அமண்டா, ஒரு சுற்றித்திரியும் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் பல மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி தன்னுடைய பதினொரு வயது மகள் ரூபியை வேலைக்கு அழைத்து வருவாள். ரூபி விளையாட்டுத் தனமாய் அங்கேயிருக்கும் நோயாளிகளிடம், “உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுத்தால், நீங்கள் விரும்புவது எதுவாயிருக்கும்” என்று கேட்பது வழக்கம். அவர்களுடைய பதிலை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து வைப்பாள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் விருப்பங்கள் சிக்கன், சாக்லேட், வெண்ணை, பழங்கள் போன்ற சிறிய விஷயங்களாகவே இருந்தன. அவர்களின் தேவையை குறித்துக்கொண்ட ரூபி, அவற்றை வாங்குவதற்கு பணம் சேகரிக்கத் துவங்கினாள். அவர்கள் எதிர்பார்த்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை கட்டித் தழுவி, இது உங்களுக்கு ஆறுதலாயிருக்கிறதா என்று கேட்பாளாம்.  

ரூபியைப் போல இரக்கத்தையும் கருணையையும் காட்டும்போது, நம் தேவனைப் பிரதிபலிக்கிறோம். அவர் “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்” (சங்கீதம் 145:8). ஆகையினால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், தேவஜனமாகிய நம்மை, “பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு,” (கொலோசெயர் 3:12) ஜீவிக்கும்படிக்கு வலியுறுத்துகிறார். தேவன் நமக்கு அதிக இரக்கம் காண்பித்துள்ளபடியினால், அவருடைய இரக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இயல்பாகவே தூண்டப்படுகிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது அது நாளடைவில் நம்முடைய சுபாவமாகவே மாறுகிறது. 

மேலும் பவுல், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:14) என்று கூறுகிறார். அனைத்து ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் வைத்து, “நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து” (வச. 17), அவரை ஸ்தோத்தரியுங்கள் என்றும் நினைப்பூட்டுகிறார். நாம் மற்றவர்களிடம் இரக்கத்தை செயல்படுத்தும்போது, நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுகிறது.