். 

என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார். 

பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது.