இரக்கமுள்ள தகப்பன்
எட்டு வயது நிரம்பிய கேபிரியலுக்கு மூளையிலிருந்த கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அது அவனுடைய தலையின் ஒரு ஓரத்தில் தழும்பை ஏற்படுத்தியது. அந்த தழும்பிநிமித்தம், நான் ஒரு மிருகத்தைப் போல உணருகிறேன் என்று அவன் சொல்லக் கேட்ட அவனுடைய அப்பா, ஒரு யோசனையை செயல்படுத்தினார். தன்னுடைய மகன் மீதான தன்னுடைய அன்பிற்கு அடையாளமாய், கேபிரியேலுக்கு இருப்பதுபோலவே தன்னுடைய தலையின் ஓரத்திலும் ஒரு வடிவத்தை பச்சைக் குத்திக்கொண்டார்.
தேவன் “தன் பிள்ளைகளுக்கு” இதே போன்ற இரக்கமுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 103:13). மனித வாழ்க்கையை தெய்வீக அன்போடு உருவகப்படுத்தி தாவீது கூறுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு மென்மையாய் இரங்குவதுபோல தேவன் இரங்குகிறார் என்று குறிப்பிடுகிறார் (வச. 17). ஒரு மாம்சீக தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குவதுபோலவே, பரலோகத்திலிருக்கும் தேவனும் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். தேவன் தன் ஜனங்கள் மீது மனதுருகும் இரக்கமுள்ள தகப்பன். நாம் நேசிக்கப்படாதவர்களாயும் பெலவீனர்களாயும் உணரும்போது, நம் மீதான பரலோக தகப்பனின் அன்பை விசுவாசத்தால் பெற்றுக்கொள்ளலாம். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே” (1 யோவான் 3:16)
நம்முடைய இரட்சிப்பிற்கேதுவான இரக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்த செய்கையின் மூலம் அவர் நம்மீது வைத்த அன்பை அவருடைய சிலுவையினூடாய் நாம் பார்க்கமுடியும். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15) என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? அதை நிரூபிக்க அவரிடத்தில் தழும்புகள் உண்டு.
என் படைப்பு
ஏழு வயது நிரம்பிய தாமஸ் எடிசன் பள்ளியில் சரியாய் படிக்கவில்லை. அவனை “மக்கு” என்று அவனுடைய ஆசிரியர் திட்டியிருக்கிறார். பள்ளி நிர்வாகம் அவனை வீட்டிற்கு அனுப்பியது. அவனுடைய ஆசிரியரிடம் பேசிய அவனுடைய தாயார், அடுத்த நாளிலிருந்து அவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தாயாரின் கனிவுள்ள அன்பினாலும், உற்சாகத்தினாலும், பெரிய விஞ்ஞானியாய் அவரால் பிற்காலத்தில் மாற முடிந்தது. அவர் சொல்லும்போது, “என்னை வனைந்தவர் என்னுடைய அம்மா தான். அவர் உண்மையானவர்; நான் அவர்களுக்காக வாழ விரும்புகிறேன்; அவரை ஒருபோதும் காயப்படுத்தவே கூடாது என்று விரும்புகிறேன்” என்று தன்னுடைய தாயைக் குறித்து பெருமிதம்கொள்ளுகிறார்.
அப்போஸ்தலர் 15 இல், தங்களோடு மாற்கு என்னும் யோவானை ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வரை பவுலும் பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்தனர். அவன் பம்பிலியா நாட்டில் ஊழியத்திலிருந்து விட்டு பிரிந்துபோனதினால், பவுல் அவனை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை (வச. 36-38). அதின் விளைவாய் பவுலும் பர்னபாவும் பிரிய நேரிட்டது. பவுல் சீலாவோடும், பர்னபா யோவானோடும் சேர்ந்து ஊழியம் செய்தனர். மாற்கு எனப்பட்ட யோவான் மிஷனரியாய் செயல்படுவதற்கு, பர்னபா இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரே பிற்காலத்தில் மாற்கு சுவிசேஷத்தை எழுதினார். சிறைச்சாலையில் பவுலுக்கு ஆதரவாய் இருந்தார் (2 தீமோத்தேயு 4:11).
நம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, நம் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தியவர்களை எண்ணிப்பார்க்கலாம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் நாமும் அதேபோல செயல்பட தேவன் நம்மை அழைக்கிறார். யாரை நீங்கள் உற்சாகப்படுத்தப்போகிறீர்கள்?
