ஹான்னா வில்பர்போர்ஸ் (பிரபல அமெரிக்க அரசியல்வாதி ஒருவரின் உறவினர்) மரண படுக்கையில் இருந்தபோது, அவர் எழுதிய கடிதத்தில், அவருடைய சக விசுவாசி ஒருவரின் மரணத்தைக்குறித்து சொல்லுகிறார்: “மகிமைக்கு சென்ற இந்த நபருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்; அவர் இதுவரை காணாமல் நேசித்த இயேசுவோடு இருக்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது.” அதன் பின், “நான் நலமாயிருந்தாலும் அல்லது மோசமான நிலையில் இருந்தாலும், இயேசு எப்போதுமே நல்லவராகவே இருக்கிறார்” என்று தன்னுடைய நிலையை விவரித்தார்.
அவர்களுடைய வார்த்தை சங்கீதம் 23ல் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடத்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” என்னும் தாவீதின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது (வச.4). தாவீது அதுபோன்ற மரணத்தின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டு தன் இருதயத்தின் ஆழத்தில் இருந்து அந்த வார்த்தைகளைக் கூறுகிறார்;. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” (வச.1) என்று தன் சங்கீதத்தைத் துவக்கும் தாவீது, “தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” (வச.4) என்று பின்பாக அவரிடத்தில் நேரடியாய் பேசுகிறார்.
பூமியையும் உலகத்தையும் உண்டாக்கிய (சங்.90:2) சர்வ வல்லமையுள்ள தேவன், நம்முடைய கடினமான சூழ்நிலைகளில் இரக்கமுள்ளவராய் நம்மோடு நடந்து வருகிறார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். நம்முடைய சூழ்நிலை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ, எப்படி இருப்பினும், நாம் நம்முடைய மேய்ப்பரும் இரட்சகரும் சிநேகிதருமாகிய தேவனிடத்தில் திரும்புவது நன்மையான ஆசீர்வாதம். அது மரணத்தையும் ஜெயித்து, “கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய்” (23:6) நம்மை நிலைக்கப்பண்ணும்.
இயேசு கிறிஸ்து மேய்ப்பராய் நம்மோடு இருக்கிறார் என்பது உங்களை எப்படி தேற்றுகிறது? இந்த நம்பிக்கையை இன்று மற்றவர்களோடு எப்படி பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள்?
என் மேய்ப்பரே, உம்முடைய உண்மைக்காகவும் தயவுக்காகவும் நன்றி! உம்மோடு நிலைத்திருக்க இன்று எனக்கு உதவி செய்யும்.