சோதனைகளுக்கான கிருபை
ஸ்ரீதேவி சிறுபிராயத்திலிருந்தே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவளுடைய கழுத்து முதல் கால்வரை செயலிழந்திருந்தது. மற்றப் பிள்ளைகள் வெளியில் மகிழ்ச்சியோடு விளையாடும்போது, இவள் மட்டும் மற்றவர்களை சார்ந்தே, குறிப்பாய் அவளுடைய அப்பாவை சார்ந்தே வாழவேண்டியிருந்தது. அவளுடைய கிராமத்தில் திரையிடப்பட்ட கருணாமூர்த்தி என்னும் கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதை அவளுடைய வாழ்க்கையைத் தொட்டது. அவள் கிறிஸ்துவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். அதன் பின்பு, அவளை சந்திக்கும் யாவருக்கும் அவள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் விளங்கினாள்.
அவள் தன்னுடைய அனுபவத்திலிருந்து, உபத்திரவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் தேவனால் நேசிக்கப்படுகிறவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதைக் கற்றுக்கொண்டாள். சோர்ந்து போய் அவளிடம் வருபவர்களிடமெல்லாம் தேவ அன்பை பகிர்ந்து கொள்வாள். அவளுடைய வாழ்க்கையின் இறுதியில், 180 பேர் அவள் மூலமாய் இயேசுவை அறிந்துகொண்டார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மிஷனரிகளாகவும் ஊழியர்களாகவும் மாறியிருக்கின்றனர்.
மோசே உபத்திரவத்தையும் போராட்டங்களையும் சந்தித்தார். ஆனால் தேவப் பிரசன்னம் அவரோடிருப்பதை அவர் உணர்ந்தார். இஸ்ரவேலர்கள் மீதான தன்னுடைய தலைமைத்துவத்தை யோசுவாவிடம் ஒப்படைத்தபோது, “உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்” (உபா. 31:6) என்று ஆலோசனை கூறினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, வல்லமை மிக்க எதிரிகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த மோசே, யோசுவாவிடம், “நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வச. 8) என்று அறிவுறுத்தினார்.
இந்தப் பாவ உலகத்தில், கிறிஸ்துவின் சீஷர்கள் பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நம்மை பெலப்படுத்தும் ஆவியானவர் நம்மோடே இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை.
“மான்ஸ்ட்ரோ” என்றப் பொன் மீன்
லாசி ஸ்காட், தனது ஊரில் இருந்த செல்லப்பிராணிகள் கடையிலிருந்தபோது, தொட்டியின் அடியில் ஒரு மீன் சோர்ந்திருப்பதைக் கண்டாள். அதின் செதில்கள் கருப்பாக மாறி, அதின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பத்து வயதான அந்த மீனை விலைக்கு வாங்கிய லாசி, அதற்கு “மான்ஸ்ட்ரோ” என்று பெயரிட்டு, அதை பிரத்யேகமான மீன் தொட்டியில் வைத்து தினமும் தண்ணீர் மாற்றி அதைப் பராமரித்தாள்.
மான்ஸ்ட்ரோவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அது மெல்லமாக நீந்த துவங்கி, உருவத்திலும் வளர்ச்சியடைந்தது. அதின் கருப்பு செதில்கள் தங்க நிறத்திற்கு மாறியது. லாசியின் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பினால், மான்ஸ்ட்ரோ புதுப்பிக்கப்பட்டது.
லூக்கா 10ஆம் அதிகாரத்தில், கள்ளர்களால் காயப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனைக் குறித்த கதையை இயேசு சொல்லுகிறார். காயப்பட்ட அந்த மனிதனின் வேதனையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியனும் லேவியனும் அவனை கடந்து சென்றனர். ஆனால் ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அங்கத்தினரான ஒரு சமாரியன், அவனைப் பராமரித்து, அவனுடைய தேவைக்கு பண உதவியும் செய்தான் (லூக்கா 10:33-35). அந்தக் கதையில் சமாரியனே உண்மையான நண்பன் என்று நமக்கு சொன்ன இயேசு, அதையே செய்யும்படி மக்களை வலியுறுத்தினார்.
மரிக்கும் தருவாயில் இருந்த அந்த மீனுக்கு லாசி செய்ததுபோல, தேவையிலுள்ளவர்களுக்கு நாமும் நன்மை செய்வோம். ஆதரவற்ற, வேலையில்லாத, செயலிழந்த, தனிமையிலிருக்கும் நண்பர்கள் அநேகர் நம்முடைய பாதையில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தை கண்டறிந்து, அவர்களை அக்கறையோடு பராமரிப்போம். அன்பான வாழ்த்துக்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட உணவு, சிறு பண உதவிகள் ஆகியவற்றின் மூலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய தேவ அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கலாம்.
பேரழிவால் அசைக்கப்படுதல்
1717ஆம் ஆண்டு வடக்கு ஜரோப்பாவில், ஒரு மாபெரும் புயல் வீசியது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கபட்ட ஒரு தேசத்தின் அரசாங்கம் ஆச்சரியமான தீர்மானத்தை எடுத்ததென வரலாறு தெரிவிக்கிறது. குரோனிஞ்சன் தேசத்தின் நகர அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக “ஜெப நாள்” ஒன்றை ஒழுங்குசெய்தனர். ஜனங்கள் அனைவரும் திருச்சபையில் கூடி, “பிரசங்கங்களை கேட்டு, பாடல்களை பாடி, மணிக்கணக்காய் ஜெபித்தனர்” என்று ஒரு சரித்திர நிபுணர் பதிவுசெய்கிறார்.
