யமுனா தன் செவிலியர் பணியை மும்பையில் துவங்கவிருந்தாள். வேலைவாய்ப்பு குறைவாயிருந்த தன் கிராமத்தைக் காட்டிலும் தன் குடும்பத்தைப் பராமரிக்க இது அவளுக்கு ஏதுவாயிருந்தது. அவள் புறப்படுவதற்கு முந்தின நாள் இரவில், தன் ஐந்து வயது மகளைப் பராமரிக்கும் தன்னுடைய சகோதரிக்கு சில ஆலோசனைகளைக் கொடுத்தாள். “ஒரு ஸ்பூன் சர்க்கரைக் கொடுத்தால்தான் அவள் மருந்து சாப்பிடுவாள்; அவள் கொஞ்சம் கூச்சப்படுவாள்; தன் நண்பர்களுடன் சகஜமாய் விளையாடுவாள்; ஆனால் அவளுக்கு இருட்டைக் கண்டால் பயம்…”
மறுநாள் ரயிலின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, யமுனா தேவனை நோக்கி, “ஆண்டவரே, என்னைப் போல் என் மகளை யாரும் புரிந்துகொள்ள முடியாது. நான் அவளோடு இருக்க முடியவில்லை. நீர் அவளோடு கூட இரும்” என்று ஜெபித்தாள்.
நாம் நேசிக்கும் மக்களை நாம் நன்கு அறிவோம். அவர்கள் நமக்கு அதிகம் பிடித்தவர்கள் என்பதினால் அவர்களைக் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருப்பது இயல்பு. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாம் அவர்களோடு இருக்கமுடியாவிட்டால், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோவென்று நாம் கவலைப்படுகிறோம,காரணம் அவர்களை நம்மைப்போல யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
சங்கீதம் 139இல், எல்லோரைக் காட்டிலும் நம்மை தேவன் நன்கு அறிவார் என்று தாவீது உணர்த்துகிறார். நம் அன்புக்குரியவர்களையும் அவர் ஆழமாக அறிந்திருக்கிறார் (வச. 1-4). அவரே அவர்களையும் உண்டாக்கினார் (வச. 13-15), ஆகவே அவர்கள் தேவையையும் நன்கு அறிந்திருக்கிறார். அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வை அவர் அறிந்திருக்கிறார் (வச. 16). அவர்களோடே கூட இருக்கிறார், அவர்களைக் கைவிடமாட்டார் (வச. 5, 7-10).
மற்றவர்களுக்காய் நீங்கள் கவலைப்படும்போது அவர்களை நன்றாய் அறிந்திருக்கிற, ஆழமாய் நேசிக்கிற தேவனுடைய பொறுப்பில் ஒப்படைத்துவிடுங்கள்.