Archives: பிப்ரவரி 2023

மிகவும் தனிமையானவன்

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். ஆதியாகமம் 39:21

ஜூலை 20, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் இறங்கும் விண்ணூர்தியிலிருந்து வெளியேறி, சந்திரனின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்கள் ஆனார்கள். ஆனால் அப்பல்லோ 11க்கான கட்டளை பிரிவின் ஊர்தியில் பறந்து கொண்டிருந்த அவர்களின் குழுவில் மூன்றாவது நபரான மைக்கேல் காலின்ஸைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சந்திரனின் மேற்பரப்பைச் சோதிக்க அவரது அணியினர் ஏணியில் இறங்கிய பிறகு, காலின்ஸ் சந்திரனின் தொலைதூரப் பக்கத்தில் தனியாகக் காத்திருந்தார். அவர் நீல், பஸ் மற்றும் பூமியில் உள்ள அனைவருடனும் தொடர்பில் இல்லை. நாசாவின் பணிக் கட்டுப்பாடு, "ஆதாமிற்குப்பின் மைக் காலின்ஸ் போலத் தனிமையை எவருமே அறிந்திருக்கவில்லை" என்று கூறியது.

நாம் முற்றிலும் தனியாக உணரும் நேரங்கள் உள்ளன. உதாரணமாக, யாக்கோபின் மகன் யோசேப்பு, இஸ்ரவேலிலிருந்து எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அவனுடைய சகோதரர்கள் அவனை விற்றபின் எப்படி உணர்ந்தான் என்று கற்பனை செய்து பாருங்கள் (ஆதியாகமம் 37:23-28). பின்னர் அவன் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்டதன் மூலம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டான். (39:19-20).

அருகில் எங்கும் குடும்பம் இல்லாத அந்நிய தேசத்தில் யோசேப்பு சிறையில் எப்படி உயிர் பிழைத்தான்? இதைக் கவனியுங்கள்: "அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து" (வச. 20-21). ஆதியாகமம் 39ல் உள்ள ஆறுதலான இந்த உண்மையை நான்கு முறை நினைவுபடுத்தப்படுகிறோம்.

நீங்கள் தனியாக உணர்கிறீர்களா அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறீர்களா? "நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசுவால் வாக்குப்பண்ணப்பட்ட தேவனின் பிரசன்னத்தின் உண்மையைப் பற்றிக் கொள்ளுங்கள். இயேசு உங்கள் இரட்சகராக இருப்பதால், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.

என்னால் கற்பனை செய்யத்தான் கூடும்

ஆராதனை பாடல் குழுவினர் "என்னால் கற்பனை செய்ய மட்டுமே முடியும்" என்ற பாடலை பாட தொடங்கியபோது, நான் ஒரு பெண்ணின் பின்னால் தேவாலய பீடத்தில் அமர்ந்தேன். அந்த பெண்ணின் இனிமையான குரல் என்னுடன் இசைந்துபோக,  என் கைகளை உயர்த்தி நான் தேவனைத் துதித்தேன். அவளுடைய சரீர பெலவீனங்களைப் பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அவளுடைய வரவிருக்கும் புற்றுநோய் சிகிச்சையின் போது நாங்கள் ஒன்றாக ஜெபம் செய்ய முடிவு செய்தோம்.

சில மாதங்களுக்குப் பிறகு, வனிதா என்னிடம் தன்னுடைய மரண பயத்தைப் பற்றிச் சொன்னாள். அவளது மருத்துவமனை படுக்கையில் சாய்ந்துகொண்டு, அவளது தலைக்கு அருகில் என் தலையைச் சாய்த்து, மெல்லிய குரலில் ஜெபித்து, அமைதியாக எங்கள் பாடலைப் பாடினேன். சில நாட்களுக்குப் பிறகு வனிதா இயேசுவை நேருக்கு நேர் ஆராதிக்கையில், அவள் எப்படி இருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அப்போஸ்தலராகிய பவுல் மரணத்தை எதிர்நோக்கியிருந்த தமது வாசகர்களுக்கு ஆறுதல் தரும் உறுதியை அளித்தார் (2 கொரிந்தியர் 5:1). நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனை நிறைந்தவைதான், ஆனால் நம்முடைய நம்பிக்கையானது பரலோக வாசஸ்தலத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதுவே இயேசுவுடனான நம்முடைய நித்திய வாழ்வு (வ. 2-4). அவருடன் வாழும் நித்திய ஜீவனுக்காக ஏங்கும்படி தேவன் நம்மை வடிவமைத்திருந்தாலும் (வ. 5–6), அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் இப்போது அவருக்காக வாழும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே தரப்பட்டுள்ளன (வ. 7-10).

