வீட்டைக் கட்டுதல்
19 ஆம் நூற்றாண்டில், தனிநபர்குடியிருப்பு கட்டும் இந்தியாவின் பெரிய கனவுத்திட்டம் துவங்கியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ராஜபரம்பரை வீடாக அந்தத் திட்டம் நிறைவுபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த வடோதராவிலுள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் அந்த வீடு. இந்த அரண்மனைதான் இந்தியாவிலேயே பெரிய தனிநபர் குடியிருப்பாகும். 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேலான இடம், 170 அறைகள், பராமரிக்கப்பட்ட மொசைக்கற்கள், அலங்கார தொங்குவிளக்குகள், எலிவேட்டர்கள் என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக நம்பப்பட்டது.
இந்த கட்டிடம் ஒரு "கனவுத்திட்டம்" தான், ஆயினும் மத்தேயு 16 இல் இயேசு தமது சீடர்களிடம் கூறிய கட்டிடத்தைக் குறித்த நோக்கோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. பேதுரு, இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" (வ.16) என்று உறுதிப்படுத்திய பின்னர்; "நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." (வ.18) என்று இயேசு அறிவித்தார். வேதாகம வல்லுநர்கள் அந்தக் "கல்லை" குறித்து பல கருத்துடையவர்களாய் இருந்தாலும், இயேசுவின் நோக்கம் ஒன்றுதான். பூமியின் கடைமுனைமட்டும், அவர் தமது சபையைக் கட்டுவார் (மத்தேயு 28:19–20), உலகெங்கிலும் உள்ள அனைத்து நாட்டவரும், இனத்தவரும் இதில் அடங்குவர் (வெளிப்படுத்தின விசேஷம் 5:9).
இந்த கட்டுமான பணிக்கான விலை? சிலுவையில் இயேசு பலியாகிச் சிந்திய இரத்தமே (அப்போஸ்தலர் 20:28). அவருடைய கட்டிடத்தின் உறுப்பினர்களாக (எபேசியர் 2:21) இம்மாபெரும் விலைக்கிரயத்தால் வாங்கப்பட்ட நாம் அவருடைய அன்பின் தியாகத்தால் பூரித்து இந்த மாபெரும் திட்டத்தில் அவரோடு இணைவோம்.
அடைக்கலம் புகுதல்
ஒருமுறை நானும் என் மனைவியும் பெரிய ஜன்னல்களும், தடிமனான கற்சுவர்களுமுடைய அழகான கடற்கரை விடுதியொன்றில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மத்தியான வேளையில், அப்பகுதியில் புயல் சூழவே, கடல் கொந்தளித்து, எங்கள் அறையின் ஜன்னல்களைச் சீற்றமான அலைகளால் மோதியது. ஆனால் நாங்கள் அமைதியாயிருந்தோம். ஏனெனில் விடுதியின் மதில்கள் வலிமையாகவும், அஸ்திபாரங்கள் உறுதியாகவும் இருந்தன. வெளியே அலைகள் கொந்தளிக்க, எங்கள் அறையே எங்களுக்குப் புகலிடமானது.
அடைக்கலம் என்பது வேதத்தின் முக்கிய கருப்பொருளாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்தே துவங்குகிறது. "நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." (ஏசாயா 25:4) என்று ஏசாயா கூறுகிறார். பண்டைய இஸ்ரவேலில், அடைக்கல பட்டணங்களைக் கட்டுவதாகட்டும் (எண்ணாகமம் 35:6), அல்லது தேவையிலுள்ள அந்நியர்களை உபசரிப்பதாகட்டும் (உபாகமம் 10:19), அடைக்கலம் என்பது தேவ ஜனங்கள் கொடுக்கக் கூடியதும் கொடுக்க வேண்டியதுமான ஒன்றாகக் கருதப்பட்டது. இன்று நாம் வாழும் மனிதாபிமானமற்ற உலகில், இத்தகைய கொள்கைகள் நமக்கு வழிகாட்டும். இதுபோன்ற சூழல்களில், அடைக்கலத்தின் தேவனானவர், நம்மைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாக்குவாராக.
