1890ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனரி எரிக் லண்ட், ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, உடனடியாகக் கீழ்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும், தேவனுடைய அழைப்பில் திடநம்பிக்கையோடு தன்னுடைய மிஷினரி வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியோ மணிக்கன் என்ற பிலிப்பைன் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.
லண்ட் மற்றும் மனிக்கன், இருவரும் சேர்ந்து உள்ளுர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, பிறகு முதல் பாப்திஸ்து மிஷன் தளத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தனர். தீர்க்கதரிசியான ஏசாயாவைப் போல, லண்டும் தேவனுடைய அழைப்பிற்கு உடனடியாகக் கீழ்படிந்ததினால், அநேகர் இயேசுவிடம் திரும்பினர்.
ஏசாயா 6:8ல், நிகழ்காலத்திற்குரிய நியாயத்தீர்ப்பையும், வருங்காலத்திற்குரிய நம்பிக்கையையும் இஸ்ரவேலருக்கு அறிவிக்க விருப்பமுள்ள ஒருவரை தேவன் கேட்டபொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார். அவர், தான் “அசுத்த உதடுகளுள்ள மனிதன்”(வச. 5) என்று அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதால், அவர் தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவத்தை உணர்ந்து, தேவனுடைய சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டதாலும் (வச. 1-7), அவர் தேவனுடைய அழைப்பிற்கு மனதாரக் கீழ்படிந்தார்.
அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாக தேவன் உங்களுக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவுக் கூறுங்கள். நமக்கு உதவி செய்யவும், நம்மை வழிநடத்தவும் தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 14:26; 15:26-27). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்படிய நம்மை ஆயத்தப்படுத்துவார். ஏசாயாவைப் போல நாமும் “என்னை அனுப்பும்” என்று கூறுவோம்.
அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? அவருக்கு பதிலளிக்க எது உங்களை தடை செய்கிறது?
இயேசுவே, என்னை அழைத்து உமக்கு ஊழியம் செய்ய வைத்ததற்காக நன்றி. இதை ஒரு பாக்கியமாகக் கருதவும் உமக்கு மனமுவந்து சேவை செய்யவும் உதவியருளும்.