அப்பா இல்லாமல் வளர்ந்ததால், ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு கொடுக்கவேண்டிய நடைமுறை ஞானத்தை ராப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதுபோன்ற வாழ்க்கையின் அத்தியாவசியமான ஞானத்தை எவரும் இழந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், “இதை எப்படி செய்வது, அப்பா!” என்ற பெயரில் அலமாரியை ஒழுங்குசெய்வதிலிருந்து வாகன சக்கரத்தை மாற்றுவது வரைக்கும் அனைத்தையும் காணொலிகளாய் வெளியிட்டார். அவருடைய மென்மையான அணுகுமுறையினால் யூடியூப் வட்டாரத்தில் லட்சக்கணக்கான வாசகர்களை சேகரித்தார்.
நம்முடைய வாழ்க்கையின் மதிப்புமிக்க திறமைகளை கற்றுத்தரவும், கடினமான பாதைகளில் நமக்கு ஆலோசனை கூறவும், அனுபவமிக்க பெற்றோரின் உதவியை நாம் அநேக வேளைகளில் எதிர்பார்க்கிறோம். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி தங்களை தேசமாய் ஸ்தாபிக்க முயற்சித்த மோசேக்கும் ஞானம் தேவைப்பட்டது. மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மீது சுமத்தப்பட்ட பாரமான சுமையைப் பார்க்கிறார். எனவே தலைமைத்துவத்தை பகிர்ந்துகொடுக்கும்படிக்கு அவனுக்கு ஆலோசனை கொடுக்கிறார் (யாத்திராகமம் 18:17-23). “மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்” (வச. 24).
நம் எல்லோருக்கும் ஞானம் தேவை என்பதை தேவன் அறிவார். சிலருக்கு கர்த்தருக்குள் இருக்கிற பெற்றோர்கள் இருப்பதினால் அவர்களின் துணையை நாடலாம். அப்படியில்லையென்றால், கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற தேவனை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:5). அவர் வேதம் முழுவதிலும் ஞானத்தைக் பிரதிபலித்துள்ளார். அதற்கு தாழ்மையோடும் உண்மையோடும் செவிகொடுக்கும்போது, நாமும் ஞானமுள்ளவர்களாய் மாறி (நீதி. 19:20), நம் ஞானத்தை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள முடியும்.
மூத்தவர்களின் ஆலோசனையின் மூலம் நீங்கள் எந்தவிதத்தில் பயனடைந்துள்ளீர்கள்? உங்களோடு யார் பயணிக்கிறார்கள்?
பரலோகத்தின் தகப்பனே, என்னுடைய வாழ்க்கையில் நீர் வைத்துள்ள மக்களின் ஞானமான ஆலோசனைகளுக்கு செவிகொடுக்க எனக்கு உதவிசெய்யும்.