பிரபலமான ஒரு திரைப்படத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு நடிகர், தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு முகவராக நடிக்கிறார். தன்னுடைய மனைவியைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவளுடைய கண்களைப் பார்த்து “நீ என்னைப் பூரணப்படுத்துகிறாய்” என்று கூறுகிறார். இது இதயத்தை நெகிழவைக்கும் நாட்டுப்புறக் கதையைப் பிரதிபலிக்கும் ஒரு செய்தி. நாம் ஒவ்வொருவரும் ஒரு “பாதி”, நாம் முழுமையடைய “மற்றொரு பாதியை” கண்டுபிடிக்க வேண்டும். 

நாம் காதலிக்கும் துணை நம்மை “முழுமை”யடையச் செய்கிறார் என்ற நம்பிக்கை பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது உண்மையா? தங்களுக்கு பிள்ளைகளில்லாததினால் அவர்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று கருதும் அநேக தம்பதிகளிடம் நான் பேசி இருக்கிறேன். தங்களுக்கு பிள்ளைகளிருந்தாலும் வேறே எதையோ தொலைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இறுதியாக எந்த மனிதனும் நம்மை முழுமையாக பூரணமாக்க முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இன்னொரு தீர்வைக் கொடுக்கிறார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:9-10). தேவன் நம்மை மன்னித்து, விடுவிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஜீவனை நம்முடைய ஜீவனில் கொடுத்து நம்மை பரிபூரணப்படுத்துகிறார் (வச. 13-15).

திருமணம் நல்லது. ஆனால் அது நம்மை பரிபூரணமாக்காது. இயேசு ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். ஒரு நபரோ, தொழிலோ அல்லது மற்ற ஏதாவதோ நம்மை பரிபூரணமடையச்செய்யும் என்று நாம் எதிர்பார்க்காமல், தேவன், அவருடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையில் அதிகமதிகமாக நிரப்ப நமக்குக் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுவோம்.