வலியிலிருந்து தேவன் நம்மை மீட்கிறார்
ஆலிவ், தனது நண்பர் தனது பல் மருத்துவ உபகரணங்களை அவரது காரில் ஏற்றுவதைப் பார்த்தாள். அவரும் ஒரு பல் மருத்துவர். இவளிடமிருந்த உபகரணங்களை அவர் விலைகொடுத்து வாங்கிச் சென்றார். பல் மருத்துவராய் பணியாற்றும் ஆலிவின் கனவு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவளது மகன் கைல், பெருமூளை வாதத்துடன் பிறந்தபோது, அவனைப் பராமரிக்கும் நோக்கத்துடன் மருத்துவ பணியை அவள் நிறுத்தவேண்டியிருந்தது.
“என்னுடைய வாழ்நாள் ஒரு மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பிருந்தாலும், நான் அதே வேலையைத்தான் செய்வேன்” என்று என்னுடைய சிநேகிதி ஒருவள் சொல்வாள். பல் மருத்துவ சேவையை விடுவது என்பது கனவு தொலையும் தருணம்.
நாம் புரிந்து கொள்ள முடியாத சிரமங்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஆலிவைப் பொறுத்தவரை, இது அவளது குழந்தையின் எதிர்பாராத சரீர வியாதி மற்றும் தனது சொந்த லட்சியங்களைத் துறந்தததினால் ஏற்பட்ட இருதய வேதனை. நகோமிக்கோ, தன் முழு குடும்பத்தையும் இழந்த மன வியாகுலம் அது. ரூத் 1:21ல், சர்வவல்லவர் என்னை கிலேசப்படுத்தியிருக்கிறார் என்று புலம்புகிறாள்.
ஆனால் நகோமியின் சம்பவத்தில் அவளால் பார்க்க முடியாத சில காரியங்கள் உண்டு. தேவன் அவளைக் கைவிடவில்லை. ஓபேத் என்ற ஒரு பேரனை அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவர் அவளுக்கு ஆசீர்வாதத்தை திரும்பத்தந்தார் (ரூத் 4:17). நகோமியின் கணவர் மற்றும் மகனின் பெயரை மட்டும் இந்த ஓபேத் எடுத்துக்கொள்ளுவது மட்டுமன்றி, அவன் இயேசுவின் மூதாதையரான போவாஸின் உறவினன் (மத்தேயு 1:5,16).
தேவன் நகோமியின் வேதனையை மாற்றினார். நரம்பியல் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு மத்தியில் ஊழியத்தைத் தொடங்கியதின் மூலம் ஆலிவின் வியாகுலத்தையும் அவர் மாற்றினார். நாம் மனவேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றும்போது, அவர் நம் வேதனையை மாற்ற முடியும் என்று நம்பலாம். அவருடைய அன்பினாலும் ஞானத்தினாலும், அவற்றிலிருந்து நன்மையை கொண்டுவர அவரால் கூடும்.
குழப்பத்திற்கு அல்ல, கிறிஸ்துவுக்கு செவி கொடுத்தல்
ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த அந்த முதியவர் அதிக வேதனைப்பட்டார். உலகம் அழிந்துகொண்டிருப்பது மட்டுமின்றி, அது தன்னையும் அதற்கு நேராய் இழுத்துக்கொண்டுபோகிறது என்று வேதனைப்பட்டார். “தயவுசெய்து அதை நிறுத்துங்கள்,” என்று அவரது மூத்த மகள் அவரிடம் கெஞ்சினாள். “அதைக் கேட்பதை நிறுத்துங்கள்.” ஆனால் அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளை கேட்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்.
நமக்கு முக்கியமாய் தோன்றுகிற காரியங்களில் நாம் ஈடுபாடு செலுத்துகிறோம். இயேசு பொந்தியு பிலாத்துவை சந்திக்கும் சந்திப்பில் இதைக் காண்கிறோம். மார்க்கத் தலைவர்கள் இயேசுவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் பிலாத்து அவரை அழைத்து, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான் (யோவான் 18:33). அதற்கு இயேசு, “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?” (வச. 34) என்று அதிர்ச்சியூட்டும் கேள்வியை பதிலாக்குகிறார்.
அதே கேள்வி இன்றும் நம்மிடமும் எழுப்பப்படுகிறது. பரபரப்பான இந்த உலகத்தில் நாம் குழப்பத்திற்கு செவிகொடுக்கிறோமா அல்லது கிறிஸ்துவுக்கு செவிகொடுக்கிறோமா? “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” என்றும் “நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27) என்றும் இயேசு சொல்லுகிறார். அவரை சந்தேகிக்கும் மார்க்கத் தலைவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் விதமாய் இயேசு அந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார் (வச. 6). ஒரு நல்ல மேய்ப்பனாக இயேசு, “அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” (வச. 4-5) என்றார்.
