Archives: மே 2022

சூரியகாந்தியின் யுத்தம்

பூச்செடிகளைக் குறித்த என் கருத்தும், எங்கள் பக்கத்து வீட்டு பசுமாடுகளின் கருத்தும் வித்தியாசமானது. ஒவ்வொரு கோடையிலும் நான் பூச்செடிகளை நடுகையில், அதின் பூத்துக்குலுங்கும் அழகையே எதிர்பார்ப்பேன். ஆனால், அந்த மாடுகள் அதைக் குறித்து சற்றும் கவலைப்படுவதில்லை. அதில் ஒன்றும் மிச்சமில்லாமல் தின்றுவிடும். ஒவ்வொரு கோடையிலும் இந்த நாலு குளம்பு நண்பர்களுடன் போராடி, என் பூக்களைக் காப்பாற்றுவதே என் ஆண்டான்டு வழக்கமாக மாறினது. சிலவேளை நான் ஜெயிப்பேன், சிலவேளை அவை ஜெயிக்கும்.
இதேபோன்ற ஒரு யுத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாய் நாம் ஒவ்வொருநாளும் நம் எதிரியான சாத்தானுடன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய மகிமைக்காய் ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதே நம் இலக்காய் வைத்து செயல்படுகிறோம். நம் விசுவாசத்தை அவமாக்கி, நம் வளர்ச்சியை சாத்தான் தடைபண்ண வேண்டுமென்றுள்ளான். ஆனால் நம்மை பரிபூரணமுள்ளவர்களாக்க, அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவரான இயேசுவால் கூடும் (கொலோசெயர் 2:10). அதாவது, அவர் நம்மை முழுமையாக்குகிறார் என்று பொருள். கிறிஸ்து சிலுவையில் பெற்ற வெற்றி என்பது, மாடுகளிடமிருந்து தப்பித்து பூத்துக்குலுங்கும் அந்த பூக்களைப் போன்றது.
இயேசு நமக்கு விரோதமாக இருந்த கையெழுத்தைக் குலைத்து (வச.14), சிலுவையின்மேல் ஆணியடித்து, நம்மைக் கட்டியிருந்த அனைத்து அதிகாரங்களின் மீதும் ஜெயமெடுத்தார். நாம் “விசுவாசத்தில் உறுதிப்பட்டு” (வச.7), அவரோடே உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் (வச.13). அவரால் நாம் பெலப்படுத்தப்பட்டு (வச.10), எதிரியின் தாக்குதல்களை மேற்கொண்டு, கிறிஸ்துவில் வாழ்ந்து நம் மெய்யான அழகோடு பூத்துக் குலுங்குவோம்.

நம் தேவன் எவ்வளவு பெரியவர்!

மக்களை அடையாளம் காணுவதற்கு அவர்களின் கைரேகையை பயன்படுத்தும் வழக்கம் வெகுகாலமாய் வழக்கத்திலுள்ளது. ஆனால் அதையும் ஏமாற்றக்கூடும். அதேபோன்று மனித கண்களிலிருக்கும் கருவிழியின் வடிவத்தையும் அங்கீகார அடையாளமாய் பயன்படுத்துகின்றனர். ஆனால் கான்டாக்ட் லென்ஸின் மூலம் அந்த அடையாளத்தையும் மாற்ற முடியும். இதுபோன்ற அங்க அடையாள தொழிநுட்பத்தை எளிதில் ஏமாற்றிவிடலாம். எது பிரத்யேகமான தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது? ஒவ்வொரு மனிதனின் இரத்தநாளங்களின் அமைப்புகளை மாற்றியமைக்கவே முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமியில் வசிக்கும் எல்லோரைக் காட்டிலும் உங்களுடைய பிரத்யேகமான இரத்தநாள அமைப்பு உங்களை வித்தியாசமான நபராய் அடையாளம் காட்டுகிறது.
நம்மிலிருக்கும் இந்த ஆச்சரியமான வித்தியாசங்களை கருதுகையில், நம் சிருஷ்டிகரை ஆராதிக்கவேண்டும் எனும் வியப்புணர்வே மேலோங்குகிறது. நாம் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டவர்கள் (சங்கீதம் 139:14) என்று தாவீது நமக்கு நினைப்பூட்டுகிறார். அது அக்களிப்பான ஓர் அங்கீகாரம். சங்கீதம் 111:2, “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது” என்றும் நம்மை நினைப்பூட்டுகிறது.
அந்த தெய்வீக சிருஷ்டிகரே நம் மொத்த கவனத்திற்கும் பாத்திரர். தேவனுடைய கிரியைகளில் மகிழ்கையில், நாம் அவரிலும் மகிழ வேண்டும். அவர் கிரியைகள் பெரியவை, அவரோ அதைக்காட்டிலும் மகத்துவமானவர். அந்த உணர்வே சங்கீதக்காரனை, “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்கீதம் 86:10) என்று துதிக்கத் தூண்டுகிறது.