உடைத்து அழகாக்கப்படுதல்
குஜராத் மாகாணத்தின் பிரபலமான “ரோகன் ஓவியங்கள்” பார்ப்பதற்கு மிகவும் எளிமையாய் தெரியலாம். ஆனால் அந்த ஓவியத்தின் ஒரு சிறு பகுதியை வடிவமைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறதுஎன்பதை அறிந்துகொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட கனிம அடிப்படையிலான வர்ணங்களை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, “மெல்லமான ஓவியம்” என்று நாம் அழைக்கும் இந்த ஓவியத்தை தயார் செய்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக எடுக்கும். அதை உன்னிப்பாய் கவனித்தால், அதின் வேலைப்பாடுகளும் அழகும் தெரியும். சுவிசேஷமும் ஏறத்தாழ இதைப்போன்றதே. உடைக்கப்பட்ட கனிமங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் போலவே, இயேசு தன் பாடுகளின் மூலம் உடைக்கப்பட தன்னை ஒப்புக்கொடுத்து, முழு உலகத்திற்குமான நம்பிக்கைக்குக் காரணரானார்.
நம்முடைய வாழ்க்கையில் உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட அனுபவங்களை தேர்ந்தெடுத்து, அதை புதிய அழகான காரியங்களாய் மாற்றுவதற்கு தேவன் விரும்புகிறார். தாவீது, தன்னுடைய சுயத்தினால் உடைக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றுவதற்கு தேவனுடைய உதவியை நாடினார். இன்னொருவனுடைய மனைவியை இச்சித்து, அவள் நிமித்தம் அவளுடைய கணவனை கொலை செய்யத் துணிந்த தன்னுடைய தவறை உணர்ந்து தாவீது பாடிய பாடலே சங்கீதம் 51. தாவீது, “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” (வச. 17) தேவனுக்கு அர்ப்பணித்து, இரக்கத்திற்காய் கெஞ்சினான். நருங்குண்டதும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரேயப் பதம், “நித்கே.” அதற்கு, “சுக்குநூறாய் நொருங்கியது” என்று பொருள்.
தாவீதின் இருதயத்தை தேவன் புதிதாக்குவதற்கு (வச. 10), அது முழுவதுமாய் நொறுக்கப்படவேண்டியிருந்தது. மன்னிக்கிறதில் தயைபெருத்த உண்மையுள்ள தேவனிடத்தில் தாவீது தன்னுடைய உடைக்கப்பட்ட இருதயத்தை ஒப்படைத்தான்.
விவாக உருவகம்
திருமணமாகி, 22 ஆண்டுகள் வாழ்ந்த பிறகும், மெரினோடு என்னுடைய வாழ்க்கை கடந்துபோன விதத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. நான் ஒரு எழுத்தாளன். மெரின் ஒரு புள்ளியல் நிபுணர். நான் வார்த்தைகளோடு வேலை செய்கிறேன். அவளோ எண்களோடு வேலை செய்கிறாள். நான் அழகை எதிர்பார்க்கிறேன். அவளோ, செயல்பாட்டை எதிர்நோக்குகிறாள். நாங்கள் வெவ்வேறு சிந்தனை உலகத்தை சார்ந்தவர்கள். மெரின் சரியான நேரத்தை பின்பற்றுவாள். நானோ சற்று தாமதமாகவே செயல்படுபவன். ஓட்டலுக்கு சென்றால், நான் புதிய வகை உணவை சாப்பிட நினைப்பேன்; அவளோ, வழக்கமாய் சாப்பிடும் உணவையே தெரிந்தெடுப்பாள். ஆர்ட் கேலரியில் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நான் தேர்ந்தெடுக்கவே ஆரம்பிப்பேன். மெரினோ, கீழே உள்ள உணவகத்தில் அமர்ந்துகொண்டு நான் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வேன் என்று சலித்துக்கொள்வாள். நாங்கள் இருவரும் பொறுமையை கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம்.
நாங்கள் சேர்ந்து சிரிப்போம், பிரயாணம் செய்வோம், சேர்ந்து ஜெபிப்போம். நான் அவளுடைய முன்னேற்றத்திற்கு காரணமானேன். அவள் என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாவாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தேவனுக்குள் வளர்கிறோம். பவுல், சில நல்ல நோக்கத்தோடு, திருச்சபையை திருமணத்தோடு ஒப்பிடுகிறார் (எபேசியர் 5:21-33). திருமண உறவைப்போலவே, திருச்சபையும் பலதரப்பட்ட வித்தியாசமான மனிதர்களைக் கொண்டு, அவர்களுக்குள் மனத்தாழ்மையும் நீடிய பொறுமையும் உண்டாகும்பொருட்டு, “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (4:2) இருக்கும்படிக்கு கூறுகிறார். திருமண உறவைப்போலவே, திருச்சபையிலும் வித்தியாசமான நம்பிக்கைகளை உடையவர்கள், ஒருமன ஆவியோடு செயல்படுகிறார்கள் (வச. 11-13). உறவில் விரிசல் ஏற்படுவது திருச்சபைக்கும் திருமணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதை மேற்கொண்டு, கிறிஸ்துவைப்போல மாற முடியும்.