பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில், 608 மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள தயாரானார்கள். கல்லூரி முதல்வர், மாணவர்களின் தேசங்களின் பெயர்களை வாசித்து அவர்களை வரிசையில் நிற்கும்படி கூறினார். அப்கானிஸ்தான், பொலிவியா, போஸ்னியா… என்று அறுபது நாடுகளின் பெயர்களை முதல்வர் வாசித்தார். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், மகிழ்ச்சியோடு வரிசையில் நின்றனர். அறுபது நாடுகள்; ஒரே பல்கலைக்கழகம். 

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அழகான உதாரணங்கள், ஒற்றுமையில் வாழும் மக்களை எதிர்பார்க்கும் தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. 

சங்கீதம் 133ல் தேவ ஜனத்தின் ஒற்றுமை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் எருசலேமுக்கு பண்டிகையை ஆசரிக்கப்போகும் இஸ்ரவேலர்களால் பாடப்பெறுகிற சங்கீதம். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற வேற்றுமைகள் இருந்தாலும், ஒருமித்து வாசம்செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது (வச. 1). சகோதர சிநேகம், பனிக்கும் (வச. 3), ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களை அபிஷேகம் செய்யும்போது (யாத்திராகமம் 29:7), அவர்களின் தலையிலிருந்து தாடி வழியாக வஸ்திரத்தின் மீது விழும் அபிஷேக தைலத்துக்கும் ஒப்பிடப்பட்டள்ளது (வச. 2). இந்த உருவகங்கள் இணைந்து, ஒற்றுமை என்பது தேவனுடைய அபரிவிதமான ஆசீர்வாதத்தை வழிந்தோடச்செய்யக் கூடியது என்பதை உணர்த்துகிறது.

இனம், தேசம், வயது என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் வேற்றுமைகள் இருந்தாலும் ஆவியில் ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது (எபேசியர் 4:3). இயேசு நம்மை நடத்துகிற அந்த பொதுவான பிணைப்பை நாம் கொண்டாடும்போது, தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வேற்றுமைகளை தழுவி, மெய்யான ஒற்றுமையின் மேன்மையை நாம் அனுபவிக்கக்கூடும்.