நானும் என் வகுப்பு நண்பர்களும் அவ்வப்போது பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவை தவிர்த்திருக்கிறோம், ஆனால் நாங்கள் எல்லோரும், எப்பொழுதுமே வருட கடைசித் தேர்வுக்கு முன் உள்ள வாரத்தில் பேராசிரியர் கிறிஸ் அவர்களின் சொற்பொழிவை தவறாமல் கவனிப்போம். அந்த நேரத்தில்தான் அவர் தான் பரீட்சைக்கு அமைத்த கேள்விகளைப்பற்றிய குறிப்புகளை தவறாமல் அளிப்பார்.
நாங்கள் பரீட்சை நன்றாக எழுதவேண்டும் என்று அவர் இதைச் செய்கிறார் என்று அறிந்துக்கொள்ளும்வரை அவர் ஏன் இதைச் செய்கிறார் என்று எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரிடம் உயர்ந்த தரமிருந்தது, அவைகளைச் சந்திக்க எங்களுக்கு உதவுவார். நாங்கள் செய்யவேண்டியதெல்லாம், அங்கு சென்று அவருடைய சொற்பொழிவை கேட்பது மட்டுமே. இதனால் நாங்கள் பரீட்சைக்கு நன்கு ஆயத்தப்படமுடியும்.
தேவனும் அப்படியே இருக்கிறார் என்று உணர்ந்தேன். தேவன் தம்முடைய மதிப்பளவை சமரசம் செய்வதில்லை. ஆனால் நாம் அவரைப்போல இருக்க வேண்டும் என்று ஆழமாக விரும்புவதால் நாம் அவருடைய மதிப்பளவை ஈடுசெய்ய பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
எரேமியா 3:11-14ல், சீர்கெட்ட இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அவரிடத்தில் திரும்பவேண்டும் என்று தேவன் வலியுறுத்துகிறார். ஆனால் அவர்கள் பிடிவாதமும் பலவீனமுமானவர்கள் என்று அறிந்து தேவன் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களுடைய பினமாற்றத்தை மன்னிப்பேன் (வச. 22) என்று வாக்குப்பண்ணி அவர்களை அறிவோடும் புத்தியோடும் நடத்த மேய்ப்பர்களைக் கொடுத்தார் (வச. 15).
நாம் எத்தனை பெரிய பாவத்தில் சிக்கியிருந்தாலும், தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் அவர் நம்முடைய சீர்கேடுகளை குணமாக்க ஆயத்தமாயிருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்முடைய பொல்லாத வழிகளை ஒப்புக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும்.
விசுவாசத்தோடும், கீழ்படிதலோடும் தேவனைப் பின்பற்ற எங்கே போராடிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களை குணப்படுத்தவும், உங்களுக்கு உதவி செய்யவும் தேவனிடத்தில் எப்படி கேட்பீர்கள்?
அன்புள்ள தேவனே, உம்மைப்போல நான் பரிசுத்தமாயிருக்க எனக்கு உதவிசெய்யும். உம்முடைய இரக்கமுள்ள அன்பிற்காக நன்றி. உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை சீர்கேட்டிலிருந்து குணமாக்கவும், என்னுடைய இருதயத்தை மறுரூபமாக்கவும், அவரை அனுமதிக்க எனக்கு உதவி செய்யும்.