நாம் இயேசுவைப் பிரியப்படுத்த வாழ்கையில், அவர் திரும்பி வருவதற்காக அல்லது நம்மை வீட்டிற்கு அழைப்பதற்காகக் காத்திருக்கும்போது, ​​அவருடைய நிலையான பிரசன்னத்தின் சமாதானத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம். நாம் பூமிக்குரிய உடலை விட்டு நித்தியத்தில் இயேசுவோடு சேரும் தருணத்தில் நாம் என்ன அனுபவிப்போம்? நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்!

உன் பெயர் என்ன?

முதல் கணவர் இறந்த பிறகு ஜீனா மறுமணம் செய்து கொண்டார். அவளுடைய புதிய கணவரின் குழந்தைகள் அவளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது அவரும் இறந்துவிட்டதால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ வீட்டில் தங்கியதற்காக அவளை வெறுக்கிறார்கள். அவளுடைய கணவன் அவளுக்காக ஒரு சிறிய தொகையை விட்டுச் சென்றான்; அவள் தங்கள் ஆஸ்தியைத் திருடுகிறாள் என்று அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஜீனா மிகவும் சோர்ந்துவிட்டாள், மேலும் அவள் வெறுத்தும் போனாள்.

நகோமியின் கணவர், குடும்பத்தை மோவாபுக்கு மாற்றினார். அங்கு அவரும் அவர்களது இரண்டு மகன்களும் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி தம் மருமகள் ரூத்தைத் தவிர, வெறுங்கையுடன் பெத்லகேமுக்குத் திரும்பினார். நகரமே கலங்கி, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள் (ரூத் 1:19). "எனது இனிமையானவள்" என்று பொருள்படும் அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவள் சொன்னாள். அவர்கள் அவளை "மாரா" என்று அழைக்க வேண்டும், அதன் அர்த்தம் "கசப்பு" ஏனெனில், "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்" (வ. 20–21) என்றாள்.

உங்கள் பெயர் கசப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உடல்நலக் குறைவால் நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். நீங்கள் சிறப்பாகத் தகுதி பெற்றீர்கள். ஆனால் அத்தகுதிக்குரிய நன்மையைப் பெறவில்லை. இப்போது நீங்கள் கசப்பாக இருக்கிறீர்கள்.

நகோமி கசந்துபோய் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தார். நீங்களும் திரும்ப வீட்டுக்கு வரலாம். பெத்லகேமில் பிறந்த ரூத்தின் வம்சாவளியான இயேசுவிடம் வாருங்கள். அவருடைய அன்பில் இளைப்பாறுங்கள்.

காலப்போக்கில், தேவன் நகோமியின் கசப்பிற்குப் பதிலாக தம் பரிபூரணத் திட்டத்தின் நிறைவேற்றத்தின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் (4:13-22). அவரால் உங்கள் கசப்பையும் மாற்ற முடியும். அவரிடம் வீட்டிற்கு வாருங்கள்.