எங்கள் விடுதியைத் தாக்கிய புயல் மறுநாளே ஓய்ந்துவிட்டது. அமைதியான கடல், வெப்பமான சூரியன், பளபளக்கும் கடற்பாசி என எல்லாம் மாறியிருந்தது. இயற்கை சீற்றங்களுக்கு அல்லது கொடுங்கோலாட்சிக்குத் தப்பியோடுபவர்களுக்கு (ஏசாயா 25:4), இன்றைக்கான அடைக்கலத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் தருவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவராக என்ற காட்சியே அப்பொழுது எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
சுவரில் ஒரு ஓட்டை
எனது பூக்களை ஏதோவொன்று அரித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் கம்பீரமாகத் தலைதூக்கிப் பூத்தன, இன்றோ தலையில்லாமல் தண்டுப்பகுதி மட்டுமே நின்றது. எனது தோட்டத்தை முழுதும் அலசி ஆராய்ந்த போதுதான், வேலியில் உள்ள ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தேன். அதற்குக் காரணமான முயல்கள், பார்க்க அழகானவைதான், ஆனால் தோட்டத்தின் மொத்த மலர்களையும் நிமிடத்தில் அழிக்கும் ஆபத்துவாய்ந்தவை.
எனது வாழ்வில் 'தேவனுடைய சுபாவங்கள்' எனும் மொட்டுகளைக் கத்தரிக்கும் ஊடுருவல்கள் உண்டோவென்று சிந்திக்கிறேன். "தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்." என்று நீதிமொழிகள் 25:28 கூறுகிறது. பண்டைய காலத்தில், பட்டணங்களின் மதில்களே மக்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காத்தன. மதிலில் உண்டாகும் சிறிய பிளவுகூட மொத்த பட்டணத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடும்.
வேதத்திலுள்ள நீதிமொழிகளில் அநேக நீதிமொழிகள் இச்சயைடக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. "தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு" (நீதிமொழிகள் 25:16) என்று ஞானி எழுதினார். பொறுமையின்மை, கசப்பு, பேராசை ஆகிய இக்காரியங்கள், ஒரு பூச்சியைப்போல தேவனுக்குள் வெற்றியுள்ள ஜீவியத்தை நாம் செய்ய முடியாமல் தடுக்கிறது (கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்). நமது வாழ்வெனும் மதிலில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து, அவைகளைச் சீரமைக்கும் ஆரோக்கியமான மனநிலையே இச்சையடக்கமாகும்.
எனது வாழ்வைப் பரிசோதிக்கையில், என்னைப் பாதிக்கக்கூடிய ஓட்டைகளை ஆங்காங்கே காண்கிறேன். ஒரே சோதனையில் மீண்டும் மீண்டுமாய் விழுகிறேன், பொறுமை இழக்கிறேன். இச்சையடக்கமெனும் தேவனுக்குள்ளான ஆரோக்கியமான மனநிலை, என்னை இதுபோன்ற தடைகளிலிருந்து காக்க எவ்வளவு அவசியம்!
லீகோ சொல்லும் பாடம்
வருடந்தோறும், லீகோ எனப்படும் சிறிய பிளாஸ்டிக் விளையாட்டு செங்கற்கள், கிட்டத்தட்ட உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா பத்து என்ற சதவீதத்தில், சுமார் எழுநூற்றைம்பது கோடி அளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன்சன் என்ற விளையாட்டுப்பொருள் தயாரிப்பாளரின் நீடியபொறுமை மட்டுமில்லையெனில், இன்று நமக்கு இந்த லீகோ என்ற விளையாட்டுப்பொருளே கிடைத்திருக்காது.
"நன்றாய் விளையாடு" என்ற அர்த்தம் கொண்ட இந்த லீகோவை உருவாக்க, டென்மார்க்கில் உள்ள பிலுண்ட் என்ற ஊரில், பல ஆண்டுகளாக கிறிஸ்டியன்சன் கடுமையாக உழைத்தார். அவர் தொழிற்கூடம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது, உலகப்போரால் மூலப்பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டார். இறுதியாக 1940களின் இறுதியில்தான் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் விளையாட்டு செங்கற்களைத் தயாரிக்கும் எண்ணம் உதித்தது. 1958 ஆம் ஆண்டு கிறிஸ்டியன்சன் மரிக்கும்போது, லீகோ எனும் பெயர் மிகவும் பிரபலமாய் மாறியிருந்தது.
