Archives: ஜனவரி 2023

திருப்தியாயிரு

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொடூரமான படுகொலை 1960களில் அமெரிக்க சட்ட உரிமைகள் இயக்கத்தின் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டு சரியாய் நான்கு நாட்கள் கழித்து, விதவையாக்கப்பட்ட அவருடைய மனைவி கொரேட்டா ஸ்காட் கிங் தன்னுடைய கணவருடைய ஸ்தானத்தில் நின்று ஒரு அமைதியான எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தினார். கொரேட்டா நீதியை நிலைநாட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். பல விஷயங்களில் சாதனையாளராகவும் திகழ்ந்தார். 

இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்று சொல்லுகிறார். தேவன் ஒரு நாள் பூமியில் வந்து அநீதிகளை தகர்த்து நீதியை நிலைப்படுத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதுவரை கொரேட்டாவைப் போன்று கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பூமியில் நீதியை நிலைப்படுத்த முயற்சிப்போம். ஏசாயா 58 ஆம் அதிகாரம், தேவன் தன் ஜனங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்பதை பட்டியலிடுகிறது: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும்.. நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும்.. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” (வச. 6-7). ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காய் பிரயாசப்படுவது நம்முடைய தேவபக்தியை வெளிப்படுத்துகிற ஒரு விதம். ஏசாயா, தேவ ஜனம் நீதியைத் தேடுவதை விடியற்கால வெளிச்சத்துடன் ஒப்பிட்டு, அது சுகவாழ்வை கொண்டுவரும் என்று கூறுகிறார் (வச. 8). 

இன்று தேவன், அவருடைய நீதியைக் குறித்த நம்முடைய பசிதாகத்தை பிரதிபலிக்க உதவிசெய்வாராக. அவருடைய வழியில் நாம் நீதியை தேடும்போது, அதில் நாம் திருப்தியடைவோம் என்று வேதம் சொல்லுகிறது. 

புலம்பலிலிருந்து துதிக்கு

தன்னுடைய மகன் மனந்திரும்பி தேவனிடம் வரும்படிக்கு மோனிகா பாரத்தோடு ஜெபித்தாள். அவள் அவனுடைய தவறான நடக்கைகளைக் கண்டு மனமுடைந்துபோனாள். அவன் வாழ்ந்த பல்வேறு இடங்களில் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேயிருந்தாள். சூழ்நிலை கைமீறியதாய் தெரிந்தது. திடீரென்று ஒரு நாளில் அது சம்பவித்தது. அவளுடைய மகன் தேவனை சந்திக்க நேரிட்டது. அவன் கிறிஸ்தவ திருச்சபையின் ஒரு பெரிய இறையியல் நிபுணராய் மாறினான். அவர் வேறு யாருமில்லை, நம் அறிவுக்கு உட்பட்ட, ஹிப்போவின் பிஷப்பாகிய அகஸ்டின். 

“கர்த்தாவே... எதுவரைக்கும்?” (ஆபகூக் 1:2). அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் அநீதி செய்யும்போது தேவன் மௌனமாயிருக்கிறதைக் கண்டு ஆபகூக் தீர்க்கதரிசி புலம்புகிறார் (வச. 4). நமக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் நாம் தேவனை தேடி ஓடிய நாட்களை நினைத்துப்பாருங்கள். வியாதி, பணப்பிரச்சனை அல்லது பிள்ளைகள் தேவனை விட்டு வழிதப்பிப் போகிற சூழ்நிலைகள் என்று அநேகம் இருக்கிறது. 

