Archives: நவம்பர் 2022

சிறிய கருணை

அமண்டா, ஒரு சுற்றித்திரியும் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் பல மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி தன்னுடைய பதினொரு வயது மகள் ரூபியை வேலைக்கு அழைத்து வருவாள். ரூபி விளையாட்டுத் தனமாய் அங்கேயிருக்கும் நோயாளிகளிடம், “உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தால், நீங்கள் விரும்புவது எதுவாயிருக்கும்” என்று கேட்பது வழக்கம். அவர்களுடைய பதிலை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து வைப்பாள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் விருப்பங்கள் சிக்கன், சாக்லேட், வெண்ணை, பழங்கள் போன்ற சிறிய விஷயங்களாகவே இருந்தன. அவர்களின் தேவையை குறித்துக்கொண்ட ரூபி, அவற்றை வாங்குவதற்கு பணம் சேகரிக்கத் துவங்கினாள். அவர்கள் எதிர்பார்த்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை கட்டித் தழுவி, இது உங்களுக்கு ஆறுதலாயிருக்கிறதா என்று கேட்பாளாம்.  

ரூபியைப் போல இரக்கத்தையும் கருணையையும் காட்டும்போது, நம் தேவனைப் பிரதிபலிக்கிறோம். அவர் “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்” (சங்கீதம் 145:8). ஆகையினால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், தேவஜனமாகிய நம்மை, “பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு,” (கொலோசெயர் 3:12) ஜீவிக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். தேவன் நமக்கு அதிக இரக்கம் காண்பித்துள்ளபடியினால், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இயல்பாகவே தூண்டப்படுகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது அது நாளடைவில் நம்முடைய சுபாவமாகவே மாறுகிறது. 

மேலும் பவுல், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறார். அனைத்து ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் வைத்து, “நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (வச. 17), அவரை ஸ்தோத்தரியுங்கள் என்றும் நினைப்பூட்டுகிறார். நாம் மற்றவர்களிடம் இரக்கத்தை செயல்படுத்தும்போது, நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது. 

இரண்டுமே உண்மை தான்

ஃபெங் லுலு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிஜமான குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டாள். சீனாவில், அவள் குழந்தையாய் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பெண்கள் குழுவினரால் அவள் மீட்கப்பட்டு அவளுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவள் கடத்தப்பட்டபோது சிறு பிள்ளையாய் இருந்தபடியால், ஃபெங் லுலுவுக்கு அந்த சம்பவம் நினைவில் இல்லை. அவளுடைய பெற்றோரால் அவளை பராமரிக்க முடியாததால் அவளை விற்றுவிட்டதாக அவள் நம்பினாள். ஆனால் உண்மை என்னவென்று தெரிந்தபின்பு, அவளுடைய பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது. 

யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடன் மீண்டும் சேர்ந்தபோது, அவரும் பலதரப்பட்ட உணர்வுகளுக்குள் கடந்துபோயிருக்கலாம். அவன் ஒரு இளைஞனாக எகிப்தில் அடிமையாக அவனது சொந்த சகோதரர்களால் விற்கப்பட்டான். தொடர்ந்து பல போராட்டங்களை யோசேப்பு சந்தித்தபோதிலும், தேவன் அவனை அதிகாரத்திற்கு உயர்த்தினார். ஒரு கட்டத்தில், அவனுடைய சகோதரர்கள் தேசத்தில் பஞ்சத்தின் காரணமாக, உணவு வாங்க எகிப்துக்கு வந்தபோது, அவன் யார் என்று அறியாமலேயே அவனிடத்தில் உணவுக்காய் வேண்டி நின்றனர். 

“பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காக” தேவன் யோசேப்பைப் பயன்படுத்தினார் என்று சொல்லுவதின் மூலம் தேவன் அவர்களுடைய தப்பிதங்களை மாற்றினார் (ஆதியாகமம் 45:7). ஆயினும்கூட, யோசேப்பு அவர்கள் தமக்கு செய்த தப்பிதங்களை நினைவுபடுத்திக் காண்பிக்கவில்லை. விற்றுப்போட்டீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறான் (வச. 5). 