நம்முடைய நல்ல மேய்ப்பராக, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சத்தத்தைக் கேட்டும்படிக்கு இயேசு நமக்கு கட்டளையிடுகிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து இளைப்பாறுதலை சுதந்தரிப்போம்.
தேவ வசனத்தை உள்வாங்கிக்கொள்வது
எனது பெரிய மாமாவின் பழைய பண்ணை வீட்டின் வாசலில் தொங்கியபடி, கடினமான வார்ப்பிரும்பு வளையம் வலுவாக நின்றது. நூறு அடி தாண்டி மற்றொரு வளையம், பால் பண்ணையில் பொருத்தப்பட்டிருந்தது. பனிப்புயல் சம்பவிக்கும் தருணங்களில் என் மாமா அந்த இரண்டு வளையங்களையும் ஒரு கயிற்றால் இணைப்பார். அதின் மூலம் அவர் வீட்டிற்கும் கொட்டகைக்கும் இடையே உள்ள பாதையைக் கண்டுபிடிக்க வசதியாயிருக்கும். பனிபடர்ந்திருக்கும் தருணங்களில், அந்த அடையாளம் அவருக்கு தெளிவாய் வழிகாட்டியது.
என் மாமாவின் இந்த அடையாளம், தேவனுடைய ஞானம் எவ்வாறு தன்னை வாழ்க்கையில் வழிநடத்துகிறது என்பதையும் பாவத்திலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும் தாவீதின் பாடல் வரிகளை எனக்கு நினைப்பூட்டியது. “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” (சங்கீதம் 19:9-11).
கர்த்தருடைய ஆவியானவர் நம் இருதயங்களில் கிரியை செய்து சத்தியத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளச் செய்வதால், நாம் நம்முடைய பாதையை தவறவிடாமலும், தேவனை கனப்படுத்தும் தீர்மானங்களையும் எடுக்க விழைகிறோம். வேதம் தேவனிடமிருந்து விலகிச் செல்லாமல் இருக்க நம்மை எச்சரிக்கிறது. மேலும் தேவனிடம் திரும்புவதற்கான பாதையைக் காட்டுகிறது. இது நம்முடைய இரட்சகரின் விலைமதிப்பற்ற அன்பையும் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு காத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அறிவிக்கிறது. வேதாகமம் ஒரு உயிர்நாடி! அதை எப்போதும் பற்றிக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக.
சேர்ந்து இருப்பது நல்லது
தன் கணவனை இழந்த மேரி, திருச்சபைக்கு செல்வதையும் வேதபாட வகுப்பிலும் தவறாமல் கலந்துகொள்வாள். ஒவ்வொரு மாதமும் தனது ஐந்து பிள்ளைகளையும் பேருந்தில் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். திருச்சபையை சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளையும் செய்து வந்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, அத்தேவாலயத்தின் போதகர், ஒரு சிலர் அவளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு திருச்சபை விசுவாச தம்பதியினர் குறைவான வாடகையில் ஒரு வீட்டை அவளுக்கு தங்கிக்கொள்ள கொடுத்துதவினர். ஒரு தம்பதியினர் ஒரு காப்பிக் கடையில் அவளுக்கு வேலை தந்தனர். ஒரு இளைஞன் தன்னுடைய பழைய காரை பழுது பார்த்து கொடுத்துதவினான். மேலும் அந்த காருக்கு தானே மெக்கானிக்காய் இருப்பதாகவும் வாக்கு செய்தான்.
ஒருவேளை மேரியின் திருச்சபையாரைப் போல் நம்மால் உதவ முடியாமல் இருக்கலாம். தேவ ஜனங்கள் உதவி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள். சுவிசேஷகர் லூக்கா இயேசுவின் விசுவாசிகளை, “அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்... உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:42) என்று குறிப்பிடுகிறார். நாம் நமது வளங்களை ஒருங்கிணைக்கும் போது, ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போல தேவையிலுள்ளவர்;களுக்கு உதவ நாம் இணைந்து செயல்படலாம் (வச. 44-45). நாம் தேவனுடனும் சக விசுவாசிகளுடனும் ஐக்கியம் கொள்ளும்போது, ஒருவரையொருவர் பராமரித்துக்கொள்ள முடியும். நம்முடைய கிரியைகளின் மூலம் நாம் பிரதிபலிக்கும் தெய்வீக அன்பானது, மற்றவர்களை தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும் (வச. 46-47).
நம்முடைய புன்னகையினாலும், அன்பான செய்கையினாலும், பண உதவினாலும், ஜெபத்தினாலும் மற்றவர்களுக்கு உதவும் போது, நாம் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துகிறோம்.