ஒரு வருடத்திற்கு முன்னதாக, “ஆண் பிள்ளை” என்று வெறுமனே ஒரு குழந்தை பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறந்த சில மணித்துளிகளில் புறக்கணிக்கப்பட்ட அந்த பிள்ளை, மருத்துவமனை வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பிள்ளை கண்டெடுக்கப்பட்ட மாத்திரத்தில் சமூக சேவகர்கள், அந்த பிள்ளையின் குடும்பமாய் மாறப்போகிற ஒரு தம்பதியினருக்கு அவசர அழைப்பு விடுத்தனர். தம்பதியினர் அந்த பிள்ளையைக் கையில் எடுத்து, அதை “கிரேசன்” (அவனுடைய நிஜ பெயர் அல்ல) என்று அழைத்தனர். அந்த பிள்ளையைத் தத்தெடுக்கும் ஒழுங்குகள் நேர்த்தியாய் செய்யப்பட்டு, “கிரேசன்” என்றே அப்பிள்ளைக்குப் பெயரிடப்பட்டது. இன்று உங்களோடு சகஜமாய் உறவாடக்கூடிய அளவிற்கு அப்பிள்ளை வளர்ந்திருக்கிறது. அவன் ஒரு காலத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.
தன்னுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், மோசே தேவனுடைய சுபாவங்களையும் அவர் இஸ்ரவேலுக்காய் செய்த நன்மைகளையும் புரிந்துகொண்டான். “கர்த்தர் உன் பிதாக்கள் மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம்” வைத்தார் (உபாகமம் 10:15) என்று கூறுகிறார். அன்பின் பாதை நீளமானது. “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (வச.18) என்று மோசே சொல்லுகிறார். “அவரே உன் புகழ்ச்சி… உன் தேவன் அவரே” (வச.21).
தத்தெடுப்பின் மூலமாகவோ அல்லது அன்பு மற்றும் சேவையின் மூலமாகவோ தேவனுடைய அன்பைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த தம்பதியினர், கவனிக்கப்படாத திக்கற்ற ஒரு பிள்ளைக்கு தேவனுடைய அன்பின் கரத்தை நீட்டி ஆதரவு தெரிவித்தனர். நாமும் அவருடைய கரங்களாகவும் பாதங்களாகவும் செயல்படமுடியும்.
சிறிய மற்றும் பெரிய வழிகளில் தேவன் தம் அன்பின் கரம் நீட்டியதை நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? அவருடைய அன்பைப் பிரதிபலிக்கும் எந்த சிறிய நன்மையை நீங்கள் இன்று செய்யக்கூடும்?
பரலோகப் பிதாவே, திக்கற்றவர்கள் மீது இரக்கமாயிரும். உம்முடைய கரங்களாகவும் பாதங்களாகவும் செயல்பட இன்று எனக்கு உதவிசெய்யும்.