வீடுகளின் ஸ்திரத்தன்மையை பரிசோதிக்கத் தீர்மானித்த பொறியாளர்கள், மூன்று வகையான வீடுகளைக் கட்டி, அதை 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் மூலம் பரிசோதித்தனர். அதில் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட வீடு முற்றிலும் அழிந்துபோனது. மண் சாந்து மற்றும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட வீடும் விழுந்துபோனது. ஆனால் நல்ல தரமான சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடானது பலத்த விரிசல்களோடு அப்படியே நின்றது. “இதில் நீங்கள் எந்த வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியோடு பொறியாளர் இந்த ஆய்வினை நிறைவுசெய்தார். 

தேவனுடைய இராஜ்யத்தின் மேன்மையைக் குறித்த இயேசுவின் போதனையின் இறுதியில், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று குறிப்பிடுகிறார். பலத்த காற்று வீசியபோதும் அந்த வீடு நிலைத்து நின்றது. ஆனால் அதற்கு முரணாக, தன்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26) என்றும் குறிப்பிடுகிறார். பெருங்காற்று வீசியபோது, புயலின் கோரத்தை தாங்க முடியாமல் அந்த வீடானது விழுந்துபோனது.  

இயேசு மக்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார்: கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நிலையான அஸ்திபாரத்தில் வீட்டைக் கட்டுவது அல்லது சுய வழியில் வீட்டைக் கட்டுவது. நாம் சரியானதைத் தெரிந்தெடுக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகளின் மீதும் கட்டுகிறோமா? அல்லது சுய வழியில் கட்டுகிறோமா? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீது கட்ட முற்படுவோம்.