எப்.பி. மேயெர் (1847-1929) என்னும் ஆங்கில பிரசங்கியார், “வாசம்பண்ணும் கிறிஸ்துவின் ஆழமான தத்துவம்” என்ற அவருடைய போதனைக்கு முட்டையை உதாரணமாய் பயன்படுத்துகிறார். ஒரு முட்டைக்குள் இருக்கிற உயிருள்ள கரு ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து ஒரு கோழிக்குஞ்சாய் உருவெடுக்கிறதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் இயேசு கிறிஸ்துவும் நமக்குள் வாசம்பண்ணுகிறார். மேயெர், “இதிலிருந்து கிறிஸ்து உங்களுக்குள் வளர்ந்து பெருகி, அனைத்தையும் அவருக்குள் உறிஞ்சி, உன்னில் முழுமையாய் உருவாகப்போகிறார்” என்று சொல்லுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நமக்குள் வாசம்பண்ணும் கிறிஸ்து என்னும் மகிமையான சத்தியத்தை அவர் நேர்த்தியாய் விளக்கவில்லை என்பதை அவர் அறிந்து, இயேசுவை நேர்த்தியற்ற விதத்தில் சித்தரித்ததற்காக மன்னிப்பும் கோரினார். ஆனால் இயேசு “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” (யோவான் 14:20) என்ற தெய்வீக சத்தியத்தை மற்றவர்களோடு பகிரும்படிக்கு விசுவாசிகளை அவர் ஊக்கப்படுத்தினார். இயேசு தன் சீஷர்களோடு கடைசி போஜன பந்தியிருக்கையில் இதைச் சொன்னார். அவருக்கு கீழ்ப்படிகிற யாவருக்குள்ளும் இயேசுவும் பிதாவும் வந்து வாசம்பண்ணுவார்கள் என்ற சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார் (வச. 23). யார் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்களை உள்ளும் புறம்பும் மறுரூபமாக்குவதற்கு ஆவியானவர் மூலம் அவர்களுக்குள் இயேசு வாசம்பண்ண முடியும்.
நீங்கள் எந்த வழியில் உருவகப்படுத்தினாலும் சரி. கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுகிறவர், வழிநடத்துகிறவர், அவரைப்போல் மாறுவதற்கு உதவிசெய்கிறார்.
இயேசு உங்களுக்குள் வாசம்பண்ணுவது எவ்வித மாற்றங்களை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது? அவருடைய பிரசன்னத்தை மற்றவர்களிடத்தில் எப்படி காணுகிறீர்கள்?
இயேசுவே, நீர் தேவனாகவும் மனிதனாகவும் இருக்கிறீர். நான் உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்பட உம்மையே தியாகமாய் அர்ப்பணித்ததற்காய் உமக்கு நன்றி.