விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் 1976ஆம் ஆண்டு தொலைப்பேசியில் முதல் வார்த்தைகளைப் பேசினார். அவர் தம்முடைய உதவியாளராகிய வாட்சனிடம், “வாட்சன், இங்கே வா. நான் உன்னைப் பார்க்கவேண்டும்” என்று சொன்னார். வார்த்தைகள் உடைந்து கேட்கப்பட்டாலும், கிரகாம்பெல் என்ன சொன்னார் என்பதை வாட்சனால் புரிந்துகொள்ள முடிந்தது. தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொள்ளப்பட்ட கிரகாம்பெல்லின் முதல் வார்த்தைகள், மனித சரித்திரத்தில் தொடர்புகொள்ளுதலின் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் எனலாம்.
ஒரு புதிய நாளின் துவக்கத்தில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்த பூமியில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” (வச.3) என்ற தேவனின் முதல் வார்த்தைகள் ஒலித்தது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிப்பின் வல்லமைகொண்ட வார்த்தைகள். அவர் சொன்னார்; சொன்னது நிஜமாகவே தோன்றியது (சங்கீதம் 33:6,9). தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. இருளில் மூழ்கியிருந்த உலகம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒளிக்கு இடங்கொடுத்தது. ஒளி என்பது, இருளின் ஆதிக்கத்திற்கு தேவன் கொடுத்த பதில். அவர் ஒளியை உண்டாக்கியபோது, “அது நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4).
தேவனுடைய இந்த முதல் வார்த்தைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் வல்லமையுள்ளதாய் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் உதயமாகும்போது, அவர் நம்முடைய வாழ்க்கைக்கு அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். ஒளி வரும்போது இருள் மறைந்து ஒளிக்கு இடங்கொடுப்பதுபோல, அவர் நம்மை அழைத்து அவரைப் பார்க்கும்படி செய்கிறார் என்பதை உணர்ந்து அவருக்குத் துதிகளை ஏறெடுப்போம்.