நாம் அந்நியர்கள்

புதிய மொழி, பள்ளிகள், பழக்கவழக்கங்கள், போக்குவரத்து மற்றும் வானிலை என்று புதிய நாட்டில் எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் எப்படி ஒத்துப்போவது என்று யோசித்தார்கள். அருகிலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு புதிய நாட்டில் அவர்களின் புதிய வாழ்க்கையில் அவர்களுக்கு உதவ  முன்வந்தனர். பல்லவி, அந்த  தம்பதியினரை உள்ளூர் உணவு சந்தைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு என்ன இருக்கிறது, எப்படி பொருட்களை வாங்குவது என்பதைக் காட்டினார். அவர்கள் சந்தையில் சுற்றித் திரிந்தபோது, ​​அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து தங்களுக்குப் பிடித்த பழமான மாதுளைகளைப் பார்த்து, அவர்கள் கண்கள் விரிந்து, புன்னகைத்தனர். அவர்கள் ஒவ்வொறு குழந்தைகக்கும் ஒன்று வாங்கி, நன்றியுடன் பல்லவியின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்தனர். சிறிய பழங்களும் புதிய நண்பர்களும் அவர்களின் விசித்திரமான, புதிய நாட்டில் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

தேவன், மோசேயின் மூலம், தம் ஜனங்களுக்கான நியாயப்பிரமாணத்தை கொடுத்தார், அதில் அந்நியனைச் சுதேசிபோல எண்ணுவதற்கான கட்டளையும் அடங்கும் (லேவியராகமம் 19:34). "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக" என்று தேவன் மேலும் கட்டளையிட்டார். தேவனிடம் அன்பு கூருதலுக்குப் பிறகு, இயேசு இதை இரண்டாவது பெரிய கட்டளை என்று அழைத்தார் (மத்தேயு 22:39). ஏனெனில், "பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்" (சங்கீதம் 146:9).

தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர, புதிய நண்பர்கள் நம் நாட்டின் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகையில், நாமும்  "பூமியில் அந்நியர்கள்" (எபிரெயர் 11:13) என்பதன் உண்மையான அர்த்தத்தை நினைவூட்டிக் கொள்ளலாம். மேலும் வரவிருக்கும் புதிய பரலோக தேசத்தின் எதிர்பார்ப்பில் நாம் வளருவோம்.

நமது குருவைப் போல

ஒரு வைரல் வீடியோவில், மூன்று வயது வெள்ளை பட்டை கராத்தே மாணவி தனது பயிற்சியாளரை தத்ரூபமாகப் பிரதிபலித்தாள். ஆர்வத்துடனும் உறுதியுடனும் அந்தச் சிறுமி தன் ஆசானோடு  மாணவர்க்கான உறுதிமொழியைக் கூறினாள். பின்னர், நிதானத்துடனும் கவனத்துடனும், அழகான மற்றும் ஆற்றலின் சிறிய பிம்பமாகிய அவள், தன் ஆசிரியர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் பின்பற்றினாள். அவள் மிக அற்புதமாக அதைச் செய்தாள்!

இயேசு ஒருமுறை கூறினார், "சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40). உதாரத்துவம், அன்பு மற்றும் குற்றப்படுத்தாமை போன்றவற்றில் தம்மை பிரதிபலிக்குமாறு தம் சீடர்களுக்கு வலியுறுத்தினார் (வ. 37-38) மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்வது அவசியமென்றும் அவர் தம் சீடர்களிடம் கூறினார்: “ குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா” (வ. 39). குருட்டு வழிகாட்டிகளாக மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பரிசேயர்களை இந்த தரநிலை தகுதியற்றதாக்கியது என்பதை அவருடைய சீடர்கள் பகுத்தறிய வேண்டியிருந்தது (மத்தேயு 15:14). மேலும் அவர்கள் தங்கள் குருவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்துவின் சீடர்களின் நோக்கம் இயேசுவைப் போல் ஆக வேண்டும் என்பதுதான். ஆகவே, தாராள மனப்பான்மை மற்றும் அன்பைப் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைக் கவனமாகக் கவனித்து, அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

இன்று இயேசுவைப் பின்பற்ற முயலும் விசுவாசிகளாகிய நாம் அறிவிலும், ஞானத்திலும், நடத்தையிலும் அவரைப் போல் ஆக, நம் வாழ்வை நம் மாபெரும் குருவிடம் ஒப்படைப்போம். உதாரத்துவமான, அன்பான வழிகளைப் பிரதிபலிக்க அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்.