1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று. 

அவை கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” (“ஹின்னோம் பள்ளத்தாக்கு” என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).

இந்த இடத்தில், எரேமியா தமது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தமது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார். 

நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.