யோவேல் தீர்க்கதரிசியும், அனுமதிக்கப்பட்ட பேரழிவினை சந்தித்து தேவ சமுகத்தில் மன்றாடிய ஜனங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறார். திரள்கூட்ட வெட்டுக்கிளிகள் தேசத்தைச் சூறையாடி, “அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து” பாழாக்கியது (யோவேல் 1:7). யோவேலும் அவருடைய ஜனங்களும் இந்தப் பேரழிவினால் ஆழ்ந்த துயரத்திற்குள்ளாகி, “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (யோவேல் 1:19) என்று உதவிக்காய் கெஞ்சினர்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாவத்தின் காரணமாகவும் விழுந்து போன இவ்வுலகத்திநிமித்தமும், வட ஐரோப்பியரும், யூதரும் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 8:20-22). அந்தத் தருணங்களில் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிப்பதே சரியானதென்பதை அறிந்து செயல்பட்டனர் (யோவேல் 1:19). தேவன் அவர்களைப் பார்த்து, “ஆதலால் நீங்கள் இப்பொழுதே ... உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று சொன்னார்.
நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும் பேரழிவுகளையும் நாம் சந்திக்க நேரிட்டால், கண்ணீரோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடத்திற்குத் திரும்பக்கடவோம். அவர் “இரக்கமும்” “மிகுந்த கிருபையுமுள்ளவர்” (வச. 13), நம்மை அவரிடமாய் சேர்த்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் நமக்கு அருளுவார்.
அறிவிக்கப்படாத ஐசுவரியம்
செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே, ஒரு சுற்றுப்பாதையில், டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு சிறிய கோள் தெரிந்தது. அங்கு விலையேறப்பெற்ற தங்கம், இரும்பு, நிக்கல் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பூமிவாசிகள் தற்போதைக்கு இந்த வளத்தை அனுபவிக்கவில்லை. அதில் உள்ளப் பாறையை ஆய்வுசெய்ய ஓர் ஆய்வுக்குழுவை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
நமக்கு எட்டாத விலையேறப்பெற்றவைகளை நினைக்கும் போது ஆசையைத் தூண்டுகிறதாகவும் அதே நேரத்தில் சோர்வடையச் செய்கிறதாகவும் இருக்கிறது. ஆனால் நிச்சயமாய் ஒருநாள், விஞ்ஞானிகள் அந்த கிரகத்தில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டெடுப்பர். நாம் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? அதை நோக்கிச் செல்கிறோமா?
முதலாம் நூற்றாண்டின் ரோம திருச்சபைக்கு, பவுல், தேவனோடுள்ள உறவின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பொக்கிஷங்களைக் குறித்து குறிப்பிடுகிறார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33). ஜேம்ஸ் டென்னி என்னும் வேத நிபுணர், இந்தப் பொக்கிஷங்களை, “உலகத்தின் பெரிய தேவையை சந்திக்கும் தேவ அன்பாகிய பொக்கிஷம்” எனக் குறிப்பிடுகிறார்.
தங்கத்தைக் காட்டிலும், வெகு தூரத்திலிருக்கும் கோள்களைக் காட்டிலும், இதுவல்லவா தேவையில் இருப்போருக்கு வேண்டும்? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு தெய்வீக ஞானம் என்னும் பொக்கிஷத்தை நாம் வேதத்தில் தோண்டியெடுக்க வேண்டும். இந்தப் பொக்கிஷங்களை தோண்டி, தேவனை இன்னும் அறிந்துகொள்வதற்கு தேவன் நமக்கு உதவிசெய்வாராக.
துணிச்சலாய் நிற்பது
இந்திய வரலாற்றில் பெண்களுக்கு அநேக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பண்டித ரமாபாய் வெட்கப்பட்டு ஒளிந்துகொள்ளாமல், துணிச்சலாய் முன்வந்து, ஆரிய மகளிர் சமாஜத்தை நிறுவினார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமுதாயத் தடைகள் மத்தியிலும் பெண் கல்விக்காகவும், மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார். அவர் ஒருமுறை, “தேவனோடு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பயமோ, இழப்போ, வேதனையோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.
தன் ஜனத்தின் மீது நடத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு விரோதமாக பேசுவதற்கு பெர்சிய தேசத்தின் அரசியான எஸ்தர் தயங்கினாள். அவள் பேசுவதற்கு தயங்கினால் அவளும் அவளுடைய குடும்பமும் அழிந்துபோகும் என அவளுடைய மாமன் அவளை எச்சரித்தான் (எஸ்தர் 4:13-14). இது துணிச்சலாய் செயல்படவேண்டிய தருணம் என்று எண்ணி, “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” (வச. 14) என்று அறிவித்தான். அநீதிக்கு விரோதமாய் குரல் கொடுப்பதா? நமக்கு பிரச்சனை கொடுக்கிறவர்களை மன்னிப்பதா? இதுபோன்ற சவாலான தருணங்களில், தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (எபி. 13:5-6). நம்மை மிரட்டும் தருணங்களில் நாம் தேவனின் உதவியை நாடுவோமாகில், “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை” கொடுத்து நம்மை முடிவுபரியந்தம் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7).