நாம் சில வேளைகளில் நமக்கு நேரிடும் கடினமான சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான நல்ல காரியங்களை மட்டுமே பொருட்படுத்த முனைகிறோம். அது தோற்றுவிக்கும் உணர்ச்சிபூர்வான விளைவை பொருட்படுத்துவதில்லை. தேவன் அதை மீட்டுக்கொண்டு வந்ததால், தவறை நன்மை என்று புரிந்துகொள்ள வேண்டாம். தப்பிதங்கள் நமக்கு தோற்றுவித்த வேதனையை உணர்ந்துகொண்டே அதிலிருந்து தேவன் நன்மையைக் கொண்டுவர எதிர்நோக்குவோம். இரண்டுமே உண்மைதான்.

மூலக் காரணம்

1854ஆம் ஆண்டு, லண்டனில் ஏதோ ஒன்று ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. அது கெட்ட காற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். தேம்ஸ் ஆற்றில் கழிவு நீர்த்தேக்கம் இருந்ததால் மோசமான துர்நாற்றம் வீசியது. அதுவே “பெரிய துர்நாற்றம்” என்று அறியப்பட்டது.

ஆனால் அந்த துர்நாற்றத்திற்கு காற்று காரணமில்லை. அந்த காலரா தொற்றுநோய்க்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என்று டாக்டர் ஜான் ஸ்னோவினின் ஆராய்ச்சி காட்டுகிறது.

இன்னொரு பிரச்சனையைக் குறித்த நாம் நீண்ட காலமாய் அறிந்திருக்கிறோம். அதின் நாற்றம் பரலோகம் வரை வீசுகிறது. நாம் உடைந்த ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த பிரச்சனையை நாம் தவறாய் அடையாளம் கண்டு, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அதின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சமூகத் திட்டங்களும் கொள்கைகளும் சில நன்மைகளை தருகின்றன. ஆனால் அவை சமூகத்தின் தீமைக்கு மூலக் காரணமான நம்முடைய பாவ இதயங்களை குணமாக்க சக்தியற்றவை. 

“மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது” (மாற்கு7:15) என்று இயேசு சொன்னபோது, அவர் சரீர வியாதிகளைக் குறித்து குறிப்பிடவில்லை. மாறாக, அவர் நம் ஒவ்வொருவரின் ஆவிக்குரிய நிலையைக் கண்டறிகிறார். “அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்” (வச. 15) என்று சொல்லுகையில், நமக்குள் பதுங்கியிருக்கும் தீமைகளின் எண்ணங்களை அவர் பட்டியலிடுகிறார் (வச. 21-22).

தாவீது, “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்” (சங்கீதம் 51:5) என்கிறார். அவருடைய புலம்பல் நமக்கும் பொருந்தும். நாமும் துவக்கத்திலிருந்தே உடைக்கப்பட்டவர்கள். அதினால் தான் தாவீது “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” (வச. 10) என்று விண்ணப்பிக்கிறார். இயேசு தன்னுடைய ஆவியினாலே நமக்குள் உருவாக்கும் புதிய இருதயம் ஒவ்வொரு நாளும் நமக்கு அவசியம். 

அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதை விட்டுவிட்டு, அதின் மூலக் காரணத்தை இயேசு சுத்திகரிக்கும்படி அனுமதிக்கலாம். 

நண்பர்களின் நட்பு

1970களில் நான் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராகவும் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் இருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு உயரமான, தெளிவான நபராக இருந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு, அவர் எனது கூடைப்பந்து அணியிலும் எனது வகுப்புகளிலும் இருந்தார். என்னுடன் பல வருடங்கள் சக ஆசிரியராகப் பணியாற்றிய அதே நண்பர், எனது பணி ஓய்வு விழாவில் என் முன் நின்று, எங்களின் நீண்ட கால நட்பைக் குறித்து விமரிசையாக பகிர்ந்து கொண்டார்.