வாழ்விலும், தொழிலும் சவாலான நேரங்களில் விடாமுயற்சியோடு சகிப்பது கடினம். இயேசுவைப் போல மாற வேண்டுமென்ற நோக்கமுடைய நமது ஆவிக்குரிய வாழ்விற்கும் இது பொருந்தும். உபத்திரவங்கள் நம்மை வாட்டுகையில், சகிப்பதற்கு நமக்கு தேவபெலன் அவசியம். "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்கோபு 1:12) என்று அப்போஸ்தலன் யாக்கோபு எழுதினார். சிலசமயம் நாம் எதிர்கொள்ளும் சோதனை உறவிலோ, பொருளாதாரத்திலோ அல்லது உடல்ரீதியாகவோ நமக்குப் பின்னடைவை உண்டாக்கும். சில சமயங்களில் தேவனை மகிமைப்படுத்தி வாழ வேண்டும் என்று நாம் கொண்டுள்ள தீர்மானத்தை சோர்வடையச் செய்வதாகவும் இருக்கும்.
ஆனால் இதுபோன்ற நேரங்களில் நமக்குத் தேவையான ஞானத்தைத் தருவதாகத் தேவன் வாக்குரைத்துள்ளார் (வ.5), நமக்குத் தேவையானதை அளிப்பாரென்ற நம்பிக்கையோடு நாம் இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் (வ.6). இவை எல்லாவற்றினூடே நமது வாழ்வின் மூலம் அவரை மகிமைப்படுத்தும் நோக்கில், அவருடைய உதவியைத் தேடினால், மெய்யான ஆசீர்வாதத்தைக் கண்டடைவோம் (வ.12).
மீண்டும் கண்டெடுக்கப்பட்டது
1937 ல் வான்டெரெர் w24 என்ற மாடல் காருக்கு ஒரு பெரும் சரித்திர பின்னணி இருந்தது. பிரிட்டிஷ் அரசால் வீட்டுக்காவலில் அடைபட்டிருந்த நேதாஜி, கொல்கத்தாவிலிருந்த தனது பாரம்பரிய வீட்டிலிருந்து தப்பிக்க, இந்த வாகனம்தான் உதவியது. இந்த சரித்திர உண்மையால் பூரித்த ஆடி நிறுவனம், சுமார் ஆறுமாதங்கள் செலவழித்து இந்தக் காரை சீராக்கியது. நேதாஜி தப்பித்த சம்பவத்தை நினைவுகூரும் 75 ஆம் ஆண்டான, 2017 ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முக்கர்ஜீ, இந்த அறியக் கண்டெடுப்பை மக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டு வந்தார்.
பொக்கிஷங்கள் பலவகைகளில் மறையலாம். 2 நாளாகமத்தில் தொலைந்த பொக்கிஷம் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். யோசியா இஸ்ரவேலின் ராஜாவாகி பதினெட்டு ஆண்டுகள் கழித்து, எருசலேமின் தேவாலயத்தைப் பழுதுபார்த்தான். நியாயப்பிரமாணப் புஸ்தகம் எனப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், எதிரிகளின் தொடர்தாக்குதல் காரணமாகப் பலஆண்டுகளாக மறைந்து, மறக்கப்பட்டுப்போனது. அப்பொழுது இல்க்கியா என்ற ஆசாரியன், கர்த்தருடைய ஆலயத்திலே அதைக் கண்டெடுத்தான் (2 நாளாகமம் 34:15).
இந்தக் கண்டெடுப்பைக் குறித்து யோசியாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டான். அப்போது அவன், இஸ்ரவேல் ஜனங்களனைவரும், நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியுள்ள அனைத்துக் காரியங்களுக்கும் கீழ்ப்படியும்பொருட்டு, முழுப்புஸ்தகத்தையும் வாசித்துக் கேட்பதற்காக, அவர்களை ஒன்று திரட்டினான் (வ.30–31).
இன்றும் நமது வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான, வேதத்தின் அறுபத்தாறு புஸ்தகங்களை வாசிக்கும், வியத்தகு ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது.