Archives: ஜனவரி 2023

ஆண்டவரே, நீர் யார்?

தன்னுடைய பதினாறாம் வயதில், கொக்கெய்ன் என்னும் போதை மருத்தை விற்றதற்காய் லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஏற்கனவே சிறைக்கு சென்றிருக்கிறான். தற்போது, கொலை முயற்சிக்காய் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய குற்றமனசாட்சியில் தேவன் அவனோடு இடைபட்டார். சிறைக்கம்பிகளுக்கு இடையில் இருக்கும்போது, தன் சிறுபிராயத்தில் தன்னை தவறாமல் திருச்சபைக்கு கூட்டிச்சென்ற தன்னுடைய தாயாரின் செய்கையை நினைவுகூர்ந்தான். தேவன் அவனுடைய இருதயத்தில் கிரியை செய்வதை உணர்ந்தான். லுய்ஸ் தன்னுடைய பாவத்தை விட்டு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டான். 

அப்போஸ்தலர் நடபடிகளில், பவுல் என்று பின்நாட்களில் அறியப்பட்ட சவுல் என்னும் வைராக்கியமான மனிதனைக் குறித்து பார்க்கமுடியும். அவன் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் (அப்போஸ்தலர் 9:1). ஸ்தேவானைக் கொலை செய்த கூட்டத்தின் தலைவனாயிருந்திருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது (7:58). சவுலின் இந்த மனசாட்சியோடு தேவன் இடைபடுகிறார். தமஸ்குவுக்கு போகும் வழியில், சவுலின் கண்கள் குருடாக்கப்பட்டு, இயேசு அவனிடம் “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” (9:4) என்று கேட்டார். அதற்கு சவுல், “ஆண்டவரே, நீர் யார்” (வச. 5) என்றான். அதுவே அவனுடைய புதிய வாழ்க்கையின் துவக்கம். அவன் இயேசுவை நாடி வந்தான். 

லுய்ஸ் ரோட்ரிகெஸ் ஆயுள் தண்டனைக்கு இடையில் பரோலில் வெளிவந்தான். அதிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் சென்ட்ரல் அமெரிக்காவிலும் இருக்கக்கூடிய சிறைச்சாலைகளில் சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடத் துவங்கினான். 

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மோசமான காரியங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் நம்முடைய இதயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி நம் மனசாட்சியோடு இடைபடுகிறார். இதுவே நம் பாவங்களில் இருந்து மனந்திரும்பி இயேசுவண்டை வருவதற்கான தருணம்.

விசித்திரமாய் உண்டாக்கப்பட்டுள்ளோம்

நான் சமீபத்தில் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தேன். என்னுடைய வீட்டின் அருகாமையில் மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அழுக்கான ஒரு பாதையின் வழியாய் சென்றபோது, அங்கே ஒரு விளையாட்டு மைதானம் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். குச்சிகளால் ஆன ஏணி, மரக்கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சல்கள், மேலும் கொம்புகளுக்கிடையே தொங்குபாலம் போன்றவைகள் இடம்பெற்றிருந்தது. யாரோ ஒருவர், இந்த பழைய கயிறுகளையும் கொம்புகளையும் விசித்திரமான ஒரு படைப்பாய் மாற்றியிருந்தார். 

சுவிஸ் மருத்துவரான பால் டூர்னியர், நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாதலால் (ஆதியாகமம் 1:26-27) விசித்திரங்களை கண்டுபிடிக்கிறவர்களாய் படைக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார். தேவன் உலகத்தை விசித்திரமாய் உண்டாக்கியபடியால் (வச. 1-25), மனிதர்களை நன்மை தீமை அறியத்தக்கவர்களாய் உண்டாக்கியபடியால் (3:5-6), “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்(புங்கள்)” (ஆதியாகமம் 1:28) என்று நமக்கு கட்டளையிட்டபடியாலும், நாம் இந்த உலகத்தை கனிகளோடு ஆண்டுகொள்ளும்போது ஆச்சரியங்களை கண்டுபிடிக்கிறவர்களாயும், புதிய காரியங்களை தோற்றுவிக்கிறவர்களாயும் இருக்கிறோம். அந்த கண்டுபிடிப்புகள் சிறியதோ அல்லது பெரியதோ, அது மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும் விதத்தில் இருக்கவேண்டும். அந்த விளையாட்டு மைதானத்தை உண்டாக்கியவர்கள், அதை பயன்படுத்தும் மக்களுடைய மகிழ்ச்சியினால் திருப்தியடைவார்கள் என்று நான் நம்புகிறேன். 