தெய்வீக அன்பினால் இணைக்கப்பட்ட சிநேகிதன் நம்மை ஊக்குவித்து இயேசுவிடம் நெருங்கி வரச் செய்வது எப்படியிருக்கும்? நட்பில் இரண்டு ஊக்கமளிக்கக்கூடிய விஷயங்கள் உள்ளதாக நீதிமொழிகளின் ஆசிரியர் அறிந்திருந்தார்: முதலாவதாக, உண்மையான நண்பர்கள் எளிதில் கொடுக்க முடியாத நல்ல ஆலோசனைகளை வழங்குவர் (27:6): “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என்று சொல்லுகிறார். இரண்டாவதாக, இக்கட்டு நேரங்களில் அருகில் இருக்கும், அணுகக்கூடிய ஒரு நண்பர் முக்கியம்: “தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி” (வச. 10). 

வாழ்க்கையில் நாம் தனித்து பறப்பது நல்லதல்ல. சாலெமோன் குறிப்பிட்டது போல், “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்” (பிரசங்கி 4:9). வாழ்க்கையில், நமக்கு நண்பர்கள் இருக்க வேண்டும், நாமும் மற்றவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” (ரோமர் 12:10). மேலும், “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” (கலாத்தியர் 6:2), மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை கிறிஸ்துவுக்குள் நெருங்கச் செய்ய பிரயாசப்படுவோம். 

ஞானம் அல்லது மதியீனம்?

எனக்கு பத்து வயதாக இருந்தபோது, எங்கள் இளைஞர் குழுவில் இருந்த ஒரு நண்பனிடமிருந்து ஒரு கேசட் டேப்பை வீட்டிற்கு கொண்டு வந்தேன். அதில் கிறிஸ்தவ இசைக்குழுவின் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட என்னுடைய அப்பா, அப்பாடல்களை விரும்பவில்லை. ஆராதனை பாடல்கள் மட்டுமே வீட்டில் ஒலிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். இது ஒரு கிறிஸ்தவ இசைக்குழு தான் என்பதை நான் அவருக்கு விளக்கினேன். ஆனால் அது அவருடைய மனதை மாற்றவில்லை. சிறிது நேரம் கழித்து, இப்பாடல்கள் என்னை தேவனிடத்தில் நெருங்கச் செய்கிறதா அல்லது விலகச் செய்கிறதா என்று ஒருவாரம் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த ஆலோசனையில் ஒரு நியாயம் இருந்தது. 

வாழ்க்கையில் சரி தவறு என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் பல வேளைகளில் நாம் சில தீர்மானங்களை எடுக்க போராட வேண்டியுள்ளது (ரோமர் 14:1-19). என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், வேதத்தின் ஞானத்தை நாம் சார்ந்துகொள்ளலாம். எபேசிய திருச்சபை விசுவாசிகளை, “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து” இருங்கள் என்று பவுல் ஊக்குவித்தார் (எபேசியர் 5:15). ஒரு சிறந்த பெற்றோரைப்போன்று அவர்கள் கூடவே இருந்து ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கமுடியாது என்பது பவுலுக்கு நன்றாய் தெரியும். நாட்கள் பொல்லாதவைகளானதால் அவர்கள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவார்கள் என்றால், அவர்களைக் குறித்த கர்த்தருடைய சித்தம் இன்னதென்று அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும் என்று பவுல் கூறுகிறார் (வச. 16-17). நாம் சர்ச்சைக்குரிய விஷயங்களுடன் போராடும்போது தேவன் நம்மை வழிநடத்துவதால் விவேகத்தையும் நல்ல தீர்மானங்களையும் பின்பற்றுவதற்கான அழைப்பே ஞானமுள்ள வாழ்க்கை.