ஒவ்வொருமுறை ஆபகூக் புலம்பும்போதும், தேவன் அவருடைய கதறலைக் கேட்டார். நாம் விசுவாசத்தில் காத்திருக்கும்போது, தீர்க்கதரிசியைப்போலவே நம்முடைய புலம்பலை துதியாய் மாற்றப் பழகலாம். அவர் சொல்லும்போது, “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:18) என்று தேவனை துதிக்கிறார். அவரால் தேவனுடைய வழிகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ஆபகூக் தேவனை நம்பினார். புலம்பலும் துதியும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விசுவாசத்தின் கிரியைகளே. நாம் தேவனுடைய குணாதிசயங்களை அடிப்படையாய் வைத்து அவரிடத்தில் புலம்புகிறோம். அவர் யார் என்பதை அடிப்படையாய் வைத்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் துதிக்கிறோம். ஒரு நாள், அவருடைய கிருபையினால் புலம்பல்கள் எல்லாம் துதியாய் மாறும்.

புதிய ஆரம்பம்

சங்கீதம் 120ஐக் குறித்த தன்னுடைய நேர்த்தியான விளக்கத்தில், யூஜின் பீட்டர்சன், “நாம் சத்தியம் என்று எதை நம்பியிருந்தோமோ அது பொய் என்ற வலிமிகுந்த உணர்வைப் பெறும்போதே கிறிஸ்தவ விழிப்புணர்வு துவங்குகிறது” என்கிறார். சங்கீதம் 120, எருசலேமுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களால் பாடப்பட்ட “உன்னதப்பாடல்” வரிசையில் (120-134) முதலாவதாய் இடம்பெற்றுள்ளது. பீட்டர்சன் இந்த கருத்தை “ஒரே திசையில் நிலையான கீழ்ப்படிதல்” என்னும் பதிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சங்கீதங்கள் அனைத்தும் தேவனிடத்தில் கிட்டிசேரும் ஆவிக்குரிய பயணத்தை முன்வைக்கிறது. 

நம்முடைய புதுமையான ஒன்றின் தேவையைக் குறித்த ஆழமான விழிப்புணர்வுடன் மட்டுமே துவங்கக்கூடியது. பீட்டர்சன் சொல்லுவதுபோல, “கிறிஸ்தவ பாதையில் ஒருவன் ஈர்க்கப்படுவதற்கு அவன் வெறுக்க பழகவேண்டும்…. கிருபையின் பாதையை தெரிந்துகொள்வதற்கு முன்பு உலகத்தின் பாதைகளை வெறுக்க பழகவேண்டும்.” 

நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த உலகத்தைப் பார்த்து நாம் எளிதில் உடைக்கப்பட்டவர்களாயும் சோர்வடைந்தவர்களாயும் கருதக்கூடும். மற்றவர்களுக்கு ஏற்படுகிற தீங்கை இவ்வுலகம் அலட்சியப்படுத்துகிறது. சங்கீதம் 120, இதை தெளிவாய் சொல்லுகிறது: “நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்” (வச. 7). 

நம்முடைய பொய்களிலிருந்து விலக்கி சமாதானத்திற்குள் நடத்தும் நம்முடைய ஒரே உதவி வரும் கன்மலையாகிய நமது இரட்சகரினால், நம்முடைய காயங்கள் அனைத்தையும் புதிய ஆரம்பமாய் மாற்றமுடியும் என்று நம்புவதில் சுகமும் சுதந்திரமும் இருக்கிறது (121:2). இந்த புதிய ஆண்டிற்குள் நாம் நுழையும்போது, அவரையும் அவருடைய வழிகளையும் நாம் நோக்குவோம்.

மக்கள் கூட்டம்

தத்துவஞானியும் எழுத்தாளருமான ஹேன்னா அரெண்ட் (1906-75), “சரித்திரத்தில் மனிதர்கள் மிகவும் பலம்வாய்ந்த பேரரசர்களையும் எதிர்த்து அவர்கள் முன்பு தலைவணங்க மறுத்திருக்கின்றனர்” என்று குறிப்பிடுகிறார். மேலும், “அதில் சிலர் மக்கள் கூட்டத்தை எதிர்க்கவும், கலகக்கார கூட்டத்திற்கு முன் துணிச்சலாய் நிற்கவும், ஆயுதமில்லாமல் அவர்களின் வெறித்தனமான செய்கைகளை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றனர்” என்று சொல்லுகிறார். அரெண்ட் ஒரு யூத பெண்மணியாக, அவளுடைய சொந்த தேசமான ஜெர்மனியில் இதை நேரில்  பார்த்திருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப்படுவது என்பது பயங்கரமான ஒரு காரியம். 