ஒரு புதிய இசையை தோற்றுவிப்பதாகட்டும், சுவிசேஷ ஊழியத்திற்கான புதிய யுக்தியாயிருக்கட்டும், உடைந்துபோன திருமண வாழ்வை மீண்டும் புதிதாய் துவக்குவதாய் இருக்கட்டும், இதுபோன்ற அனைத்துவிதமான விசித்திரங்களும் நம்மை ஊக்கப்படுத்தக்கூடியவைகள். எந்த புதிய காரியத்தை செய்வதற்கு நீங்கள் தற்போது தூண்டப்படுகிறீர்கள்? தேவன் தற்போது உங்களை புதிய விசித்திரத்திற்கு நேராய் வழிநடத்திக்கொண்டிருக்கலாம். 

கூடு கட்டுமிடம்

சாண்ட் மார்டின்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ஒருவகையான பறவைகள் ஆற்றங்கரை மணலில் தன்னுடைய கூட்டை அமைத்துக்கொள்ளக் கூடியவைகள். தென்கிழக்கு இங்கிலாந்தின் நில மேம்பாடு வாரியத்தினரால் அவைகள் தங்கும் மணல் கூடுகளின் விகிதம் கணிசமாய் குறைந்தது. குளிர்காலத்தில் இடம்பெயரும் இப்பறவைகள் திரும்பி வரும்போது, அவைகள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்வதற்கு போதுமான இடங்கள் இல்லாமல் திணறின. அவைகளை பாதுகாக்க எண்ணிய அதின் பாதுகாவலர்கள், அவைகள் தங்குவதற்கென்று பல செயற்கையான மணல் வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். செயற்கையான மணலைக் கொண்டு மணல் சிற்பம் வடிக்கும் நிறுவனத்தின் துணையோடு பல ஆண்டுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாய் வசிக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.  

இந்த இரக்கமுள்ள செய்கை, இயேசு தன் சீஷர்களை ஆறுதல்படுத்த பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. அவர் இந்த உலகத்தை விட்டு பரமேறியபோது, சீஷர்கள் அவரோடு வரமுடியாததால், நான் போய் பரலோகத்தில் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துவேன் என்று வாக்களிக்கிறார் (14:2). இயேசு அவர்களை விட்டு சீக்கிரம் கடந்துபோய்விடுவார், அவர்களை அவரை பின்பற்றி செல்ல முடியாது என்னும் நிஜம் அவர்களை வருத்தப்படுத்தினாலும், அவருடைய இந்த வருகையானது அவர்களையும் நம்மையும் பரலோகத்திற்கு வரவேற்கும் தெய்வீகமான முயற்சியே. 

இயேசுவின் சிலுவை தியாகம் இல்லாதிருக்குமானால், பிதாவின் வீட்டில் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் “அநேக வாசஸ்தலங்களுக்கு” (வச. 2) நமக்கு வரவேற்பு கிடைக்காமலிருந்திருக்கும். நமக்கு முன்னே அவைகளை ஆயத்தப்படுத்துவதற்காய் சென்ற இயேசு, மீண்டும் திரும்பி வந்து அவருடைய தியாகமான அன்பின் மீது விசுவாசம் வைப்பவர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் செல்வார். அவரோடு மகிழ்ச்சியாய் நித்தியத்தில் நாம் இளைப்பாறுவோம்.

