பிறனை நேசித்தல்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது பர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின் வார்த்தைகள், கொரோனா தொற்றுநோயின் நாட்களின் சுயதனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சமங்களில் உண்மையாயிருந்தது. அதில் அவர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கையில், ஒரு நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பொருட்படுத்திவிட்டு, மற்ற நகரங்களில் நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடமுடியாது. “நாம் விதியின் ஆடை பின்னலில், பிணைக்கப்பட்டுள்ளோம்” என்ற அவர் சொல்லுகிறார். ஒருவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பானது, அனைவருக்கும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அதேபோல், கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகள் முழு அடைப்பை அமுல்படுத்தி, நமது இணைப்பை வெளிப்படுத்தியது. ஒரு நகரத்தை பாதித்தது விரைவில் மற்றொரு நகரத்தையும் பாதிக்கலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மற்றவர்களுக்கு எவ்வாறு அக்கறை காட்ட வேண்டும் என்று தேவன் தம் மக்களுக்கு போதித்தார். மோசே மூலம், இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டவும், அவர்கள் ஒற்றுமையாய் வாழவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:16) என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக” (வச. 18) என்றும் போதித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையை தங்கள் வாழ்க்கை போலவே மதிப்பிட்டு பார்க்காவிட்டால், சமுதாயம் உடைய துவங்கும் என்பதை தேவன் நன்கு அறிந்திருந்தார்.
தேவனுடைய போதனைகளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம். நம்முடைய அன்றாட செயல்களில் நாம் ஈடுபடும்போது, மற்றவர்ளோடு நாம் எந்த அளவிற்கு தொடர்பில் இருக்கிறோம் என்பதை அறிந்து, அவர்களை நேசிக்கவும் உதவிசெய்யவும் தேவனை நாடுவோம்.
திங்கட்கிழமைக்காக நன்றி
திங்கட்கிழமை என்றாலே நான் பயப்படுவேன். நான் முன்பு வேலை செய்த இடத்திற்கு செல்ல ரயிலிலிருந்து இறங்கும்போது, என் அலுவலகக் கட்டிடத்தை அடைவதற்கு முன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். குறித்த நேரத்திற்கு வேலையை முடிக்காவிட்டால் எரிச்சலடையும் முதலாளிகளை சந்திப்பது எனக்கு சவாலாய் தோன்றியது.
நம்மில் சிலருக்கு, ஒரு புதிய வாரத்தை துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும். நம் வேலை ஸ்தலத்தில் நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது கனப்படுத்தப்படாதவர்களாகவோ இருக்கலாம். சாலெமோன் ராஜா எழுதும்போது, பிரயாசத்தின் பலனை விவரிக்கிறார்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது” (பிரசங்கி 2:22-23).
ஞானமுள்ள ராஜா, வேலையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதை பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான ஆலோசனையை நமக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். நம்முடைய வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனின் உதவியோடு அதில் “திருப்தியடைய” அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 24). கிறிஸ்துவின் சுபாவங்களை நம்மில் பிரதிபலிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கும்போது, அந்த திருப்தியை நாம் அடையலாம். அல்லது நம்மால் உதவிபெற்ற ஒருவருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது திருப்தியடையலாம். அல்லது, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவன் கொடுத்த ஞானத்தை பிரயோகிக்கும்போது நாம் திருப்தியடையலாம். நம்முடைய வேலைகள் கடினமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் சிக்கலான தருணங்களில் நமக்கு ஒளிகொடுக்கும். அவருடைய துணையோடு, திங்கட்கிழமைகளை நாம் சமாளிப்போம்.
ஹின்னோமிலிருந்து நம்பிக்கை
1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று.
அவைகள் கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” ("ஹின்னோம் பள்ளத்தாக்கு" என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).
இந்த இடத்தில், எரேமியா தனது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தனது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார்.
நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.
பந்தயத்தில் ஓடுதல்
தனது மனைவி, மகன் மற்றும் மகளை இழந்த தொடர் சோகங்களுக்குப் பிறகு, தனது 89ஆம் வயதில் ஃபாஜா சிங் தன்னுடைய ஆர்வமான ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிங், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை நிறைவு செய்த முதல் 100 வயது நபர் என்னும் சாதனையை நிகழ்த்தினார். அவரது ஆரோக்கியமான உணவு, உடல் வலிமை, மன ஒழுக்கம் போன்றவைகள் அவரது சாதனைக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய 5 வயது வரை நடக்கமுடியாமல் இருந்தவராம். அதினால் அவரை எல்லோரும் “குச்சி” என்ற கிண்டல் செய்வார்களாம். ஆனால் தற்போது அவருடைய சாதனையைக் கண்டவர்கள் அவரை “முண்டாசிட்ட புயல்காற்று” என்று அழைக்கின்றனர்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தனது நாட்களில் இதேபோன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்தார் (1 கொரிந்தியர் 9:24). ஆனால் அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் இறுதியில் அவர்களின் வலிமை குன்றுவதையும் அவர் கண்டார். ஆனால் நித்தியத்தை பாதிக்கும் விதத்தில் இயேசுவுக்காக வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போதித்தார். தற்காலிகப் பெருமைக்காக பாடுபடும் விளையாட்டு வீரர்கள் மிகவும் கடினமாக உழைக்க முடியும் என்றால், “அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு" வாழ்பவர்கள் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 25).
இரட்சிப்பைப் பெறுவதற்கு நாம் பயிற்சியளிக்கவில்லை. மாறாக, நமது இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் உணரும்போது, அது நமது வாழ்வின் முக்கியத்தவத்தை உணர்த்தி நம்முடைய ஓட்டத்தை எவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் நிறைவுசெய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.