பவுல் அப்போஸ்தலரும் அதுபோன்ற ஒரு புறக்கணிப்பை அனுபவித்திருக்கிறார். பரிசேயனாகவும் யூத போதகராகவும் பயிற்சிபெற்ற அவர், உயிர்த்தெழுந்த இயேசுவை சாட்சியிட்டபோது, அவருடைய வாழ்க்கை தலைகீழாய் மாறியது. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும்பொருட்டு தமஸ்குவுக்கு பவுல் கடந்துபோகிறான் (அப்போஸ்தலர் 9). அவருடைய மனந்திரும்புதலுக்கு பின்னர், அவர் தம்முடைய சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்பட்டார். அவர்களால் அவருக்கு நேரிட்ட துன்பங்களை பவுல் தன்னுடைய 2 கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், “அடிகள்” மற்றும் “காவல்கள்” ஆகியவைகள் உள்ளடங்கும் (6:5).  

அந்த புறக்கணிப்பை கோபத்துடனும் கசப்புடனும் கையாளுவதற்கு பதிலாக, அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்பினார். அவர் எழுதும்போது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது... மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3) என்று சொல்லுகிறார். 

தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் வரவேற்கும்போது, நம்முடைய சத்துருக்களையும் அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளட்டும். 

நம்முடைய மீதமுள்ள கதை

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க வானொலியில் செய்தி பத்திரிக்கையாளர் பால் ஹார்வியின் குரல் மக்களுக்கு மிகவும் பரீட்சையமானது. வாரத்தில் ஆறு நாட்களும் அவர் சுவாரஸ்யத்துடன், “செய்தி என்னவென்று உங்களுக்குத் தெரியும், ஒரு நிமிடத்தில் நீங்கள் மீதமுள்ள கதையைக் கேட்கப் போகிறீர்கள்" என்று கூறுவது வழக்கம். ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு, அவர் நன்கு அறியப்பட்ட நபரின் அதிகம் அறியப்படாத கதையைச் சொல்வார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபரின் பெயரையோ அல்லது அவரைக் குறித்த சுவாரஸ்யமான தகவலை மறைத்து வைத்து, “இப்போது உங்களுக்குத் தெரியும் . . . மீதமுள்ள கதை" என்று கூறி வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி மகிழ்விப்பார். 

அப்போஸ்தலர் யோவானின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்தில் அதேபோன்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கதை சோகமாய் துவங்குகிறது. வரலாறு எதை நோக்கி பயணிக்கிறது என்பதை வானத்திலும் பூமியிலும் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவனாலும் உரைக்க முடியவில்லை என்பதினால் அவருடைய கண்ணீரை அவரால் நிறுத்தமுடியவில்லை (வெளி. 4:1; 5:1-4). பின்பு நம்பிக்கையை அளிக்கும் யூதா கோத்திர ராஜசிங்கத்தின் சத்தத்தைக் கேட்கிறார் (வச. 5). ஆனால் யோவான் பார்க்கும்போது, ஒரு வெற்றிபெற்ற சிங்கத்தை பார்ப்பதற்கு பதிலாக, அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறார் (வச. 5-6). கர்த்தருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் கொண்டாட்ட அலைகள் வெடித்தது. இருபத்தி நான்கு மூப்பர்களும், வானத்திலும் பூமியிலுமுள்ள எண்ணற்ற தேவதூதர் சேனைகளும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தின (வச. 8-14). 

சிலுவையிலறையப்பட்ட இந்த இரட்சகரே அனைத்து சிருஷ்டிகளின் நம்பிக்கையும், தேவனுக்கு மகிமையும், நம்முடைய மீதமிருக்கும் வாழ்க்கைக் கதையாகவும் இருப்பார் என்று யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்!