புதிய தரிசனம்

என்னுடைய புதிய கண்ணாடியை அணிந்துகொண்டு பலிபீடத்திற்கு வந்து அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்கையில் என்னுடைய சிநேகிதி ஒருவள் திருச்சபையின் வழிப்பாதைக்கு அருகாமையில் அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவளைப் பார்த்த நான் கையசைத்து சைகை செய்தேன். அவள் நான் இருக்கும் இடத்திலிருந்து தூரத்திலிருந்தாலும் அவளை எட்டித் தொடும் தூரத்தில் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. ஆராதனை முடிந்த பின்பு, நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது தான் எனக்கு தெரிந்தது, அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள் என்பது. என்னுடைய புதிய கண்ணாடியில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் அவள் வழக்கத்திற்கு மாறாக, எனக்கு அருகாமையில் அமர்ந்திருப்பதுபோல் தெளிவாய் பார்க்க முடிந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்பட்ட தேவன், பாபிலோன் சிறையிருப்பில் சிக்கியிருக்கும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு புதிய பார்வை வேண்டும் என்று விரும்பினார். அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்... நான் வனாந்தரத்திலே வழியை... உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19) என்று உரைத்தார். அவருடைய இந்த நம்பிக்கையின் செய்தியானது, தேவன் அவர்களை உருவாக்கினார், மீட்டெடுத்தார், என்றும் அவர்களோடே இருக்கிறார் என்ற தகவலையும் மறுவுறுதிப்படுத்தியது. “நீ என்னுடையவன்” (வச. 1) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். 

நீங்கள் இன்று எந்த பிரச்சனையின் ஊடாய் கடந்து சென்றாலும், பழமையானதை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய பாதையில் நடக்கும் புதிய பார்வையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளுவார். தேவனுடைய அன்பினாலே (வச. 4), அது உங்களை முழுவதுமாய் தாங்கியிருக்கும். உங்களுடைய வேதனை மற்றும் கட்டுகளின் மத்தியில் தேவன் உங்களுக்காய் செய்யும் கிரியைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? நம்முடைய வனாந்திரமான சூழ்நிலைகளில் தேவன் நமக்காய் செய்யும் கிரியைகளைப் பார்க்கக்கூடிய ஆவிக்குரிய கண்ணாடியை நாம் அணிந்துகொள்ள பிரயாசப்படுவோம். 

மீட்புப்பணி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பண்னை விலங்குகள் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வல ஊழியர்கள், 34 கிலோ எடைகொண்ட அழுக்கு கம்பளி தோலுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆட்டை மீட்டனர். அந்த ஆடானது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கண்டறிந்தனர். அதின் மேலிருக்கும் இறுகிய கம்பளித் தோலை கவனமுடன் வெட்டியெடுத்தனர். அதின் பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டு புஷ்டியான ஆகாரத்தை சாப்பிட, அதின் கால்கள் வலுவடையத் துவங்கியது. அதை மீட்டவர்களுடனும் சரணாலயத்தில் இருந்த மற்ற விலங்குகளுடனும் அது பழகுவதை மிகவும் ஆரோக்கியமாய் எண்ணியது. 

சங்கீதக்காரன் தாவீது, அதிக பாரத்தைச் சுமந்து தொலைக்கப்பட்டவராய், மீட்பின் அவசியத்தை எதிர்பார்த்திருக்கும் வேதனையை புரிந்துகொண்டான். சங்கீதம் 38இல், தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாய், கைவிடப்படுதலையும் ஆதரவற்ற நிலைமையையும் அனுபவித்தான் (வச. 11-14). ஆகிலும் அவன் விசுவாசத்தோடு, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்” என்று ஜெபித்தான். தாவீது அவனுடைய இக்கட்டான சூழ்நிலையையும் மாம்ச பெலவீனத்தையும் மறுக்கவில்லை (வச. 16-20). ஆகிலும் அவனுடைய தேவன் சரியான நேரத்தில் அவனுக்கு சகாயஞ்செய்ய இறங்குவார் என்று நம்பியிருந்தான் (வச. 21-22). 

நாம் சரீரப்பிரகாரமான, மன ரீதியான, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாரங்களால் அழுத்தப்படுவதாக உணரும்போது, தேவன் நம்மை உண்டாக்கியதிலிருந்து தீர்மானித்திருந்த மீட்புப்பணியின் மூலம் நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கி, “என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (வச. 22) என்று விண்ணப்பித்து மன்றாடலாம்.