கடுமையான வலியும், என்னை பலவீனப்படுத்துகிற தலைவலியும் உள்ளுர் சபை ஆராதனையில் மீண்டும் பங்கு பெற விடாமல் என்னைத் தடுத்தது. ஆராதனைக்குப் போக முடியவில்லையே என்ற வேதனையுடன் இணையதளத்தில் பிரசங்கத்தைக் கேட்டேன். துவக்கத்தில் அதை ஒரு குறையாகவே எண்ணினேன். காணொலியில் வந்த ஒளியும் ஒலியும் என் கவனத்தை சிதைத்தது. அதன்பின்பு அந்த காணொலியில் பரீட்சயமான ஒரு பாடல் பாடப்பட்டது. அதை சேர்ந்து பாடும்போது என் கண்களில் கண்ணீர் வடிந்தது: “ஓ தேவனே என் இருதயத்தின் பார்வையாயிரும், நீரே எனக்கு பெலனாயிரும், இரவும் பகலும் என் எண்ணங்களில் நீர் இரும், எழுந்தாலும் படுத்தாலும் உம் பிரசன்னமே என் ஒளி.” தேவனுடைய நிலையான பிரசன்னம் என்னும் பரிசை உணர்ந்து, என் அறையில் அமர்ந்து கொண்டு அவரை நான் ஆராதித்தேன்.

கூடி ஆராதிக்கும் திருச்சபை ஆராதனையை வேதம் முக்கியத்துவப்படுத்தினாலும் (எபிரெயர் 10:25), திருச்சபையின் சுவர்களுக்குள் தேவனை அடைக்க முடியாது. சமாரிய ஸ்திரீயுடன் கிணற்றண்டையில் அமர்ந்து இயேசு பேசியபோது, அவர் மேசியாவின் வரம்பை மீறுகிறார் (யோவான் 4:9) என்று எண்ணப்பட்டது. கண்டன செய்தியை அறிவிப்பதற்கு பதிலாக, கிணற்றண்டை நிற்பவளிடம் பேசி அவளை நேசித்தார் (வச.10). தேவனுடைய பிள்ளைகளைக் குறித்த கர்த்தருடைய அறிவை அவர் வெளிப்படுத்தினார் (வச.17-18). தன் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தி, குறிப்பிட்ட இடத்திலிருந்து அல்லாமல், கர்த்தருடைய பிள்ளைகளின் இருதயத்திலிருந்தே உண்மையான ஆராதனையை பரிசுத்த ஆவியானவர் தூண்டுகிறார் என்று இயேசு அறிவிக்கிறார் (வச. 23-24). 

தேவன் யார் என்பதையும், அவரின் மகத்துவங்களையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நாம் நினைக்கும்போது அவருடைய தொடர்ச்சியான தெய்வீக பிரசன்னத்தை நாம் உணர முடியும். மற்றவர்களோடு சேர்ந்தோ, அல்லது தனி அறையிலோ, எங்கு ஆராதித்தாலும் இந்த தேவப் பிரசன்னத்தை நாம் உணர முடியும்.