என் தொண்டையில் இருமல் உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வு குளிர்காய்ச்சலாய் மாறியது. அது என் மூச்சுக் குழாயில் வேதனையை ஏற்படுத்தியது. அத்துடன் கக்குவான் இருமல் தொற்றிக்கொண்டது. அது பின்பாக நிமோனியா காய்ச்சலாக மாறியது.
எட்டு வாரங்கள் தொடர்ந்த அந்த இருமல் என் சரீரத்தை ஒடுக்கியது. எனக்கு வயதாகிவிட்டது என்பதை நான் நம்பவில்லை. ஆனால் எனக்கு வயதாகிறது என்பதை நம்பவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன். இந்த சரீர பெலத்திற்கு எங்களுடைய சபை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் “குறைதல்” என்று வேடிக்கையான ஒரு பெயரை வைத்திருந்தார். ஆனால் நம் ஆயுசு குறைவுபட்டுக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.
2 கொரிந்தியர் 4இல் பவுலும் இந்த குறைவுப்படுதலைக் குறித்து எழுதுகிறார். அவரும் அவருடைய உடன் ஊழியர்களும் கடந்துபோன உபத்திரவத்தை இந்த அதிகாரம் பதிவிட்டுள்ளது. தன்னுடைய புறம்பான மனுஷனானது அழிந்து கொண்டிருக்கிறது என்று தன்னுடைய ஊழியத்தின் பாதையில் தான் பட்ட பாடுகளைக் குறித்து கூறுகிறார். அவருடைய வயது, உபத்திரவம், கடினமான பாதைகள் போன்றவைகளால் அவருடைய சரீரம் தோற்றுபோனாலும், “உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” என்கிற உறுதியான நம்பிக்கையை பவுல் பிடித்திருக்கிறார். (வச.16). இதை இலேசான உபத்திரவம் என்று குறிப்பிடும் பவுல், அதனை “இனி வரும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று ஒப்பிடுகிறார் (வச.17).
இந்த இரவில் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதும், என் நெஞ்சில் இந்த சரீர குறைவுப்படுதலை நான் உணருகிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையோ, அல்லது தேவனை சார்ந்து வாழுகிற எவருடைய வாழ்க்கையும் முடிவடைவதில்லை என்பதே உண்மை.
எந்த விதமான குறைவுபடுதல் உங்களையும், உங்களை நேசிக்கிறவர்களையும் பாதிக்கிறது? ஆரோக்கிய குறைவினிமித்தம் வேதனைக்கும் சோர்வுக்கும் உட்பட்ட தருணத்தில் உங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பெலப்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள்?
தகப்பனே, எங்கள் சரீரம் குறைவுபட்டாலும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும், எதிர்கால மகிமையையும் பார்த்து, எங்களுடைய மாம்ச போராட்டங்களை மேற்கொள்ள எங்களுக்கு உதவிசெய்யும்.