தாய் போல நேசி

1943இல் வங்காளத்தின் பஞ்சத்தில் தான் வளர்ந்த விதத்தை மாலினி தன் பேரனிடத்தில் சொன்னாள். அவளுடைய ஏழ்மையான குடும்பம், பெரும்பாலும் அரிசிக்கூழையே குடித்தனர். பலநேரம் பட்டினியாய் இருந்தனர். அவள் தகப்பனார் எப்போதாவது மீன்பிடித்துக் கொண்டுவருவார். இரவு உணவு சமைத்த அவருடைய தாயார், "மீனின் தலைப்பகுதியே எனக்கு போதுமானது, அதுதான் நல்லது" என்று எடுத்துக்கொள்வாராம். ஆண்டுகள் கடந்த பின்புதான், மீனின் தலைப்பகுதியில் எந்த சதையும் இருக்காது என்பதைத் மாலினி தெரிந்துகொண்டாள். அவள் தாயார் அதை சாப்பிடவும் இல்லை. ஆனால் அது சுவையாய் இருந்தது போல காட்டிக்கொள்வாராம். “பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று அவர் அப்படிச் செய்வார். நாங்கள் அவரைக் குறித்து கவலைப்பட்டதேயில்லை.” என்றாள் மாலினி.
நாளைக்கு தாய்மார்கள் தினம் கொண்டாடப்போகிற நாம், அவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்வோம். அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். அவர்களைப் போலவே நேசிக்கப் பழகுவோம்.
“பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல” (1 தெசலோனிக்கேயர் 2:7) பவுல், தெசலோனிக்கேய சபைக்கு ஊழியம் செய்தார். “வெகு போராட்டத்தோடே” அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்ததாகவும், அவர்களுக்காய் தன் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாயிருப்பதாகவும் அறிவிக்கிறார் (வச. 2,8). "ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்" (வ.9). என்கிறார். ஒரு தாயைப் போல் பிரயாசப்படுகிறார்.
சிலர் தாயின் அன்பை புறக்கணிக்கக்கூடும். "ஆனால் எங்களுடைய பிரயாசம் வீணாகவில்லை" (வச. 1) என்று பவுல் குறிப்பிடுகிறார். மற்றவர்கள் எப்படி நம்மை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தியாகமாய் ஊழியம் செய்ய நம்மால் தீர்மானிக்க முடியும்ம. நம் பரம தகப்பனைப் போலவே, நம் தாயும் பெருமிதம் கொள்வாள்.

அவர் அறிவார்

யமுனா தன் செவிலியர் பணியை மும்பையில் துவங்கவிருந்தாள். வேலைவாய்ப்பு குறைவாயிருந்த தன் கிராமத்தைக் காட்டிலும் தன் குடும்பத்தைப் பராமரிக்க இது அவளுக்கு ஏதுவாயிருந்தது. அவள் புறப்படுவதற்கு முந்தின நாள் இரவில், தன் ஐந்து வயது மகளைப் பராமரிக்கும் தன்னுடைய சகோதரிக்கு சில ஆலோசனைகளைக் கொடுத்தாள். “ஒரு ஸ்பூன் சர்க்கரைக் கொடுத்தால்தான் அவள் மருந்து சாப்பிடுவாள்; அவள் கொஞ்சம் கூச்சப்படுவாள்; தன் நண்பர்களுடன் சகஜமாய் விளையாடுவாள்; ஆனால் அவளுக்கு இருட்டைக் கண்டால் பயம்...”
மறுநாள் ரயிலின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, யமுனா தேவனை நோக்கி, "ஆண்டவரே, என்னைப் போல் என் மகளை யாரும் புரிந்துகொள்ள முடியாது. நான் அவளோடு இருக்க முடியவில்லை. நீர் அவளோடு கூட இரும்” என்று ஜெபித்தாள்.
நாம் நேசிக்கும் மக்களை நாம் நன்கு அறிவோம். அவர்கள் நமக்கு அதிகம் பிடித்தவர்கள் என்பதினால் அவர்களைக் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருப்பது இயல்பு. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாம் அவர்களோடு இருக்கமுடியாவிட்டால், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோவென்று நாம் கவலைப்படுகிறோம,காரணம் அவர்களை நம்மைப்போல யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
சங்கீதம் 139இல், எல்லோரைக் காட்டிலும் நம்மை தேவன் நன்கு அறிவார் என்று தாவீது உணர்த்துகிறார். நம் அன்புக்குரியவர்களையும் அவர் ஆழமாக அறிந்திருக்கிறார் (வச. 1-4). அவரே அவர்களையும் உண்டாக்கினார் (வச. 13-15), ஆகவே அவர்கள் தேவையையும் நன்கு அறிந்திருக்கிறார். அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வை அவர் அறிந்திருக்கிறார் (வச. 16). அவர்களோடே கூட இருக்கிறார், அவர்களைக் கைவிடமாட்டார் (வச. 5, 7-10).
மற்றவர்களுக்காய் நீங்கள் கவலைப்படும்போது அவர்களை நன்றாய் அறிந்திருக்கிற, ஆழமாய் நேசிக்கிற தேவனுடைய பொறுப்பில் ஒப்படைத்துவிடுங்கள்.

எங்கள் பிதாவே

ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.